குர்பானி
குர்பானி
அல்லாஹுத்தஆலாவின் நெருக்கத்தை பெருவதற்காக நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் காட்டிய வழிமுறையில் கால்நடைகளில் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில்) ஏதாவது ஒன்றை அறுத்து பலியிடுவதற்கு குர்பானி என்று கூறப்படும்.
இறைவன் நபி இப்ராஹீம்(அலை) அவர்களை சோதிக்க நாடி, அவர்களது பாச மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுத்து தியாகம் செய்ய கட்டளையிட்டான். இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட அவ்விருவரைப் பற்றி தனது திருமறைக் குர்ஆனில் ……
“என்னருமை மகனே! நிச்சயமாக நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாய் மெய்யாகவே கனவில் கண்டேன்; ஆகையால் நீ என்ன கருதுகிறாய்? என்று சிந்திப்பாயாக!” என்று கூறினார். (அதற்கு) ”என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடி செய்யுங்கள். இன்ஷாஅல்லாஹ் பொறுமையாளர்களில் உள்ளவனாக என்னை நீங்கள் காண்பீர்கள்” என்று அவர் கூறினார். (37;102)
இருவரின் துணிவையும் ஏற்றுக்கொண்ட இறைவன், இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டை பலியிடச் செய்தான்.
வலுப்பமான ஓர் ஆட்டை (பலியிடப்படவிருந்த) அவருக்குப் பகரமாக்கிக் கொடுத்தோம். (37;107)
குர்பானி ஓர் கடமை:
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதல் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தாகிய நமக்கு ‘குர்பானி’ கடமையாக்கப்பட்டது.
அல்லாஹ் தன் அருள்மறை குர்ஆனில்………
ஆகவே, உம்முடைய ரப்பை தொழுது, (அவனுக்காக) குர்பானி கொடுப்பீராக! (108;02) என்று கட்டளையிட்டுள்ளான்.
மேலும், நபி(ஸல்) அவர்கள், கருப்பு நிறம் கலந்த கொம்புள்ள இரண்டு வெள்ளை ஆடுகளை தங்களது திருக்கரத்தால் அருத்துப் பலியிட்டார்கள். முதல் ஆட்டை அறுத்த போது, அல்லாஹ்வே! இது முஹம்மதாகிய எனக்கும், என் குடும்பத்தாருக்காகவும் என்றார்கள். பின்பு இரண்டாவதை அறுத்தபோது, இது எனது உம்மத்(சமுதாயத்திற்)காக என்று துஆச் செய்தார்கள்.
குர்பானி கொடுக்கத் தகுதியானவை:
ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் (ஆடு,மாடு,ஒட்டகம் போன்ற) கால்நடைப்பிராணிகளிலிருந்து அவர்களுக்கு அவன் உணவாக கொடுத்தவற்றின் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் கூறுவதற்காக, குர்பானியை நாம் ஏற்படுத்தினோம். (22;34)
மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் ஏழு நபர்கள் கூட்டு சேர்ந்து கொடுக்கலாம். ”ஆடு” தனி நபராக கொடுக்க வேண்டும்.
ஒட்டகம் ஐந்து வயது பூர்த்தியடைந்ததாகவும், ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்ததாகவும் இருக்க வேண்டும்.
குர்பானி கொடுக்கும் நேரம்:
துல்ஹஜ் பிறை-10 (ஹஜ்ஜுப் பெருநாள் அன்று) சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னாலிருந்து …, பிறை – 13 வரை நான்கு நாட்கள் கொடுக்கலாம்.
பெருநாள் தொழுகைக்கு முன்பு குர்பானி கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அல்லாஹ் குர்ஆனில் ……..
“ஆகவே, உம்முடைய ரப்பை தொழுது, (அவனுக்காக) குர்பானி கொடுப்பீராக” (108;02)
”நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய அறுப்பு(குர்பானியு)ம், என் வாழ்வும், என் மரணமும் அகிலத்தின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்”, என்று (நபியே!) நீர் கூறுவீராக! (6;162)
என்று முதலில் தொழுகையையும், அடுத்ததாக குர்பானியையும் குறிப்பிட்டுள்ளான்.
பராஉ இப்னு ஆஜிப்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுகைக்குப்பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அதில்) “யார் நமது தொழுகையைத் தொழுது, (அதன் பின்) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தனக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவராக மாட்டார்” என்று கூறினார்கள். (புகாரி)
குர்பானி கொடுப்பவர் பின்பற்ற வேண்டியவை:
குர்பானி கொடுக்க நாடி விட்டால், துல்ஹஜ் பிறை பிறந்தது முதல் குர்பானியை நிறைவேற்றும் வரை, நகம் வெட்டுவதையும் முடிகளை நீக்குவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு ஸலமா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க நாடினால் துல்ஹஜ் பிறை பிறந்தது முதல் அதை (குர்பானியை) நிறைவேற்றும் வரை தனது முடி, நகம் ஆகியவற்றை களைவதை தவிர்த்துக் கொள்ளட்டும். (முஸ்லிம்)
குர்பானி கொடுக்கும் வரை எதுவும் சாப்பிடாமல் இருந்து குர்பானி இறைச்சியை முதல் உணவாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுப் பெருநாள்) தொழுகையிலிருந்து திரும்பும் வரை உண்ணமாட்டார்கள். பின்னர், குர்பானி இறைச்சியை உண்பார்கள். (ஜாதுல் மஆது)
குர்பானியின் நோக்கம்:
(குர்பானி பிராணிகளாகிய) அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ ஒருக்காலும் அல்லாஹ்வை அடைவதில்லை; என்றாலும், உங்களிலுள்ள தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும். (22;37)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக