வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

வியாழன், 25 மார்ச், 2010

ராஜகிரி: ஆபாச சினிமா துறையும், சீரழிக்கும் சீரியல் துறையும்.

ராஜகிரி: ஆபாச சினிமா துறையும், சீரழிக்கும் சீரியல் துறையும்.

வாழ்நாளை எப்படிக் கழித்தான்? வாலிபத்தை எதில் ஈடுபடுத்தினான்? செல்வத்தை எப்படி சம்பாதித்து, எவ்வழியில் செலவு செய்தான்? கற்றவைகளில் எதைச் செயல்படுத்தினான்? என ஐந்து விஷயங்கள் பற்றி விசாரிக்கப்படாத வரை மறுமை நாளில் எந்த மனிதனின் பாதமும் தன் இறைவனிடமிருந்து நகர முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத்(ரலி) நூல்: திர்மிதி (2531)


ஒவ்வொரு விஞ்ஞானத்தின் முன்னேற்றத்திலும் எவ்வளவு நன்மை இருந்தாலும் அதைவிடத் தீமைகளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. நாம் பயன்படுத்தும் முறையைப் பொருத்துதான் அது நன்மையானதா? அல்லது தீமையானதா? என அறிய முடிகிறது. இதில் மின்னணு ஊடகங்கள் (Electronic Media) என்று சொல்லப்படும். வானொலி (Radio), ஒலிப்பதிவு (Recording), திரைப்படம் (Film), தொலைக்காட்சி (Television), போன்றவை குறிப்பிடத்தக்கது. கல்வி, தொழில் நுட்பம், தகவல் தொடர்பு, ஆன்மீகம் போன்ற நன்மைகளை இதன் மூலம் நாம் பெற முடியும். ஆனால் இந்த நன்மையான காரியங்களில் இத்துறை பயன்படுவதைவிட ஆபாசம், விரசம், கொலை, கொள்ளை போன்ற தீய செயல்களில்தான் இத்துறை முனைப்புக் காட்டுகிறது. குறிப்பாக திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிகளில் நாம் பெறும் நன்மையை விட தீமைகள்தான் ஏராளம். இதன் பாதிப்புக்கள் குக்கிராமம் முதல் முன்னேறிவிட்ட பெரு நகரங்கள் வரை வியாபித்திருக்கிறது.

சினிமாவும் தொலைக்காட்சியும் வீட்டின் எஜமானாகி பலரின் வழிகாட்டியாகவும் மாறியுள்ளது. ஆக்கிரமிப்பால் சமூக ஒழுக்க மாண்புகள் உலகெங்கும் வெகுவாகச் சீரழிந்து வருகின்றது. முஸ்லிம்களைப் பொருத்தவரை இஸ்லாத்திற்கு முரணான பல்வேறு ஓழுக்கக் கேடகளிலும் மூழ்குவது இந்த கேடுகெட்ட தொலைக்காட்சி மூலமாகத்தான் நமது இளைஞர்களை சிந்தனை அடிமைத்துவத்திற்கும், ஒழுக்கச் சீரழிவிக்கும் அழைத்துச் செல்லும் இந்தத் தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களின் கோரப் பிடியிலிருந்து நாம் பாதுகாப்புப் பெற வேண்டும்.


பசுமரத்து ஆணி போல சினிமா, தொலைக்காட்சியில் சித்தரிக்கப்படும் போலியான நிகழ்வுகள் உண்மையான வாழ்வில் நடப்புகளாக்க பிஞ்சு நெஞ்சங்களில் பதிவாகின்றன. இதனால் இவர்களின் எதிர்காலம் பாழ்படும் அளவிற்கு நஞ்சு விதைகள் விதைக்கப்படுகின்றன. இந்த அபாயத்தை உணராமல் செயற்கைக் கோள் அலைவரிசைகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகி மனித வாழ்வின் நிலையை பெரும் அபாயத்திற்கு அழைத்துச் செல்கிறது.


