வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

இஸ்லாத்தில் நோன்பு

இஸ்லாத்தில் நோன்பு  என்பது முஸ்லிம்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும்வரை இறைவன் திருப்தியை நாடியவர்களாக உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடல் என்பவற்றை விட்டும் நீங்கி இருப்பதைக் குறிக்கும். இஸ்லாத்தின் மூலாதாரமான அல்குர்ஆன் இதனைப் பின்வரும் வசனங்கள் மூலம் கடமையாக்கியுள்ளது. அதாவது (விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போலவே, உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதிக்கப்பட்டிருக்கிறது. (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம்) (அல்குர்ஆன்:2:183)


இனி முஸ்லிம்கள் நோற்கும் நோன்பு சம்பந்தமான தெளிவை இதன் மூலம் அறிந்து கொள்ள முயற்சிப்போம்.

குறிப்பாக மேலே குறிப்பிட்டுள்ள அல்குர்ஆன் வசனம் முஸ்லிம்களுக்கு நோன்பு ஏதும் புதிய கடமையல்ல என்பதனையும், கடந்த காலங்களில் இறைவனால் அறிமுகப்படுத்தப்பட்ட இறை சட்டங்களைப் பின்பற்றிய சமூகத்தவர்களுக்குக் கூட கடமையாக்கப்பட்டிருந்தது என்ற உண்மையை அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். என்றாலும், நோன்பின் சட்டங்கள், அதன் எண்ணிக்கை, அது நீடிக்க வேண்டிய நேரம் ஆகியவற்றில் ஒரு மார்க்கத்திற்கும் இன்னொரு மார்க்கத்திற்கும் வேற்றுமை இருந்து வந்திருக்கின்றது. இன்றும்கூட பெரும்பாலான மார்க்கங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் நோன்பு இருக்கத்தான் செய்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். மக்கள் தம் சார்பில் பலவற்றை இணைத்து அதன் வடிவத்தைக் கெடுத்து இருந்தாலும் சரி! மேலும் இவ்வாறு விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் மனித உள்ளங்கள் ஓய்வு பெறுவதுடன், அதனை ஏற்றுக் கொண்டு அதற்குக் கட்டுப்படுவதும் இலேசாக இருக்கும். மேலும் ஏனையவர்களுக்கும் நோன்பு அனுஷ்டிப்பது கடமையாக்கப்பட்டிருந்தது என்ற மனத் திருப்தியினால் கஷ்டமானதாகத் தோன்றவும் மாட்டாது.

ஒரு முஸ்லிம் நோன்பு நோற்பதன் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு அதனை கடமையாக்கிய இறைவனே தெளிவான பதில் அளிக்கின்றான். அதாவது (நீங்கள் இறைபக்தி உள்ளவர்களாக ஆவதற்கே) என்பதுவே அதுவாகும். எனவே ஒரு முஸ்லிம் நோன்பு நோற்பதன் மூலம் இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதையே கருத்திற் கொண்டிருப்பான்.

வெறுக்கப்பட்ட, இழிவான பண்புகளுக்கிடையில் நோன்பு பாதுகாவலாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் வழங்கப்படும் பாதுகாவலாகும். மேலும் இதனால் சமூகத்தில் சிறந்த பண்புகளுடன் கூடிய மனிதர்கள் உருவாகவும் வாய்ப்பேற்படுகின்றது. இதுபற்றி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது (நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் யாராவது நோன்பு நோற்றிருக்கும் நிலையில் தீய வார்த்தைகள் பேசவோ, உடலுறவில் ஈடுபடவோ, தீய செயல்களில் ஈடுபடவோ வேண்டாம். யாராவது உன்னுடன் சண்டையிட்டால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி, நான் நோன்பாளி எனக் கூறுவீராக!) என்றார்கள். மேலும் நோன்பு ஒரு கேடயமாகும். அதாவது பாதுகாப்பாகும். அதன் பொருளாவது நோன்பாளி நான் நோன்பு நோற்பது தனது மிருகத்தனமான தீங்குகளை விட்டும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே என நம்புவதாகும். தான் நோன்பாளி எனக் கூறுவதன் மூலம் தான் மானிடப் பண்புகளுடன் இருப்பதையும், மிருகத்தனமான பண்புகளில் இல்லை என்பதையும் ஞாபகப்படுத்துகின்றான். தன்னை தன் உள்ளத்தின் தீங்குகளை விட்டும் பாதுகாத்து, தனது தீங்குகளை விட்டும் தனது சமூகத்தைப் பாதுகாக்கும் போது இறைவனின் திருப்தியைப் பெற்றுக் கொண்டு இறை பக்தியாளர்களில் நின்றும் ஆகிவிடுவார்.

இவ்வாறு நோன்பாளியின் உள்ளத்தில் தன்னை இறைவன் கண்காணித்துக் கொண்டிருப்பதான உணர்வை ஏற்படுத்தி மனிதன் பசியை, தாகத்தை, ஏனைய உணர்வுகளையும் விட்டுவிடுவது அவனுக்காகவே என்ற உள்ளுணர்வை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். மேலும் இஸ்லாம் மார்க்கம் போதிக்கும் அனைத்து கடமைகளும் அவனுடைய வாழ்வு முழுவதும் இறைவனுக்குச் செய்யப்படுகின்ற இறைவழிபாடாக மாறுமளவு அவனைத் தகுதியுள்ளவனாக ஆக்குகின்றது. இப்போது இதே நோக்கத்தை முன்னால் வைத்து நோன்பு எனப்படும் இந்த இறைவழிபாடு அந்த பெரிய இறைவழிபாட்டுக்கு மனிதனை எவ்வாறு தயார் செய்கிறது என நோக்குவோம்.

நோன்பு ஒரு மறைவான வணக்கம்.

நோன்பைத் தவிர்த்து ஏனைய இறை வழிபாடுகளெல்லாம் ஏதேனும் ஒரு விதத்தில் வெளிப்படையான செயல்களாலேயே நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் நோன்பு ஓர் இரகசியமான இறைவழிபாடாகும். நிறைவேற்றுகின்ற மனிதனையும் ஒரே இறைவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் தெரிய முடியாது. தனக்கு முன்னால் தனது ஆசைகளை, பசியை, தாகத்தை போக்கக்கூடிய அனைத்து வசதிகளும் இருந்தும் அவன் இறைவன் ஒருவனின் திருப்தியை நாடியவனாக அவற்றை விட்டும் நீங்கி மறைவான வணக்கமாக அதனை நிறைவேற்றி வருவது எவ்வளவு மேன்மையானது?


நோன்பு – உறுதியான நம்பிக்கையின் அடையாளம்.

நோன்புக்குறிய இந்தத் தனித்தன்மையை முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் சிந்தனை செய்யுங்கள். ஒரு மனிதன் உண்மையாகவே நோன்பு நோற்கின்றான். திருட்டுத்தனமாக அவன் சாப்பிடுவதுமில்லை. குடிப்பதுமில்லை. கடும் வெப்பத்தினால் தொண்டை வரண்ட நிலையிலும் அவன் ஒரு துளி நீரும் அருந்துவதுமில்லை. கடும் பசியினால் கண்பார்வைக் குன்றிப் போனாலும் அவன் ஒரு கவளம் உணவை உண்ண நினைப்பதுமில்லை. அந்த மனிதனுக்கு இறைவன் எல்லா மர்மங்களும் தெரிந்தவன் என்பதில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது! தன்னுடைய செயல்கள் முழு உலகத்திற்கும் மறைந்து விட்டாலும் இறைவனுக்கு மறைய முடியாது என்று எவ்வளவு உறுதியாக அவன் நம்புகிறான்!


மிகப்பெரும் சிரமங்களையெல்லாம் அவன் ஏற்றுக் கொள்கிறான். ஆனால் இறையச்சத்தால் தான் நோற்கின்ற நோன்பை முறிக்கும் எந்தக் காரியத்தையும் அவன் செய்வதில்லை என்றால், அவன் உள்ளத்தில் எப்படிப்பட்ட உறுதியான இறையச்சம் இருக்க வேண்டும்! மாதம் முழுவதிலும் குறைந்த பட்சம் 360 மணி நேரம் அவன் நோன்பு நோற்கிறான். இந்த இடைக்காலத்தில் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்வு பற்றி ஒரு வினாடி கூட அவனது மனதில் எவ்வித சந்தேகமும் தோன்றுவதில்லையென்றால், மரணத்திற்குப்பின் கிடைக்கும் நற்கூலிகள், தண்டனைகள் பற்றி அவனுக்கு எவ்வளவு திடமான நம்பிக்கை இருக்க வேண்டும்! மரணத்திற்குப்பின் வாழ்வு இருக்குமா? இருக்காதா? அதில் நற்கூலியும், தண்டனையும் உண்டா? இல்லையா? என்ரு அவன் மனதில் சிறிதளவாகிலும் சந்தேகம் ஏற்பட்டுவிட்டால், அவனால் தனது நோன்பை என்றைக்கும் நிறைவேற்றவே முடிந்திருக்காது. சந்தேகம் ஏற்பட்ட பிறகு இறைகட்டளையை செயல்படுதுவதற்கென்று எதையும் சாப்பிடக் கூடாது எதையும் அருந்தக் கூடாது எனும் எண்ணத்தில் மனிதன் நிலையாக இருப்பது அசாத்தியமான ஒன்று.

ஒரு மாதம் தொடர் பயிற்சி.


நோன்பின் மூலம் ஒவ்வொரு வருடமும் முழுமையாக ஒரு மாதத்திற்குத் தொடர்ந்தார்போல் முஸ்லிம்கள் இறை நம்பிக்கைக்கு இறைவன் தேர்வு வைக்கின்றான். இந்தத் தேர்வுகளில் மனிதன் எந்தளவு வெற்றி பெற்றுக் கொண்டே போகிறானோ, அந்த அளவு தான் அவனுடைய இறைநம்பிக்கை வெற்றி பெற்றுக் கொண்டே போகும். இது தேர்வுக்குத் தேர்வு போன்றது. பயிற்சிக்குப் பயிற்சி போன்றது.

அனைத்து மர்மங்களையும் இறைவன் நன்கு அறிகின்றான் என முஸ்லிம் உறுதியாக நம்புகின்றான். எனவே எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இறைக்கட்டளையை மீறுவதிலிருந்து விலகி நிற்கின்றான். யாரும் அவனைப் பார்க்காது இருந்தாலும் சரியே! மேலும் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்வின் நினைவு அவனுக்கு வந்து விடுகிரது. அன்றோ அனைத்து இரகசியங்களும் அம்பலமாகிவிடும். செய்யும் நன்மைக்கு நற்கூலியும், தீமைக்கு தண்டனையும் யாதொரு தயவு தாட்சண்யமும் இல்லாமல் கிடைக்கும் என்ற எதார்த்த உண்மையை அவர்கள் உணர்கிறார்கள். எனவே இறையச்சம் உள்ளவர்களாக திகழ முழு முயற்சி மேற்கொள்கிறார்கள்.

நீண்டதொரு பயிற்சி.


நோன்புக்கு மற்றொரு சிறப்புண்டு. அதாவது நீண்ட காலம்வரை தொடர்ந்தாற்போல் மார்க்கத்தின் சட்டத்திற்கு மனிதனை உட்படுத்துகின்றது நோன்பு. இஸ்லாத்தின் ஏனைய கடமைகளான தொழுகையின் நேரம் குறிப்பிட்டதொரு நேரத்தில் சில நிமிடங்களுக்கு மேல் போவதில்லை. ஸகாத் என்னும் ஏழைவரி ஆண்டு முழுவதும் ஒரே ஒருமுறை வருகிறது. ஹஜ் வாழ்வில் ஒரு முறை மாத்திரமே நிறைவேற்ற வேண்டும். இவற்றுக்கு நேர்மாற்றமாக நோன்பானது ஒவ்வொரு வருடமும் முழுமையாக ஒரு மாதம் வரை இரவிலும், பகலிலு்ம் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் சட்டதிட்டங்களைப் பின்பற்றும் பயிற்சியை அளிக்கின்றது. இந்த ஒரு மாதத்தில் பெற்ற பயிற்சியின் பலன் ஏனைய மாதங்களில் கிடைத்துக் கொண்டிருக்கும்.


சமத்துவத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.

இஸ்லாம போதிக்கும் நோன்பானது ஏழை, பணக்காரர்களுக்கிடையில் சமத்துவத்தைப் போதிக்கக் கூடியதாக உள்ளது. அது மிகச்சரியான நவீன சமதர்ம அமைப்பினது செயல்வடிவமாகக் காணப்படுவது இதன் மூலம் தெளிவாகின்றது. தங்களது வயிற்றுக்குள் கூட சமத்துவமான தன்மையை ஏற்படுத்தும் இஸ்லாம் போதிக்கும் கடமைகளில் ஒன்றாக இது இருக்கிறது. மேலும் இதன் மூலம் செயல் ரீதியான உணர்வை மனித உள்ளத்தில் ஏற்படுத்தி சரியான சமதர்மம் என்பது வெறுமனே உணர்வுகள் வேறுபட்டுக் காணப்படும் நிலையன்று. மாற்றமாக உணர்வுகள் சமமாக இருக்கும் என்பதை உணர்த்தக் கூடியதாகவும், பல்வேறு ஆசைகளை மனதில் வைத்து வாதாடிக் கொண்டிருப்பதை விட ஒரே விதமான உணர்வின்பால் அன்பு பாராட்டுவது தான் சிறந்தது என்பதை நோன்பு உணர்த்தி சமத்துவத்திற்கு வழிகாட்டுகின்றது.


மேற்குறிப்பிட்டுள்ள சமத்துவத்தின் அடிப்படையில் ஏழை, எளியவர்கள் மீது செல்வந்தர்கள் அன்பு, இரக்கம் காட்டுவதற்கு இந்நோன்பு வழிகாட்டுகின்றது. பொதுவாக மனித உள்ளங்களில் அன்பு, இரக்கம் என்பன கஷ்ட, துன்ப நிலைமைகளிலேயே தோன்றுகின்றன. இந்த வகையில் மனித உள்ளங்களில் அன்பை ஏற்படுத்துவதற்கான நடைமுறை ரீதியானதொரு வழிமுறையாக நோன்பு இருக்கின்றது. எப்பொழுதெல்லாம் பசித்த ஏழையின் மீது செல்வந்தனின் அன்பு ஏற்படுத்தப்படுகிறதோ அந்நேரங்களில் மனிதனுக்குள் அதன் செயற்பாட்டைக் காணமுடிகின்றது. இதனை அடிப்படையாக வைத்தே இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மிகவும் கொடை கொடுக்கக் கூடியவராக இருந்தார் எனக் குறிப்பிடப்படுகின்றது.


வழமையான பழக்கங்களை விட்டு தூரமாக்குவது.

சிலருக்கு நாளாந்த வழக்க வழக்கங்கள் வணக்க வழிபாடாக மாறி இருக்கின்றன. குறிப்பிட்ட நேரத்தில் உணவு கிடைக்கத் தவறினால் பசியேற்பட்டு அவர்களின் குணங்களே மாறிபோய் விடும். தேனீர், கோப்பி அருந்துதல், புகைத்தல் போன்ற வழக்கங்கள் உணவு உட்கொள்ளும் நிலையைக் கூட தேவையற்றதாக்குகின்றது. இத்தகையவர்கள் தங்களது பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டவர்களாகக் கணிக்கப்படுகின்றார்கள். யுத்தம் போன்ற ஏதாவது காரணத்தினால் இவர்களின் இந்த நாளாந்த பழக்க வழக்கங்கள் மாறுவதற்கு நிர்பந்திக்கப்பட்டால் கூட இவர்கள் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளும் மனப்பான்மையற்றவர்களாக இருப்பர். இங்கு நோன்பானது இத்தகையவர்களுக்கு சிறந்த பயிற்சியை வழங்கக் கூடியதாக இருக்கின்றது. இதன் மூலம் மனிதனின் விருப்பத்தையும், நாட்டத்தையும் உறுதியாக வைத்திருக்கவும் நோன்பு துணையாகின்றது. அதாவது மனிதன் சடத்துவமான போக்குகளுக்கு அடிமையாகாது, தனது உள உணர்வுகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து செயல்படுவதற்கு ஒரு சிறந்த பயிற்சியை நோன்பு வழங்குகின்றது.

உடல் நலனுக்கு வழிகாட்டல்.


மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கும், உடல் நலத்திற்கும் வழிகாட்டக்கூடியதாக நோன்பு இருக்கின்றது. மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் அவன் தொடர்ந்து உணவு உண்பதே காரணமாக அமைகின்றது. சுமார் பதினொரு மாதங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் மனிதனின் செரிமான தொகுதிக்கு நோன்பு ஒரு கட்டாய ஓய்வை வழங்கி உடம்பிற்கு ஏற்படக்கூடிய பல்வேறுபட்ட நோய்களையும் அது தடுக்கக் கூடியதாக உள்ளது. இதனையிட்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் நோன்பு நோற்பதன் மூலம் சுகதேகிகளாக மாறிக் கொள்ளுங்கள்) எனக் குறிப்பிட்டார்கள். எனவே நோன்பின் மூலம் உடலுறுப்புகள் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்க முடிகின்றது. இவ்வாறு உடல் ஆரோக்கியத்தைப் பேணி முஸ்லிம் பூரண உடல் ஆரோக்கியத்துடன் வாழ இந்நோன்பு வழிசெய்கின்றது. ஐரோப்பாவிலுள்ள சில வைத்தியசாலைகள் தமது சிகிச்சை முறைகளில் நோன்பு அனுஷ்டிக்கும் முறையைக் கையாள்வது உடல் நலத்திற்கு நோன்பு ஆற்றும் பங்கினை எமக்கு மேலும் தெளிவுபடுத்துகின்றது. எனவே இவ்வாறு நோன்பானது தனி மனித, சமூக, ஆன்மீக, உடல் ரீதியான பல்வேறு பலன்களை பெற்றுத் தருவதைக் காணக்கூடியதாக உள்ளது. மனைதனைப் படைத்த இறைவன் மனிதனுக்கு இதன் மூலம் நன்மையை நாடி, தன்னை நம்பிக்கைக் கொள்வோர் கட்டாயம் நோன்பு நோற்க வேண்டும் எனக் கட்டளைப் பிறப்பித்துள்ளான். மேலும் இஸ்லாத்தின் நெகிழ்ந்து கொடுக்கும் தனமையின் அடிப்படையில் நோன்பு காலங்களில் சிலருக்கு நோற்காதிருக்கவும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். புத்தி சுவாதீனமற்றவர்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், கடும் நோயாளிகள், நீண்ட தூரப்பிரயாணிகள், கர்ப்பவதிகள், குழந்தை இருக்கும் தாய்மார்கள் இதில் அடங்குவர். இவர்களுக்குத் தனி சட்டங்களை இஸ்லாம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இஸ்லாத்தின் தாராளத்தன்மைக்கு எடுத்துக் காட்டாகும்.


எனவே இத்தகைய நன்மைகளை, பலன்களைக் கொண்டுள்ள நோன்பினை நோற்பதன் மூலம் இவ்வுலகிலும், மரணத்திகுப் பின்னான நிலையான வாழ்விலும் நன்மைகளை அடைந்து சிறப்பான வாழ்க்கைக்கு வழியமைத்துக் கொள்வோமாக!

நன்றி: Islam Presentation Committee

புதன், 26 ஆகஸ்ட், 2009

ரமளானும் அல்குர்ஆனும்

மவ்லவி அல்ஹாஃபிழ் டி.எம். முஜிபுர் ரஹ்மான் சிராஜி – திருப்பூர்

நோன்பும் குர்ஆனும்


சங்கை மிகுந்த ரமளான் மாதம் நம்மிடையே வருகை புரிந்துள்ளது. குறைந்த காலத்தில் குறைந்த செயலின் மூலம் அதிகமான நன்மை களை நமக்கு பெற்றுத்தரும் மாதமாகும் இது. இம்மாதம் குறித்து அல்லாஹு தஆலா,

ரமளான் மாதம் எத்தகையது என்றால் அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியிலிருந்தும் சத்தியத்தையும் அசத்தியத்தை யும் பிறித்தறிவிக்க கூடியதிலிருந்தும் தெளிவான விளக்கமாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது.”

-அல்குர்ஆன் (2:185) என்று கூறுகிறான். அவ்வாறு ரமளானில் அருளப் பட்ட குர்ஆனைக் குறித்து அண்ணலார் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் பொழுது

“நீங்கள் அல்லாஹ்விடம் திரும்பிச் செல்வதற்கும் அவனிடம் நெருங்குவதற்கும் உதவியாக அவனிடமிருந்து வந்த குர்ஆன் ஷரீ பைத் தவிர வேறு சிறந்த பொருளை பெற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்கள் : ஹள்ரத் அபூதர் (ரளி) நூல் : ஹாகிம்

அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத்தரும் அற்புத வேதமான குர்ஆன் ஷரீபை அல்லாஹுதஆலா குர்ஆனின் அதிகமான வசனங் களை ரமளான் மாதத்தில் தான் இறக்கி வைத்துள்ளான். நோன்பை நமக்கு கடமையாக்க விரும்பிய அல்லாஹுதஆலா குர்ஆன் இறக்கி அருளப்பட்ட ரமளான் மாதத்தை நோன்பு மாதமாக தேர்ந்தெடுத்தான். குர்ஆனில் கூறப்பட்ட பெரும்பாலான விஷயங்களை மனிதன் உடனடி யாக செயல்படுத்தும் முகமாக குர்ஆன் அருளப்பட்ட ரமளான் மாதத்தையே நோன்பை நோற்க கடமையாக்கி இரவில் நின்று வணங்குவதையும் வலியுறுத்தினான். நோன்பு வைப்பதின் காரணமாக மற்ற மாதங்களில் தொழுகை மற்றும் இன்ன பிற விஷயங்களில் கவனக் குறைவாக இருக்கும் முஃமின்கள் ரமளான் மாதத்தில் தொழுகை மற்றும் தான தர்மங்கள் செய்வது என்ற நிலையில் முஃமின்கள் ஈடுபடுகின்றனர். குர்ஆன் கூறும் தொழுகை, தான தர்மங்கள், நற்செயல்கள் ஆகியவற்றை உடனடியாக அமல் செய்யும் விதமாக ரமளான் மாதம் அமைகிறது.

அனைத்தும் உள்ளடக்கிய அல்குர்ஆன்

குர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனைப்பற்றி சில விஷயங்களை நாம் நினைவு கூர்வோம். குர்ஆனில் அல்லாஹ் இம்மை, மறுமை மற்றும் அனைத்து விஷயங்களையும் கூறியுள்ளான். குர்ஆனில் அல்லாஹ் கூறாத விஷயங்களே இல்லை. இருப்பினும் அண்ணலார் (ஸல்) அவர்கள் குர்ஆனில் பொதிந்துள்ள விஷயங்களை ஐந்து அம்சங்களில் உள்ளடக்கி கூறுகிறார்கள்.


“புனித குர்ஆனில் ஐந்து விஷயங்கள் உள்ளன. 1. ஹலால் (ஆகுமாக்கப்பட்ட விஷயங்கள்) 2. ஹராம் (விலக்கப்பட்ட விஷயங்கள் 3. முஹ்கம் (தெளிவான மொழிநடை கொண்ட வசனங்கள்) 4. முதஷா பிஹாத் (மறைவான விஷயங்களான சுவனம், நரகம் அர்ஷ் போன்ற விஷயங்களை கூறும் வசனங்கள் 5. உதாரணங்கள் கூறும் வசனங்கள்.

இவ்வாறு குர்ஆனில் ஹலால் என்று கூறப்பட்டுள்ள விஷயங்களை ஹலால் என்று கருதுங்கள். ஹராமை ஹராமாக கருதுங்கள். கொள்கைகள் கோட்பாடுகள் சட்டங்கள் ஆகியவற்றை கூறும் முஹ்கம் வசனங்கள் படி செயல்படுங்கள். மறைவான விஷயங்களை சுவர்க்கம், நரகம், அர்ஷ் ஆகியவற்றை விபரிக்கும் முதஷாபிஹான வசனங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். அதனை துருவி ஆராய முற்படாதீர்கள். முந்தைய சமுதாயங்கள் அழிந்து மடிந்தது பற்றிய படிப்பினை தரும் சம்பவங்களில் மூலம் படிப்பினை பெறுங்கள்.

அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூஹூரைரா (ரளி) நூல்: மிஷ்காத்.

குர்ஆன் முழுவதிலும் அல்லாஹ் கூறியுள்ள விஷயங்களை அண்ணலார் (ஸல்) அவர்கள் ஐந்து அம்சங்களில் பொதிய வைத்து கூறிவிட்டார்கள். குர்ஆனில் வழிகாட்டுதல் படி வாழ்வது என்பது சிரமத்திற்குரிய விஷயமல்ல. விளங்க முடியாத வேதாந்தத்தையோ புரிய முடியாத தத்துவத்தை குர்ஆன் கூறிவிடவில்லை. மிக எளிதாக பாமரர்களும் புரிந்து கொள்ளும் விதமாக இலகுவான வழிகாட்டுதல் களைத்தான் குர்ஆன் முன் வைக்கிறது.

உதாரணமாக மனித வாழ்க்கையின் நோக்கமென்ன? என்ற வினாவை முன் வைத்தால் இன்று அறிஞர்கள், யோகிகள் தவத்திரு என்று கூறிக்கொள்பவர்கள் விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்கள் என்றால் ஜீவன், முக்தி, ஆன்மா என்றெல்லாம் கூறி நம்மை குழப்பி விடுவார்கள். ஆனால் குர்ஆன் மிகமிக இலகுவாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக விடை பகர்கிறது. மனித வாழ்வின் நோக்க மென்ன? தெரியுமா? “மனித இனம் இறைவனை வழிபட்டு வாழ வேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளான்” என ஒற்றை வரியில் திருக்குர்ஆன் (51:56) பதில் பகர்கிறது. குர்ஆனின் கருத்துக் களும் வழிகாட்டலும் இலகுவானது என்பதை அல்லாஹ்வே தனது குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான். :இந்த குர்ஆனை அறிவுரை பெறு வதற்காக திட்டமாக நாம் எளிதாக்கி வைத்துள்ளோம். எனவே அறிவுரை பெறுகிறவர் எவரேனும் உண்டா? (54:32) என்று அல்லாஹ் கேட்கிறான்.

பழங்கதை புத்தகமல்ல

திருக்குர்ஆனை ”வேதம்” என்றதும் அது பூர்வீகமான நூல் என்றதும் அதில் பழங்கதைகள் புராண இதிகாசங்கள் நிறைந்திருக்கும் என்று நாம் எண்ணி விடக்கூடாது. முற்காலம், தற்காலம் இனிவரும் காலம் ஏன் உலக அழியும் காலம் வரை உண்டான அனைத்து விஷயங்களை யும் அல்குர்ஆனில் காணலாம். அறிவியல் அற்புதங்களையும் குர் ஆனின் மூலமாக காணமுடியும். உதாரணத்துக்கு திருகுர்ஆன் கூறும் சில விஞ்ஞான சங்கதிகளை காணலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பூகோள வல்லுநர்கள் வானவியல் சம்பந்தமாக சில கருத்த்துக்களை குறிப்பிட்டனர். அதாவது “இந்த பிரபஞ்சம் நிபுலா என்ற பேரண்டத்தில் சேர்ந்திருந்தது. பின்பு அதிலிருந்து பிரிக்கப்பட்டது. அதன் பின்பு தான் பால்வெளி உருவாயின” என்று கூறினர்.

இந்த விஷயத்தை அல்லாஹு தஆலா சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே திருகுர்ஆனில் பதிவு செய்து வைத்துள்ளான். “நபியின் கூற்றை நிராகரிப்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வானங்கள் பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு நாம் அவற்றை தனித்தனியாக பிளந்தோம்.

-அல்குர்ஆன் (21:30)


தாவர வர்கத்திலும் ஜோடிகள் உண்டு

தாவர இனத்தைச் சார்ந்த பூக்கள், செடிகள், கனிகள் அனைத்திலும் ஆண்,பெண் என்ற இருபாலும் உண்டு. தாவரவியல் வல்லுநர்கள் இது குறித்து கூறும் பொழுது பூக்களில் “ஸ்டோமென்” (STOMEN) என்ற ஆண் இன அம்சமும், “ஓவன்ஸ்” (OVENS) என்ற பெண் இன அம்சமும் உண்டு. இவற்றிலிருந்து தான் கனிகள் உற்பத்தி ஆகின்றன என்று கூறு கின்றனர். அல்லாஹுதஆலா சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே இது குறித்து குர்ஆனில் பதிவு செய்து வைத்திருக்கிறான். “ஒவ்வொரு கனி வகை தாவரங்களின் ஜோடிகளையும் அல்லாஹ் படைத்துள்ளான்.” – அல்குர்ஆன் (13:3) என்று குர்ஆனில் கூறுகிறான்.

ஆணிகளாக சிகரங்கள்

பூமியின் அமைப்பு குறித்து பூமி ஆய்வாளர்கள் கூறும்போது பூமியின் தூரம் 3750 மைல்களாகும். நாம் வாழும் பூமிப்பகுதி சுமார் 30 மைல்கள் வரையிலான பகுதி மெலிதான இலகுவான பகுதிகளாகும். மெலிதான பகுதி என்பதால் அதிர்வுகள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே அதிர்வுகளும் பூமி அசைவுகளும் ஏற்படாவண்ணம் மலைகள் தாங்கிப் பிடிக்கின்றன. அதாவது பூமியில் அடிக்கப்பட்ட ஆணிகள் போன்று மலைகள் பூமியின் அசைவை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. இது நில ஆய்வாளர்களின் கூற்றாகும். ஆனால் அல்லாஹுதஆலா சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே இது குறித்து குர்ஆனில் கூறி உள்ளான். “நாம் பூமியை விரிப்பாக்கவில்லையா? மேலும் மலைகளை, முளைகளாக ஊன்றி வைக்கவில்லையா?

-அல்குர்ஆன் (78:6, 21:31)

இனிக்கும் கடல்நீர்

உலகில் பெரும்பாலான பகுதிகள் கடல்நீரால் சூழப்பட்டுள்ளது. அந்த கடலிலும் அல்லாஹு தஆலா பல அற்புதங்களை ஏற்படுத்தியுள்ள தாக குர்ஆனில் கூறியுள்ளான். கடலில் மத்திய தரைக்கடலும் அட்லாண்டிக் கடலும் “ஜிப்ரால்டர்” என்ற பகுதியில் இணைகின்றன. மத்திய தரைக்கடல் சங்கமிக்கும் இந்த இடத்தில் அதன் நீரின் தன்மை மற்றும் சுவை மாறுபடுவதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறிகிறார்கள். இவ்வாறு இருகடல்கள் சங்கமிக்கும் இடத்தில் கண்ணுக்கு புலப்படாத தடுப்பு போன்ற அமைப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தடுப்பை சைக்னாக் லைன் (PYCNOCLINE) பகுதி என்று கடல் ஆய்வாளர்கள் பெயரிட்டு அழைக்கிறார்கள். இவர்கள் தெரிவிக்கக் கூடிய இந்த விஷயத்தை அல்லாஹு தஆலா சுமார் 14 நூற்றாண்டு களுக்கு முன்பே குர்ஆனில் பதிவு செய்து வைத்துள்ளான்.

”அல்லாஹ் எத்தகையவன் என்றால் இரு கடல்களையும் ஒன்றாக கலந்திடச் செய்துள்ளான். இது இனிமையானது. மதுரம் மிக்கது. மற்றொன்று உப்பும் கசப்பும் நிறைந்தது. (இரண்டும் ஒன்றோடொன்று கலந்திடாத வண்ணம்) இரண்டுக்குமிடையே மீற முடியாத ஒரு தடுப்பையும் ஏற்படுத்தி உள்ளான்.”
-அல்குர்ஆன் (25:53)

திருகுர்ஆனில் புதைந்துள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த ஒரு நூலில் ஒரு அற்புத நிகழ்வை குறிப்பிட்டுள்ளார்கள். மத்திய தரைக்கடல் பகுதியில் “கப்தான் லாக் குஸ்ஸோ” என்ற பிரஞ்சு ஆராய்ச்சியாளர் கடலில் மூழ்கி ஆய்வு நிகழ்த்திக் கொண்டிருந்த போது திடீரென்று அவரின் முகத்தில் மாட்டியிருந்த முகமூடி சற்று விலகுகிறது. அப்போது கடல்நீர் சிறிதளவு அவரின் வாயினுள் சென்று விடுகிறது. கடல் நீரை சுவைத்த அவருக்கு பெரும் ஆச்சர்யம். காரணம் வாயினுள் புகுந்த நீர் உப்பு கரிக்காமல் இனித்தது. “இது என்ன வியப்பாக இருக்கிறது. கடல்நீர் இனிக்கிறதே ! என்று நினைத்து சற்று தள்ளி இன்னொரு இடத்தில் நீரை சுவைத்துப் பார்த்தார்.

ஆனால் அந்த நீர் உப்பு கரிப்பாக இருந்தது. பெரும் வியப்படைந்த “கப்தான்” அவர்கள் கடலில் மேலும் பல இடங்களில் ஆராய்ந்து பார்த்தார். பெரும்பாலான இடங்களில் கடல்நீர் உப்பு கரிப்பாக இருந்தாலும் சில இடங்களில் நீர் தித்திப்பாக இருந்தது. இருவகையான நீரும் கலந்தே கடலில் இருந்தாலும் இரண்டுக்கும் மத்தியில் ஒரு ”வகையான” தடுப்பு இருப்பதைப் போன்று உணர்ந்தார். தனது ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு வெளியில் வந்த கப்தான் இதைப் பற்றி யாரிடமாவது விசாரிக்க வேண்டும் என நினைத்தார். அப்போது தான் அவருக்கு பிரஞ்சு ஆய்வாளர் டாக்டர் மாரீஸ் புகைல் அவர்களின் நினைவு வந்தது. ( இந்த மாரிஸ் புகைல் என்பவர் உலகப் பிரசித்தி பெற்ற “பைபிலும் குர்ஆனும் விஞ்ஞானமும்” என்ற நூலை எழுதியவர் ) அவரிடம் தனது கண்டுபிடிப்பை ஆச்சர்யத்தோடு விபரித்தார். அப்போது அவர் “நான் சர்வசமய நூல்களையும் படித்து அதன் கருத்துக்களை ஆராய்ந்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். நீங்கள் சொல்கிற இந்த விஷயம் முஸ்லிம் சமய வேதமான அல்குர்ஆனில் (25:53, 35:12, 55:19,20) ஆகிய வசனங்களில் தெளிவான முறையில் சொல்லப்பட்டிருக்கிறது. தாங்கள் சொல்வதைப் பார்க்கும் போது 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருகுர்ஆனில் இவ் விஷயம் பதியப்பட்டுள்ளது என நினைக்கும்போது பெரும் வியப்பாக உள்ளது” என பதில் பகர்ந்தார். சுப்ஹானல்லாஹ் ! குர்ஆனின் அறிவியல் விஷயங்களால் எண்ணிப்பார்க்கும் போது கடலை விட ஆழமான கருத்துக்கள், அறிவியல் விஷயங்கள் குர் ஆன் தன்னிடம் புதைத்து வைத்துள்ளது. என்று உறுதியிட்டு கூறமுடியும். குர்ஆன் எனும் இந்த ஆழ்கடலில் மூழ்கி அதன் அரிய கருத்துக்கள் எனும் முத்தை எடுக்க இந்த ரமளான் மாதத்தை விட சிறப்பான மாதம் வேறென்ன இருக்க முடியும்?

தேன்,தேனீ, திருகுர்ஆன்

மனிதகுலத்துக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அற்புத நோய் நிவாரணி தேன் என்பதில் இருகருத்து இருக்க முடியாது. அண்ணலார் (ஸல்) அவர்கள் தனது மருத்துவ வழிகாட்டுதலில் (திப்பநபவி) அதிகமான இடங்களில் தேனைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். மருத்துவத்துறைகள் ஒப்பற்ற இடத்தை பிடித்துள்ள இந்த தேனை உருவாக்கும் தேனியைப் பற்றியும் ஆய்வாளர்கள் ஆய்ந்து வந்துள்ளார்கள். அவர்களில் “வான் பிரிஸ்க்” என்ற ஆய்வாளர். தேனீ பற்றி குறிப்பிடும் போது மலரி லிருந்து தேனீ அதன் சாற்றை உறிஞ்சி அதனை உற்பத்தி செய்கிறது. இவ்வாறு தேனீ சாறு கிடைக்கக்கூடிய மலர்களை கண்டால் உடனே அது திரும்பிச் சென்று மற்ற தேனீக்களுக்கும் குறிப்பிட்ட மலர்களை யும் அது இருக்கும் பகுதிகளையும் தெளிவான முறையில் விபரிப் பதாக குறிப்பிடுகிறார். இவ்வாறு அறிவிப்புச் செய்யும் தேனீயும் தேனை சேகரிக்க செல்லும் தேனீக்களும் அனைத்தும் பெண் தேனீக்கள் தான் என்றும் தன் ஆய்வில் குறிப்பிடுகிறார். இந்த விஷயங்களை அல்லாஹு தஆலா தனது குர்ஆனில் தெளிவான முறையில் குறிப் பிடுகிறான்.

“உம்முடைய இறைவன் தேனீக்கு “மலைகளிலிருந்தும் மரங்களி லிருந்தும் ( மனிதர்களாகிய) அவர்கள் கட்டுகின்ற (தேன்கூடு முதலிய) வற்றிலிருந்தும் வீடுகளை நீ அமைத்துக்கொள்?” என்ற உள்ளுணர்வை ஏற்படுத்தினான். பிறகு எல்லாக்கனி மலர் வகைகளிலிருந்தும் நீ உணவருந்தி உன்னுடைய இறைவனின் எளிதான வழிகளில் நீ புகுந்து செல்வாயாக ! என்றும் உள்ளுணர்வை ஏற்படுத்தினான்.

அல்குர்ஆன் (16:68) இந்த ஆயத்தில் அல்லாஹ் தேனீயைப் பற்றி குறிப்பிடும் பொழுது ”நீ சாப்பிடு” நீ நுழைந்து கொள்” என்ற அர்த்தத்தை பொதிந்துள்ள “குலீ” “ஃபஸ்லுகீ” என்ற வாசகத்தை கூறி யுள்ளான். இந்த வாசகம் பெண்பாலிடம் உபயோகப்படுத்தும் வார்த்தை களாகும். இதன்மூலம் அல்லாஹுதஆலா தேனைத் தேடிச் சென்று மலர்களின் சாறுகளை சேகரிக்கும் தேனீக்கள் பெண் தேனீக்கள் தான் என்ற விஷயத்தையும் தெரியப்படுத்துகிறான். தற்கால ஆய்வில் அறியப்படுகிற விஷயத்தை சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே அல்குர்ஆன் பதிவு செய்து வைத்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அல்லவா !

மேகம் கருக்கிறது மழை வரப்பார்க்கிறது

பிரபஞ்சத்தில் அல்லாஹ் எவ்வளவோ ஆச்சரியமான விஷயங்களை வைத்திருப்பதைப் போன்று வான் மண்டலத்திலும் அல்லாஹ் ஆச்சர்யங்களை வைத்துள்ளான். அவைகளில் ஒன்று மழை பெய்வது. நீலவானில் திடீரென மேகங்கள் ஒன்று சேர்ந்து கருத்துப்போய் மழை பொழிய ஆரம்பிக்கிறது. நீரியல் ஆய்வாளர்கள் இது குறித்து கூறும் போது “காற்றுதான் மேகங்களை ஒன்றிணைத்து – குளிர்வித்து மழை பொழிய வைக்கிறது.” என கூறுகிறார்கள். இதை நாம் செயற்கையாக வும் செய்ய முடியும். மழை பொய்த்துப் போய் வறட்சி ஏற்படும் கால கட்டத்தில் விமானத்தின் மூலம் ரசாயணப் பொருட்களைத் தூவி மேகங்களை செயற்கையாக குளிரவைத்து மழை பொழிய வைக்க முடியும் என்று கண்டுபிடித்து அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றார் கள். ஆக மேகங்களை காற்று ஒன்றிணைத்து குளிர்விப்பதால் மழை பொழிகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இக்கருத்தை அல்லாஹுதஆலா குர்ஆனில் முன்பே பதிய வைத்துள்ளான்.


“காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாம் அனுப்பி வைத்தோம். பிறகு வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி வைத்து அதனை உங்களுக்கு நாம் புகட்டினோம்.”

-அல்குர்ஆன் ( 15:22 )


இவ்வாறு அல்லாஹுதஆலா காற்றின் மூலம் மேகங்களை குளிர வைத்து மழை பொழிய வைப்பதை குறித்து அல்லாஹுதஆலா திரு குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான்.

அல்லாஹுதஆலா திருகுர்ஆனின் மூலம் மனித சமுதாயத்தின் முழு வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை நிரூபிப்பதைப் போன்று தற்கால நவீன அறிவியல் விஷயங்களையும் சுமார் 14 நூற்றாண்டு களுக்கு முன்பே தன்னில் கொண்டுள்ளது என்பதை விபரிப்பதற்காகத் தான் மேற்கண்ட ஆய்வு விஷயங்களை நாம் பதிவு செய்துள்ளோம். இது போன்று எண்ணற்ற நவீன கண்டுபிடிப்பு விஷயங்களை பற்றியும் குர்ஆன் தெரிவிக்க காத்திருக்கிறது. எனவேதான் அல்லாஹ் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா? “ – அல்குர்ஆன் ( 4: 82 ) என்று கேட்கிறான்.

குர்ஆனும் நாமும்

மனித சமுதாயத்திற்கு அவன் சார்ந்த அனைத்து துறைகளுக்கும் முழு வழிகாட்டிய அல்லாஹ்வால் அருளப்பட்ட குர்ஆனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? குர்ஆனை அது ஏதோ சடங்கு சம்பிரதாயங்களை போதிக்கும் நூல் என்பதைப் போன்று பள்ளிவாசல் களிலும் வீட்டில் ஒரு பெட்டியிலோ உரையிலோ போட்டு வைத்து விடுகிறோம். யாராவது இறந்து விட்டால் குர்ஆனின் ஞாபகம் நமக்கு வருகிறது. அதை ஓதி இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பித்துவிட்டால் – அத்துடன் குர்ஆனோடு நம்முடைய தொடர்பு முடிந்து விட்டது என்ற நிலையில் நாம் உள்ளோம். அஸ்தஃபிருல்லாஹ். குர்ஆனுடைய வழி காட்டுதலை மனித சமுதாயம் அலட்சியப்படுத்தியதால்தான் பாவங் களும், தீமைகளும் பல்கிப் பெருகிப் போய் உலகம் பெரும் பிரச்சனையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. உணவுப் பற்றாக்குறை. பணவீக்கம் – அத்தியாவசியப்பொருள்கள் விலையேற்றம். உலகம் வெப்ப மயமாகுதல் நாட்டுக்கு நாடு அரசியல் குழப்பங்கள். இன்னும் பல பிரச்சனைகள். இவைகளெல்லாம் ஏன்? ஏன்? குர்ஆன் அதற்கு பதிலுரைக்கிறது.


“மனிதர்களுடைய கைகள் சம்பாதித்த (கெடுதலான) வற்றின் காரணத்தால் தரையிலும், கடலிலும் (அழிவு) குழப்பம் பரவி விட்டது. அவர்கள் செய்ததில் சிலதை அவர்களுக்கு அவன் சுவைக்கச் செய் வதற்காக (இவ்வாறு செய்கிறான். இதனால் பாவங்களிலிருந்த) அவர்கள் திரும்பி விடக்கூடும்.”

-அல்குர்ஆன் ( 30:41 )

மனிதர்களுக்கு மனிதர்களே தேடிக்கொண்ட வினைகள் தான் உலகில் தற்போது நிகழும் சூழ்நிலைகள் என குர்ஆன் தெளிவாக பதிலுரைத்து விட்டது. அது போன்று முஃமினானவர்களுக்கு மத்தியில் நிகழக்கூடிய பிரச்சனைகள் பிளவுகள் இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியில் நிகழ்ந்துள்ள கருத்து வேறுபாடுகள், இஸ்லாமிய நாடுகளை நோக்கி ஐரோப்பிய நாடுகள் போர் தொடுக்கும் சூழ்நிலைகள் இவை களேல்லாம் எதனால்? ஏன்? இதற்கும் குர்ஆன் தெளிவான விடை தருகிறது.

“முஃமின்களே ! உங்களுக்கிடையில் நீங்கள் பிணங்கித் தர்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் கோழைகளாகி விடுவீர்கள். உங்களுடைய பலம் குன்றி விடும். – அல்குர்ஆன் (8:46)


முஃமின்கள் குர்ஆனின் வழிகாட்டுதல்களை புறந்தள்ளியதின் காரணமாக சர்வர்தேச இஸ்லாமிய சமுதாயத்திடம் கருத்து வேறுபாடு, பிளை, உண்டானது. அதனால் பிற சமுதாயத்தின் பார்வையில் இஸ்லாமிய சமுதாயத்தைப் பற்றி காழ்ப்புணர்ச்சியும் வெறுப்புணர்வும் தான் ஏற்பட்டுள்ளது. “உயர்வான உம்மத்” என குர்ஆனால் போற்றப்பட்ட சமுதாயம் கேவலப்பட்டு நிற்பதற்கு காரணம் குர் ஆனின் வழிகாட்டுதலை கைவிட்டது தான் காரணம்.

என்ன செய்ய வேண்டும் ?

உலகம் முழுவதும் மனித சமுதாயத்திடம் குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்திடம் சுபிட்சமும், மகிழ்ச்சியும் செழிப்பும் மலர வேண்டும் என்றால் குர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனுட னான நம் தொடர்பை வலுப்படுத்த வேண்டும். “சடங்கு நூலாக” திரு குர்ஆனைப் பயன்படுத்துவதை விட்டு விட்டு நம் வாழ்வின் அஸ்தி வாரமாக குர்ஆனை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உலகின் அனைத்து மொழிகளிலும் திருகுர்ஆன் மொழிபெயர்ப்பு விரிவுரை களை நூற்களாகவும் குறுந்தகடு ( ) களாகவும் வெளிவந்துள்ளது. அர்த்தமும் விளக்கமும் புரிந்து குர்ஆனை ஓதி – விளங்கி, நமது வாழ்விலும் நமது சந்ததியினரின் வாழ்விலும் குர்ஆனின் வழிகாட்டு தல்களை கொண்டு வர வேண்டும். பின்பு அந்த வழிகாட்டுதல்களை பிறருக்கும் எத்தி வைக்க வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் திருகுர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனை விளங்கி அதன் வழிகாட்டுதல்படி வாழ்க்கை வாழ நமக்கு வழிகாட்டுவானாக !



நன்றி : குர்ஆனின் குரல் மாத இதழ்



நாவைப் பேணி, பாவமன்னிப்புக் கோருவோம்!‏

ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)


மாதங்களிலேயே மிகச்சிறந்த மாதமாக புனிதமிகும் ரமலான் மாதம் திகழ்ந்து வருகிறது. இம்மாதத்தை எவர் பெற்றுக் கொண்டாரோ, அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் (2:185) என வல்லோன் அல்லாஹ் தனது திருமறையில் கூறியுள்ளதன் மூலம் ரமலான் மாதத்தின் தனிப்பெரும் சிறப்பினை உணர்த்தியுள்ளான்.

தம் வாழ்க்கையில் பாவமே செய்யாத மனிதர்கள் இருக்க முடியுமா? என்ற கேள்விக்கு எத்தனை பேர் சரியான பதிலை கூறிவிட முடியும்? அதுவும் தற்போதைய நாகரீக கலாச்சார வாழ்க்கையில் சிக்கிக் கொண்டிருக்கும் நாம் மேலே கண்ட கேள்விக்கு பதில் சொல்ல தயக்கமே வரும். பாவத்திற்குரிய செயல்களில் ஒன்று மனிதன் தெரிந்தே பாவம் செய்தல் மற்றொன்று தனக்கே தெரியாமல் பாவம் செய்தல்.

மனிதனின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் பாவச் செயலை தூண்டும் நிலையிலேயே இருப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையுணர்வுடன் வாழ வேண்டும். பாவத்தின் முதல் துவக்கமாக மன இச்சையும் அடுத்ததாக மனிதனின் நாவும் இருப்பதை மறுக்க முடியாது!. மனம் போகும் போக்கில் வாழ ஆசைபடுதலே பாவத்தின் தலைவாசல் என கலீபா அலி (ரலி) அவர்கல் கூறியுள்ளார்கள். நாவால் பிறரின் மனதை புண்படுத்துபவர்கள் நம்மில் மிகுதமாக உள்ளனர்.

நாம் கூறும் ஒவ்வொரு சொல்லையும் நிதானத்துடன் சொல்ல முன் வராத வரை, சொல்லப்படும் அந்த வார்த்தைகளில் நமக்கே தெரியாமல் சில நேரங்களில் பாவம் கலந்து விடுகின்றன. "யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல் இழுக்கு ப்டடு" திருவள்ளுவரின் இந்த கூற்றும் நாவை பேண வேண்டிய அவசியத்தையே வலியுறுத்துகின்றன.

சொல்லிவிட்ட வார்த்தைக்கு நாம் அடிமை, சொல்லாத வார்த்தை நமக்கு அடிமை! என்ற பழமொழி கூட நம்மை சிந்திக்க வைக்கின்றன. ஆக மனிதனை பாவத்தின் பக்கம் தூண்டும் முக்கிய உறுப்பாக "நாவு" இருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை. பாவத்தின் பக்கங்களாய் பொய் பேச வைப்பதின் மூலம் நாவு தன் முகவுரையை தொடங்குகிறது. பிறரை பற்றி புறம் பேசுதல் மூலம் நடுவுரையை தருகிறது. அடுத்தவரின் விஷயத்தில் கோள் சொல்வதின் மூலம் தனது முடிவுரையை எழுதுகிறது.

மொத்தத்தில் தமது நேர்மையையும், ஒழுக்கத்தையும் குழி தோண்டி புதைத்து விடுகிறது. இவ்வளவு பெரிய கூரிய ஆயுதமான நாவை நாம் கவனமுடன் பயன்படுத்த வேண்டும். "சொல்லாதே செய்" என்ற வாக்கியத்தை சரிவர பேணியவர்கள் தான் ஆன்றோர்களாகவும், சான்றோர்களாகவும் திகழ்ந்துள்ளனர்.

"தவளை தன் வாயால் கெட்டது" என்ற பழமொழியை கூட நம்மை எச்சரிக்கத்தான் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள். இவற்றையெல்லாம் சிந்தித்து நாம் ஏற்கனவே பேசியிருக்கும் பேச்சுக்களில் எதுவெல்லாம் பாவம் கலந்தது என்பதை நம்மால் யூகிக்க முடியாவிட்டாலும். அனுதினமும் படைத்தவனிடம் கையேந்தி பாவ மன்னிப்பு கோருவதே மிகவும் அவசியமாகும்.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் படியில் இருந்தபோது தமது கைகளை உயர்த்தியவர்களாக ஆமீன், ஆமீன், ஆமீன் என மூன்று முறை தொடர்ந்து கூறினார்கள். பிறகு மிம்பரில் இருந்து கீழிறங்கியதும் தோழர்களெல்லாம் யாரசூலுல்லாஹ் எப்போதும் கண்டிராத ஒரு காட்சியை இன்று கண்டோமே? என கேட்டதற்கு நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்:- வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து "ரமலானை அடைந்தும் அதில் பாவமன்னிப்பு தேடாதவன் நாசமடைவானாக" என கூறியதும் அதற்கு நான் ஆமீன் சொன்னேன் என்ற விபரத்தை தம் தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.

பிறகு இரண்டு முறை எதற்காக ஆமீன் சொன்னார்கள் என்ற விபரத்தை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்க்கலாம். (இந்த நிகழ்வை ஹழ்தத் கஃபு இப்னு உஜ்ரத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளது ஹாகிம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது) ஆக ரமலான் மாதத்தில் நாம் அதிகமதிகம் பாவ மன்னிப்பு கோர வேண்டும் என்பதை தான் மேலே கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது. புனிதமிகும் ரமலானில் நமது நாவைப் பேணும் பயிற்சியை தொடங்குவதுடன் பாவ மன்னிப்பு தேடுபவர்களாகவும் நம்மை பழக்கிக் கொள்வோம். இறைவன் நம் அனைவரின் நாவுகளையும் தீமைகளிலிருந்து பாதுகாத்து மன்னித்து அருள் பாலிப்பானாகவும். ஆமீன்!

நோன்புப் பெருநாள் தர்மம்

முன்னுரை:


ஜகாத்துல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம் முஸ்லிம்களால் மறக்கடிக்கப்பட்டதும், தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதுமான கடமையாகும். நாம் அதன் முழுவிபரங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

1. கடமை:

முஸ்லிமான ஆண்கள், பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, அடிமையல்லாதவர் ஆகிய அனைவர் மீதும் ரமளானில் நோன்புப் பெருநாள் தர்மமாக பேரீத்தம் பழம், கோதுமை ஆகியவற்றில் ஒரு 'ஸாஉ' கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புகாரி 1503, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா)

'கடமையாக்கினார்கள்' என்ற வாசகத்திலிருந்து நோன்புப் பெருநாள் தர்மம் கடமை என்பதை புரிந்து கொள்ளலாம்.

2. நேரம்:

'நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்னால் கொடுத்து விடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புஹாரி 1509, முஸ்லிம், அஹ்மது, அபூதாவூது, நஸயீ, திர்மிதி)



நபித்தோழர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாகவே கொடுத்து விடுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புஹாரி)



நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்பே கொடுத்துவிட வேண்டும். அவற்றை ஏழைகளுக்கு வினியோகிக்கும் பொருட்டு முன்னரே கொடுப்பது நல்லது.

3. நோக்கமும் பயனும்:

'நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபடுவதற்குப் பரிகாரமாகவும் எழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்றுக்கொள்ளப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூற்கள்: அபூதாவூது, இப்னுமாஜா, தாரகுத்னீ)

இந்த ஹதீஸில் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாக்கப்பட்டதின் நோக்கம் கூறப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகைக்கு பின்பு நிறைவேற்றுவது ஸகாத்துல் பித்ராக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, சாதாரண தர்மமாகவே அமைந்து விடும்.

4. அளவு:

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாஉ, பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ, பாலாடைக் கட்டியில் ஒரு ஸாஉ, உலர்ந்த திராட்சையில் ஒரு ஸாஉ என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்' என்று அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

ஒரு ஸாஉ என்பது நான்கு முத்துக்கள் ஆகும், ஒரு முத்து என்பது இரண்டு கைகளை சேர்த்து ஒரு முறை அள்ளப்பட்ட கொள்ளளவாகும். அதாவது ஒரு ஸாஉ என்பதன் தோராயமான அளவு 2.5 கிலோ எடையாகும்.

5. கூட்டாக வசூல் செய்வது:

'ரமளானில் ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் என்னை நியமித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 3275)


நபி (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ என்று நோன்புப் பெருநாள் தர்மத்தை நிர்ணயம் செய்திருந்தார்கள். ஒரு மனிதர் மட்டமான பேரீத்தம் பழங்களைக் கொண்டு வந்தார். அதை நபி (ஸல்) அவர்கள் இந்த பேரீத்தம் பழங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி), நூல்: ஹாக்கிம்)

நோன்புப் பெருநாள் தர்மத்தை கூட்டாக வசூல் செய்து பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது என்பதை இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. 'ரமளானில் ஸகாத்தைப்' என்ற வாசகம் அது நோன்புப் பெருநாள் தர்மம்தான் என்பதைச் சொல்கிறது.

முறையாக வசூல் செய்து வினியோகம் செய்யும் போது நோன்புப் பெருநாள் தர்மம் ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் சென்று குவிந்து விடாமல் தடுக்கப்படுவதோடு, 'பெருநாளின் போது ஏழைகளை கையேந்த வைக்காதீர்கள்' என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு ஏற்ப ஏழைகளை அடையாளம் கண்டு அவர்களிடம் சென்று வினியோகம் செய்ய வேண்டும்.


முடிவுரை:

நோன்புப் பெருநாள் தர்மத்தை வசூல் செய்து வினியோகம் செய்ய ஒரு குழுவினரை நியமிப்பது அவசியம். அந்த கடமையை நிறைவேற்றுபவர்கள் தனியொரு நபருக்கு கொடுப்பதை தவிர்த்து, இப்படிப்பட்ட குழுவினரை அடையாளம் கண்டு செலுத்துவதும் அவசியத்திலும் அவசியம்

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

ரமளான் எதிர்பார்க்கும் இலட்சியம்

ஹதீஸ் தெளிவுரை: எம். ஏ. ஹபீழ் ஸலபி, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை 'யார் பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ-ஹுரைரா (ரலி), ஆதார நூல்: புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூ-தாவூத்). அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனுக்காக நாம் நோன்பு நோற்கின்றோம். நோன்பை நோற்பதன் மூலம் நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டுமோ, அவை ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா என்பதை நாம் சுயபரிசோதனை செய்யக் கடமைப் பட்டுள்ளோம். அல்லாஹ் எவைகளைச் செய்யச் சொன்னானோ, அவற்றை முழு மனதுடன் செய்வது போலவே, எவைகளைத் தவிர்க்கச் சொன்னானோ அவற்றையும் கண்டிப்பாகத் தவிர்ந்து நடக்க வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கும்போது அதற்கான நற்கூலிகள் வழங்கப்படும். எவைகளை அல்லாஹ் தேவையில்லை என்ற தடுத்தானோ, அவை மீறப்படும்போது தண்டனையைத் தயார் படுத்துகின்றான். ஒவ்வொரு நிமிடமும் நான் ஒரு அடிமை என்ற நன்றி உணர்வோடு நாம் வாழ வேண்டும். குறிப்பாக ரமழான் மாதத்தில் மிகுந்த பக்குவத்துடன் அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். தீமைகளை விட்டும் தூரமாகி, பரிசுத்தமான வாழ்வின் பக்கம் மீள வேண்டும். இதையே அல்லாஹ் எதிர்பார்க்கிறான். எந்த இலட்சியத்தை அடைவதற்காக நோன்பு நம்மீது கடமையாக்கப்பட்டதோ, இந்த உன்னத இலட்சியத்தை மறந்து விடுகிறோம். எல்லோரும் நோன்பு நோற்கிறார்கள் என்பதற்காக நாமும் நோன்பு நோற்று, பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் எத்தகைய நன்மையும் கிட்டுவதில்லை. எனவே, நோன்பாளிகள் எவற்றைத் தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டுமோ, அவற்றைத் தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நோன்பு நோற்பதினூடாக மனிதனிடம் என்ன எதிர்பார்க்கப்படுகின்றது என்பதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் மேலே சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. ஒரு முஃமின் தனது வாழ்வின் ஒவ்வொரு கனப் பொழுதிலும் அல்லாஹ்வை அஞ்சி வாழ்வதோடு, தீமைகளை விட்டும் ஒதுங்கி இருக்க வேண்டும். பொய், புரட்டு, பித்தலாட்டம், தவறான நடவடிக்கைகள் போற்றவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். அதே போல் நோன்பு காலங்களில் கண்டிப்பாக தீய நடவடிக்கைளிலிருந்து மிகத் தூரமாகி இருக்க வேண்டும் என்பதையே மேற்குறிப்பிட்ட நபிமொழி நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. நபி(ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு நாம் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால் ரமழான் நம்மில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நோன்பைப் பாழ் படுத்தும் நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் சர்வ சாதாரணமாக ஈடுபட்டுக் கொண்டே தாங்கள் நோன்பாளிகள் என்கின்றனர். அதனால்தான், பல ரமழான் மாதங்கள் நம்மைக் கடந்து சென்றாலும் நம்மில் எத்தகைய மாற்றமும் நிகழவில்லை. எப்போது அல்லாஹ் அருளிய வேதம் அல்-குர்ஆனும், அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறியும் புறக்கணிக்கப்படுகின்றதோ, அப்போது நாம் பெறும் பேறுகள் வெறும் பூஜ்ஜியமாகவே இருக்கும். எனவே நபி(ஸல்) அவர்களிள் எச்சரிக்கைக்கு நாம் முக்கியத்துவம் அளித்து நம்முடைய நல் அமல்களை நாம் பாழ்விடுத்தி விடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இறையச்சமில்லாத எந்த ஒரு வணக்கத்தையும் அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான். சிறிய அளவே அமல் செய்தாலும், செய்த அந்த அமல் இறையச்சத்துடன் அமைந்து விடுமானால் இறைவன் பூரண திருப்தி அடைவான் இறை திருப்தியை மட்டும் நாடி மட்டும் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வணக்க வழிபாட்டை, அற்பமான தீய நடிவடிக்கைகளால் வீணாக்கி விடக்கூடாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்மறை குர்ஆனிலே கூறுகிறான்:'ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்' (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகரா - 183 வது வசனம்). இவ்வசனத்தின் மூலம் நோன்பு எதற்காக என்பதை வல்ல அல்லாஹ் தெளிவாகக் சுட்டிக் காட்டுகிறான். எனவே நோன்பு நோற்பதால் சிறந்த இறையச்சம் ஏற்பட வேண்டும். நோன்பு நோற்றிருக்கும் வேளையில் நமது வீட்டிலிருக்கும் உணவை இறையச்சத்தின் காரணமாக உண்ணாமல் தவிர்த்து விடுகிறோம். நாம் தனியே இருக்கும் போது யாரும் பார்ப்பதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் தனியே இருக்கும் வேளையில் யாரும் பார்க்கமாட்டார்கள் என்றாலும், எல்லாம் வல்ல அல்லாஹ் ஒவ்வொரு கனமும் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிற நம்பிக்கை நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விட்ட காரணத்தால் நாம் நோன்புடைய வேளைகளில் சாப்பிடுவதில்லை. இதேபோல் ரமழான் அல்லாத காலங்களிலும் வல்ல அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்று உறுதியாக நம்ப வேண்டும். ரமழானில் விலக்கப்பட்ட காரியங்களைச் செய்ய முயலும்போது, இறைவனுக்குப் பயந்து அனுமதிக்கப்பட்ட காரியங்களைச் செய்வதையே நாம் தவிர்ந்து கொண்டதை சிந்திக்க வேண்டும். நம்மிடம் ஹலாலான உணவு இருந்தும், நோன்புடைய காலங்களில் நாம் உண்ணுவதில்லை. கட்டிய மனைவி இருந்தும் நோன்புடைய பகல் வேளைகளில் மனைவியைத் தீண்டுவதில்லை. இந்த ஆன்மீகப் பயிற்சிதான் நோன்பு கடமையாக்கப் பட்டதற்கான காரணம். இந்த ஆன்மீகப் பயிற்சியைப் பற்றிதான் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள். 'பசித்திருப்பதல்ல நோன்பின் நோக்கம்' என்பதை ஆழமாக விளக்குவதோடு, நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி எத்தகைய மாற்றங்களை நம்மிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளார்கள். -: பொய் பேசாமை பொய் பேசுவது பெரும்பாவங்களில் ஒன்றாகும் என்று அருள்மறை குர்ஆன் கூறுகிறது. 'ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்; ''என் இறைவன் அல்லாஹ்வே தான்!'' என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.'' (அத்தியாயம் 40 ஸூரத்துல் முஃமின் - 28வது வசனம்) '..(நபியே!) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ்; இத்தகைய அநியாயக்காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.' (அத்தியாயம் 6 ஸூரத்துல் அன்-ஆம் 144வது வசனத்தின் கடைசிப் பகுதி என அருள்மறை குர்ஆன் கூற, புனிதமிக்க ரமழானில்தான் பொய்களை அதிகமாகப் பேசுகின்றனர். மார்க்கம் என்ற பெயரால் புனைந்துரைத்து, சிறப்புக்கள் என சில 'அமல்'களையும் அதற்கான கூலிகளையும் அள்ளி வீசுகின்றனர். இறை இல்லங்களில் அல்லாஹ்வின் வேதமும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் தூய்மையானப் போதனைகளும் பேசப்படுவதற்குப் பதிலாக போலிகளை உலவ விடுகின்றனர் நம்மில் பலர். இவர்கள் நபி(ஸல்) அவர்களின் போதனைகளையும், எச்சரிக்கைகளையும் கவனத்தில் கொள்வதில்லை 'உண்மையைக் கடைப்பிடியுங்கள். உண்மை நன்மையின் பக்கம் வழிகாட்டும். ஒரு மனிதன் உண்மையே பேசி, அதிலேயே தொடர்ந்து இருப்பானாயின் அல்லாஹ்விடத்தில் அவன் உண்மையாளன் எனப் பதியப்படுகின்றான். பொய்யைப் பயந்து கொள்ளுங்கள். ஏனெனில், பொய் தீமையின் பக்கம் வழிகாட்டுகிறது. ஒரு மனிதன் பொய்யுரைத்து அதில் மூழ்கியிருப்பானாயின் அல்லாஹ்விடத்தில் பொய்யன் எனப் பதியப்படுகின்றான்' என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி), ஆதார நூல்: புகாரி, முஸ்லிம் பொய் பேசுகிறவன் அல்லாஹ்விடத்தில் பொய்யன் எனப் பதியப்பெறுவதுடன், அவன் செல்லுமிடம் நரகமாகவும் இருக்கும். இன்று நம்மவர்கள் மத்தியில் பொய் பேசுவது மலிந்துள்ளது. எவ்வளவோ பேர் மார்க்கத்தின் பெயரால்; எத்தனையோ பொய் சொல்கிறார்கள். நம்மில் அதிகமானவர்களிடம் பொய் சொல்வது ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணம் உள்ளது. அதனால்தான் சர்வ சாதாரணமாக, சளைக்காமல் பொய் சொல்லும் கலையில் ஆற்றல் பெற்றுத் திகழ்கின்றார்கள். பொய் சொல்வதைப் பெரிய திறமையாகவும் கருதுகின்றார்கள். பொய் சொல்லாமல் இந்தக் காலத்தில் எப்படி வாழமுடியும் என்று முஸ்லிம்களே கேள்வி கேட்கும் நிலை! பொய் சொன்னால் மறுமையில் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமும் முஸ்லிம்களிடம் எடுபட்டுப் போய்விட்டது 'எவனிடம் நான்கு விடயங்கள் இருக்கின்றனவோ, அவன் நயவஞ்சகனாவான். நான்கில் ஒன்றிருந்தாலும் நயவஞ்சகத்தின் ஒரு பகுதி உள்ளவனாவான். அதைவிடும் வரை நயவஞ்சகனாவான் .1. பேசினால் பொய்யுரைப்பான் 2. வாக்களித்தால் மாறு செய்வான் 3. வழக்காடினால் அநீதியிழைப்பான் 4. உடன்படிக்கைச் செய்தால் அதை மீறுவான். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.) இன்று எமது வியாபாரம், கொடுக்கல், வாங்கல், குடும்ப விவகாரம், அண்டை அயலவர்கள் தொடர்பு என்று எல்லா அம்சங்களிலும் முஸ்லிம்களிடம் பொய் மிகைத்து நிற்கிறது. எனவே இந்த நோன்பின் மூலம் பயிற்சி பெற்று, பொய் சொல்வதிலிருந்து எம்மைத் தடுத்துக் கொள்ளவில்லையானால் நாம் நோன்பு நோற்கவில்லை. வெறும் பட்டினிதான் கிடந்துள்ளோம் என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக ரமழான் காலங்களில் மார்க்கம் அதன் சிறப்பு என்ற பெயரால் பொய் போசுவது கண்டிப்பாக நிறுத்தப்படவேண்டும். தமக்குத் தோன்றியதையெல்லாம் மார்க்கம் என்று பேசும் மடமை நிலை மாற வேண்டும். 'கேள்விப்பட்டதையெல்லாம் ஒருவன் பேசுவது அவன் பொய்யன் என்பதற்குப் போதிய ஆதாரமாகும்' (முஸ்லிம்). மார்க்கம் என்ற பெயரில் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்படுவதும், தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலமாக மக்களுக்கு ஒலி-ஒளி பரப்பப்படுவதும் சிலருக்கு ஆதாரமாகிகிட்டது. மூன்று நாள், பத்து நாள், நாற்பது நாள் என்று ஊரை விட்டு அடுத்த ஊருக்குச் சென்று வந்தவர்களெல்லாம் தமது வாயில் வந்ததெல்லாம் மார்க்கம் என்று பேசி தூய்மையான இஸ்லாத்தை மலினப் படுத்துகிறார்கள். எங்கோ கேட்டதெல்லாம் மார்க்கம் என்று ஒரு சாரார் பேசும்போது மற்றொரு சாரார் பக்தி சிரத்தையோடு கேட்கின்றனர். இது ரமழான் காலங்களில் அதிகரித்து வருகிறது. நபி(ஸல்) அவர்களின் மீது இட்டுக் கட்டுவதும், பொய் கூறுவதும் தனது இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்வதற்குரிய கொடிய குற்றமாகும். மக்களின் பாமரத் தன்மையைப் பயன்படுத்தி இவ்வாறு நடந்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு இறை இல்ல நிர்வாகங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 'மாபெரும் சதியாதெனில், மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும்' (அஹ்மத்) எனவே நாவை அடக்குவது அவசியம். நாவினால் ஏற்படும் பெரிய தீமை பொய்யாகும். ஆகவே பொய்யுரைக்காது நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பொய், வாழ்க்கையின் எந்தத் துறையிலும் நுழைந்துவிடாதவாறு இஸ்லாம் மிகக் கவனமாக வழி நடத்துகிறது. பொய், பொய்சாட்சி, பொய் சத்தியம், பொய் வாதம், மார்க்கத்தின் பெயரால் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுதல் போன்ற தீய கொடூரங்களை, துரோகங்களைத் தவிர்ப்பதற்காக நோன்பு என்கிற ஆன்மீக பயிற்சிக் கூடத்தை இஸ்லாம் ஒருமாத காலம் ஏற்பாடு செய்து தந்துள்ளது. அடியான் பட்டினி கிடப்பதால் எஜமானனுக்கு எந்தவித நன்மையும் ஏற்பட்டு விடுவதில்லை. கடமையான நோன்பினை ஒரு மாத காலம் இறை நம்பிக்கையாளர்களிடம் நோற்கச் செய்துவிட்டு, அவர்கள் பொய் சொல்லாமல், பொய்யான, தீமையான நடவடிக்கைளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என அல்லாஹ் எதிர்பார்க்கிறான். இந்தப் பண்புகளை தன் அடியார்களிடமிருந்து வெளிப்படுத்தவே நோன்பைக் கடமையாக்கியுள்ளான். ரமழானுக்குப் பின்னரும் இந்த நல்ல பண்புகள் தொடருமானால், இறை நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் சகோதரத்துவ இணக்கம், நம்பிக்கை, நல்லுறவு நிலவும். 'எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசிக்கிறாரோ அவர் நல்லதைப் பேசட்டும், அல்லது மௌனமாக இருக்கட்டும்' (புகாரி, முஸ்லிம்).