சினிமாவுக்கும், தொலைக்காட்சிக்கும் அடிமையானவர்கள் போதைப் பொருள்களுக்கும் அடிமையானவர்கள் போன்றுதான் நடந்து கொள்கிறார்கள். ஆனால் தொலைக்காட்சி போதைப் பொருள்களை விட கொடூரமானது. அது மனிதனின் மனதை பாழாக்கி வன்முறை மீது நாட்டம் கொள்ள வைத்து தனி மனிதரையும், நாட்டையும், சமுதாயத்தையும் அது அழிக்கின்றது. தொலைக்காட்சி வளர்ந்து வரும் தலைமுறையின் மனநிலை மட்டுமின்றி உடல் நலனையும் வெகுவாகப் பாதிக்கின்றது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அளவுக்கதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் பள்ளி மாணவர்களால் குறைந்த பட்ச அளவுகூட உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட முடியவில்லை.


தொலைக்காட்சிப் பெட்டியின் முன் தவம் கிடக்கும் 5 வயதில் இருந்து 8 வயதுக் குழந்தைகளுக்கு இதய நோய்களில் ஏதாவது ஒன்று தாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

1960 களில் இருந்த தொகையைவிட 1990 களில் மிதமிஞ்சிய உடல் பருமன் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் உடல் ரீதியாக எவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் முடங்கிக் கிடப்பதும் தான் காரணம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


பெரியவர்களின் அந்தரங்க நடவடிக்கைகளெல்லாம் சிறுவர்களுக்கு அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் சமூக துரோகிகளாகவும் தொலைக்காட்சி விளங்குகிறது. பெரியவர்கள் சண்டை போட்டுக் கொள்வதையும், மனமுடைந்து கண்ணீர் விடுதல், கொலை, பாலியல் உறவுகள் கொள்வது மற்றும் வன்முறைகள் போன்றவற்றை குழந்தைகள் தொலைக்காட்சிகளில் காண்கிறார்கள். பெரியவர்களின் பொறுப்பற்ற ஒழுக்கக் கேடான வாழ்க்கைகளை தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் பார்க்கும் குழந்தைகள் அவர்களை தவறுகளுக்கு முன்னுதாரணமாக்குகிறார்கள். பெரியவர்களின் அந்தரங்கங்கள் அம்பலப்படுத்தப்படுவதினால் குழந்தைகள் கள்ளம் கபடமற்ற தன்மையை இழக்கின்றனர்.


இன்று சமுதாயம் எந்த அளவிற்குச் சீர் கேடுகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றால் நடிகர், நடிகைகள் அணிந்த உடைகளைப் போன்று உடுத்துவதிலும், அவர்களைப் போன்று சிகை அலங்காரம் செய்து கொள்வதிலும் இன்னும் Girl friend & Boy friend கலாச்சாரம், ராக்கிங், ஈவ்-டீசிங், டேட்டிங் (Dating) என்ற பெயரில் ஹோட்டல்களில் இளம் ஆணும், பெண்ணும் சந்தித்துக் கொள்ளுதல் போன்ற மானக்கேடான செயல்பாடுகளை மேற்கத்திய கலாச்சாரம் என்ற போர்வையில் நமது இளைஞர்களை மூளைச் சலவை செய்யப்பட்டு திணித்து சமூகச் சீர் கேடுகளுக்கு காரணமாக இருப்பது இந்த தொலைக்காட்சி மற்றும் சினிமாத் துறை அல்லவா? கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் அரைகுறை ஆடைகள் அணிவதற்கு அடிகோலியவை இந்த சின்னத் திரையில் வரும் MTV – V Channel போன்ற மட்ட ரக சானல்கள் அல்லவா? மேற்கத்திய மட்டமான நாகரீகத்தை(?) கற்றுக் கொடுக்கும் இந்த கேடுகெட்ட ஊடகங்களினால் எத்தனையோ பள்ளி மாணவிகளின் கள்ளத்தனமான கருத்தரிப்புக்கும், கருக்கலைப்புக்கும் உள்ளாகின்றனறே!


“வளர் இளம் பருவத்திடம் ஓடிப்போகும் கலாச்சாரம் பரவலாகக் காணப்படுவதற்கு சின்னத் திரைத் தொடர்களும், வண்ணத்திரைகளும் தான் காரணம். பெரும்பாலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில்தான் இந்த ஓடிப்போகும் நிகழ்வு நடைபெறுகிறது. வறுமையும், பண்பாட்டுச் சீரழிவும் காணாமல் போனால்தான் இந்த சமுதாயத்தில் ஓடிப்போகும் கலாச்சாரம் இல்லாத நிலை உருவாகும்” நல்ல மனிதர் ஒருவர் சினிமாவை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பத்திரிக்கையில் விமர்சித்தது


படித்த இறைவனை வணங்க வாருங்கள் அழைத்தால் "நேரமில்லை" என்று கூறும் நம் சகோதரர்கள் சினிமாவும், டி.வியும் பார்ப்பதற்கு தன்னையே அறியாமல் நேரம் ஒதுக்கிக் கொள்வதைப் பார்க்கின்றோம்.


மொத்தத்தில் இந்த சினிமா, தொலைக்காட்சி மீடியாக்களினால் மனிதன் பெரு நஷ்டத்திற்கு ஆளாகின்றான். மானக்கேடான காரியங்கள் செய்யவும் முனைகின்றான்


அல்லாஹ் தன் திருமறையில்...
நிச்சயமாக, அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும் உறவினர்களுக்குக் கொடுப்பதைக் கொண்டும் ஏவுகின்றான். அன்றியும் மானக்கேடான காரியங்கள், பாவமான காரியங்கள், அக்கிரமங்கள் ஆகியவற்றை விட்டும் உங்களை விலக்குகின்றான். நீங்கள் நினைவுகூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கின்றான். (16:90)

எனவே அல்லாஹ் மானக்கேடான காரியத்தை விலக்குகின்றான். இந்த மானக்கேடான அத்தனை ஒழுக்கக் கேடுகளையும் பொதிந்து தரக்கூடிய இந்த தரங்கெட்ட மீடியாக்கள் இவ்வுலக வாழ்க்கையை அலங்கரித்துக் காட்டுகின்றன. இன்பத்தை ஊட்டுவது போன்ற போலியை ஏற்படுத்துகின்றன. மறுமையை மறுக்கச் செய்கின்றன.

வல்லோன் வான்மறையில் "நிச்சயமாக செவிப்புலனும், பார்வையும், இதயமும் அவற்றின் செயல்கள் பற்றி மறுமையில் கேள்வி கேட்கப்படும்"

எனவே பொழுது போகவில்லை என்று போலியான இந்த தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் நேரத்தை வீணடிப்போரை அல்லாஹ் வன்மையாக எச்சரிக்கை செய்கின்றான். மறுமையில் அவர்கள் கண்களையும், செவிகளையும், இதயத்தையும் இறைவன் விசாரிப்பான். இந்த உலகத்தின் மயக்கும் இன்பத்திற்கு நாம் பலியாகிவிடக்கூடாது. மறுமைதான் நிலையானது, என்று உணாந்து போலியான இன்பம் தரக்கூடிய தொலைக்காட்சி மற்றும் சினிமாத் துறையை உடனே புறக்கணித்து நிரந்தர இன்பத்தை நோக்கி நம் கால்கள் நடைபோடட்டும். மறுமையில் நரக நெருப்பை விட்டு நம்மை வல்ல இறைவன் பாதுகாக்கட்டும்.


நன்றி: இஸ்லாம்கல்வி.காம், மற்றும் நண்பர்களின் இணையத்தளங்கள்

0 கருத்துகள்:

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online