நோன்பு எதற்கு?

பகல் நேரங்களில் மனிதனை வருத்தி அவன் தோற்றத்தை பலவீனப்படுத்துவது நோன்பின் நோக்கமல்ல பலவீனமாகவே படைக்கப்பட்ட மனிதனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக இறைவன் நோன்பை கடமையாக்கி இருந்தால் இரக்க குணமிக்க இறைவனின் பண்பிற்கு மாற்றமாக அது அமைந்து விடும். அதனால் மனிதனை பலவீனப்படுத்தத் தான் நோன்பு என்ற எண்ணமோ அர்த்தமோ தவறானதாகும்.நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது நீங்கள் உள்ளச்சமுடையோராய் ஆக வேண்டும் என்பதற்காக. (அல் குர்ஆன் 2:183)மனிதனிடம் இறைவன் பற்றிய உள்ளச்சம் வந்து விட்டால் அவன் தூய்மையடைய அது வழிவகுத்துவிடும் இதற்கான முழு பயிற்சியையும் நோன்பின் மூலம் மனிதன் - ஓரிறை நம்பிக்கையாளர்கள் - பெற முடியும். உலகில் நடக்கும் கொடுமைகள் அனைத்திற்கும் இறைவன் பற்றிய அச்சமும் அவன் பற்றிய நம்பிக்கையும் இல்லாததேயாகும். நோன்பு தொழுகைப் போன்ற பயிற்சியின் வாயிலாக மனிதன் இறைவன் பற்றிய நம்பிக்கையையும் அச்சத்தையும் வளர்த்துக் கொள்ளும் போது அவன் மூலம் பிறருக்கு எவ்வித கெடுதிகளும் ஏற்படுவதில்லை. அல்லது மிகவும் குறைவான கெடுதிகளே அவனால் வெளிப்படும்.இறைவனுக்காக ஒருவன் தனக்கு பிடித்த - அனுமதிக்கப்பட்ட - உணவுகளை பகல் பொழுதில் திரும்பிக் கூட பார்ப்பதில்லை பிறர் தூண்டினால் கூட உண்பதில்லை இவ்வாறு ஒருநாள் இரண்டுநாள் என்றில்லாமல் ஒருமாதம் முழுதும் பயிற்சி எடுக்கிறான் என்றால் அவனது இந்த பயிற்சியின் பக்குவம் மற்ற மாதங்களில் வெளிப்படவே செய்யும். இறைவன் விரும்பாத செயல்களிலிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொள்வான். இதன் மூலம் அவன் வாழ்வு நிம்மதி அடைவதோடு மட்டுமல்லாமல் அவன் வழியாக பிறரும் நிம்மதியும் - உதவியும் பெறுகிறார்கள்.வருடந்தோரும் உலக முஸ்லிம்களை சந்தித்து விட்டு செல்லும் இந்த நோன்பின் மூலம் உரிய பயிற்சியைப் பெறாதவர்கள் பயனற்றவைகளுக்கு உதாரணமாகி விடுகிறார்கள்வயிற்றுப் போக்கு நோயால் அவதிப்படும் ஒருவனுக்கு டாக்டர் சில மருத்துவ முறைகளை கையாள சொல்கிறார். மருத்துவரை சந்தித்து அவருக்குரிய பணத்தையும் கொடுத்து விட்டு மருந்து சீட்டையும் வாங்கி வரும் நோயாளி மருத்துவர் சொன்ன அறிவுரையை மட்டும் கடைப்பிடிக்கவில்லை என்றால் அவன் மருத்துவரை சந்தித்த சந்திப்பில் எப்படி ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போய்விடுமோ அதே போன்று தான் இந்த ஆன்மீக மருத்துவ மாதத்தை சந்தித்து அதில் பயிற்சிப் பெறாதவர்களின் நிலையுமாகும்.தன் வயிற்றில் பிறந்த பிள்ளை நல்லப்பிள்ளையாக வளர வேண்டும் என்று நினைக்கும் தாய்க்கு கூடுதல் பொறுப்பு உண்டு. தாய் என்ற உலகத்தை தாண்டி வேறு உலகத்தை குழந்தை எட்டிப்பார்க்க துவங்கும் போது தாயின் கூடுதல் பொறுப்பு வேலை செய்ய துவங்கி விட வேண்டும்.ஒரு மாணவன் சிறந்தவனாக உருவாக ஆசிரியருக்கு அதிக பொறுப்பு உண்டு. வகுப்பறையைக் கடந்து இதர மாணவர்களோடு அவன் கலக்கும் போது ஆசிரியரின் பொறுப்பு உஷார் நிலையை எட்டி விட வேண்டும்.தன் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசைப்படும் குடும்பத் தலைவனுக்கும் கூடுதல் பொறுப்பு உண்டு. பணத்திலோ - ஆடம்பரத்திலோ - சுக போகங்களிலோ குடும்பம் காலடி எடுத்து வைக்கும் வேலைகளில் இவனுடைய கரம் நீண்டு அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.இந்த கூடுதல் பொறுப்பு குழந்தையையும், மாணவனையும், குடும்பத்தையும் இடற்பாடில்லாத அல்லது இடற்பாடு மிகக் குறைந்துப் போன ஒரு நல்லப் பாதையில் வழி நடத்தி செல்ல உதவும். உலகம் என்ற பகட்டுப் பல்லக்கில் மனிதன் ஊர்வலம் வர துவங்கி விட்டான். உச்சியில் ஊர்வலம் போகும் மனிதனுக்கு உலகம் அழகாகத் தெரியும். இந்த சந்தர்பங்களிலெல்லாம் அவன் பல்லக்கிலிருந்து தவறி விழுந்து விடாமலிருக்க அந்தப் பல்லக்கை இயக்குபவனுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. அந்த கூடுதல் பொறுப்பின் வெளிபாடுகளில் ஒன்றுதான் இந்த நோன்பு. இந்த பயிற்சியை முறையாகப் பெற்றால் வழி கேடுகள் என்ன வசீகரித்தாலும், உலகத்தின் பனிப் பாறைகள் பள்ளத்தாக்குகள் தன்னை நோக்கி ஈர்த்தாலும் பல்லக்கிலிருந்து தவறி விழும் அபாயம் நம்மை அண்டாது. சிந்திக்கும் மக்களுக்கு ரமளான் நல்லப் பயிற்சிக் கொடுக்கும்.இறையச்சம் உலகில் மிகைக்கும் போது சாந்தி சமாதானம் எங்கும் வியாபித்து நிற்கும். இறையச்சமுள்ள மனிதன் பிற மனிதனுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்த மாட்டான். இதற்காக இஸ்லாம் பல்வேறு வழிகளில் மனிதனை பக்குவப்படுத்த வழிவகுக்கின்றது. அதில் ஒன்று நோன்பு. வருடந்தோரும் ஓராண்டு இந்த பயிற்சியில் ஒன்றிணையும் போது இந்தப் பயிற்சியின் தாக்கமும் விளைவும் வாழ்வில் பிரதிபளிக்கவே செய்யும். தீயவை அனைத்திலிருந்தும் ஒதுங்கும் மாதம் இது. பார்க்கும் சுதந்திரம் இருந்தும், கேட்கும் சுதந்திரம் இருந்தும், பேசும் சுதந்திரம் இருந்தும், சுவைக்கும் சுதந்திரம் இருந்தும் தனக்குள்ள சுதந்திரத்தைக் கூட இறைவனுக்காக புறந்தள்ளி வைக்கும் பயிற்சி. இறை வணக்கங்களிலும், இறை நினைவிலும் திளைத்திருக்கும் பயிற்சி. இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுவோர் வெறும் சில நூறுகளோ, சில லட்சங்களோ, ஏன் சில கோடிகளோ அல்ல. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தப் பயிற்சியை மேற்கொள்கிறார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் கூட இந்தப் பயிற்சியில் தன்னை விரும்பி இணைத்துக் கொண்டு குதூகளிக்கும் ஆனந்தம்.நோன்பு விதிக்கப்பட்டுள்ளது. இறைநம்பிக்கையுள்ள மனிதன் தூய்மையடைய வேண்டும் என்பதற்காக.எத்துனை நாட்கள்?ரமளான் என்பது ஒரு மாதத்தின் பெயர் என்றாலும் சந்திர சுழற்சியை மையமாகக் கொண்ட மாதம் என்பதால் இறைவன் நோன்பிற்கான கால அளவை நாட்கள் என்றே குறிப்பிடுகிறான்.

நோன்பு என்றால் என்ன

மனிதன் தன் உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்கிறான். அவன் மேற் கொள்ளும் பல்வேறு முயற்சிகளை உள்ளடக்கியதாக நோன்பு அமைந்துள்ளது. எழுத்தில் இதை முழுமையாக விளக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணரும் காரியமாகும் இது. பசியின் தன்மை உணர்த்தப்படுகிறது.வேண்டா கொழுப்புகள் குறைக்கப்பட்டு உடல் நலம் காக்கப்படுகிறது.தீய எண்ணங்களும் செயல்களும் மனிதனை விட்டு விலகி ஓடுகின்றன.பிறர் மீதான அக்கறையும் இல்லாதோருக்கு கொடுத்துதவும் மனப்பக்குவமும் கூடுகின்றது. அதிகமான இறை வணக்கங்களால் மனம் மிகுந்த அமைதிப் பெறுகிறது.பாவக்கறை படிந்தவனாக இருக்கும் நிலையில் மனிதனை மரணம் வந்தடைந்து விடாமல் இருக்க இறைநம்பிக்கையாளர்களின் பாவங்களை அவனை விட்டு அகற்ற இந்த நோன்பு வழிவகுக்கிறது.நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து எவர் ரமளானில் நோன்பு வைக்கிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று இறைத்தூதர் (ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா(ரலி) புகாரி முஸ்லிம் திர்மிதி

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

ரமழான் நோன்பின் சிறப்புக்கள்

ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம் நோன்பாளி செய்யக் கூடாதவை எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல் பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது. அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் "நான் நோன்பாளி" என்று கூறி விடவும். நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம் நோன்பின் தற்காலிக சலுகைகள் நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும். (அல்குர்ஆன்: 2:185) எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம் அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம் நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூது, திர்மிதீ நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும் வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான். நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம் சஹர் செய்தல் நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம் ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுது,நஸ்யீ நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம் நோன்பு திறப்பது அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது

இறை நம்பிக்கை

படைத்தவன் மீது நம்பிக்கை வைப்பதை விடுத்து பணத்தின் மீதும், பதவியின் மீதும், கல்வியின் மீதும், தம் அறிவின் மீதும், தாங்கள் செய்யும் வியாபாரத்தின் மீதும், சொத்துகளின் மீதும் நம்பிக்கை வைக்கிறான் மனிதன். தன் பிடரி நரம்பினும் அண்மையிலுள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வை மறந்தவனாக நன்றி கெட்டவனாக மனிதன் வாழ்வதில் இன்பம் காணுகிறான். தன்கையில் இலட்ச இலட்சமாக பணம் உள்ளவன் தன்னால் தான் விரும்பியதை செய்ய இயலும் என இறுமாப்புக் கொள்கிறான். மேலும் பணமில்லாத தன் உடன் பிறந்தவர்களையே ஏளனமாக நோக்குகிறான். அவனுடைய ஏழ்மையின் காரணமாக அவன் வாழும் நெறியான வாழ்க்கை மீதே வீண் பழி சுமத்தவும் அஞ்சுவதில்லை. காரணம் தன்னிடம் உள்ள பணம் தன்னைக் காப்பாற்றும் மிகப்பெரிய சக்தியாக அவன் எண்ணுவதுதான். அடுத்து பதவியின் மீது தான் கொண்ட அபரிமிதமான நம்பிக்கை தன்னுடைய பதவியை எதனையும் சாதிக்கக்கூடிய, நினைத்ததை முடிக்கக்கூடிய அதிகாரம் படைத்ததாகக் கருதி செயல்படுகிறான். மேலும் கல்வியின் மீது கொண்ட நம்பிக்கையானது கல்வி கற்காதவர்களையும் அறிவற்றவர்களாக தகுதியில்லாதவர்களாக எண்ணும் அளவுக்கு 'அறிவின் ஆணவம்' போய்க் கொண்டிருக்கிறது. இவ்வாறாக வியாபரத்தின் மீது கொண்ட நம்பிக்கையும் மனிதனை இறை நம்பிக்கையற்றவனாக ஆக்குகின்றது. தன் வியாபாரம் எக்காலத்துக்கும் கைகொடுக்கும், மங்காத மறையாத செல்வம் அதன் மூலம் தொடர்ந்து கிடைக்கும் என்று மனப்பால் குடிக்கின்றான். சொத்துக்களின் மீதும் மனிதன் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தவனாக இருக்கின்றான். தம்முடைய இந்தச் சொத்து ஐந்தாறு தலைமுறைகளுக்குத் தேறும், எவரும் தன்னை அசைக்கக் கூட இயலாது என எண்ணுகிறான். இஸ்லாம் மனிதனுக்குள்ள பணத்தேவையையும், அதை ஈட்டுவதின் வழி முறைகளையும், கல்வியின் அவசியத்தையும், அறிவின் மூலம் ஏற்படுகின்ற சிந்தனை ஊற்றையும் கொடுக்கல் வாங்கல் முதலான வியாபரங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும், சொத்துக்களின் பங்கீடு முறை பற்றியும் தெளிவாக எடுத்து கூறுகின்றது. இல்லறத்தின் மூலம் நல்லறங்களைச் செய்யவே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. காவி உடை தரித்து கமண்டலம் ஏந்தி காட்டுக்குச் சென்று தவம் செய்து ஞானி எனப்பெயர் பெறுவதே சிறந்ததது என்று இஸ்லாம் ஒரு போதும் சொன்னதில்லை. எந்த காரியத்திலும், எந்தச் செயலிலும் இறை நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதையே இஸ்லாம் மானிட இனத்துக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. அல்லாஹ் தன் திருமறையில் நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன். (8:64) நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். (100:6-8) காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3) குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். (104:1-9) செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது - நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. (102:1-2) அல்லாஹ்வின் நல்லடியார்களே! நீங்கள் பொருளைத் தேடுங்கள்; செலவழியுங்கள்; நெறி பிறழாமல் இன்பம் காணுங்கள்! ஆனால் இறை நம்பிக்கையுடன் செயல்படுங்கள்! கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள். மேலும் மேலும் உங்கள் அறிவினை விரிவாக்கக் கூடிய கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அப்போதும் இறை நம்பிக்கையுடன் அறிவைப் பெற முயலுங்கள். வியாபாரம் செய்யுங்கள். மாட மாளிகைகள் கட்டிக் கொள்ளுங்கள். ஆனால், அப்போதும் எப்போதும் இறை நம்பிக்கையுள்ளவர்களாகத் திகழ்ந்து வாருங்கள். அல்லாஹ் நம்மனைவோர்க்கும் தனது பரந்து பட்ட அருளை இடைவிடாது அளிப்பானாக! (ஆமீன்)

இஸ்லாமிய சிந்தனை

உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 6:32)

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online