வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

புதன், 26 ஆகஸ்ட், 2009

நோன்புப் பெருநாள் தர்மம்

முன்னுரை:


ஜகாத்துல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம் முஸ்லிம்களால் மறக்கடிக்கப்பட்டதும், தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதுமான கடமையாகும். நாம் அதன் முழுவிபரங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

1. கடமை:

முஸ்லிமான ஆண்கள், பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, அடிமையல்லாதவர் ஆகிய அனைவர் மீதும் ரமளானில் நோன்புப் பெருநாள் தர்மமாக பேரீத்தம் பழம், கோதுமை ஆகியவற்றில் ஒரு 'ஸாஉ' கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புகாரி 1503, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா)

'கடமையாக்கினார்கள்' என்ற வாசகத்திலிருந்து நோன்புப் பெருநாள் தர்மம் கடமை என்பதை புரிந்து கொள்ளலாம்.

2. நேரம்:

'நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்னால் கொடுத்து விடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புஹாரி 1509, முஸ்லிம், அஹ்மது, அபூதாவூது, நஸயீ, திர்மிதி)



நபித்தோழர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாகவே கொடுத்து விடுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புஹாரி)



நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்பே கொடுத்துவிட வேண்டும். அவற்றை ஏழைகளுக்கு வினியோகிக்கும் பொருட்டு முன்னரே கொடுப்பது நல்லது.

3. நோக்கமும் பயனும்:

'நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபடுவதற்குப் பரிகாரமாகவும் எழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்றுக்கொள்ளப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூற்கள்: அபூதாவூது, இப்னுமாஜா, தாரகுத்னீ)

இந்த ஹதீஸில் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாக்கப்பட்டதின் நோக்கம் கூறப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகைக்கு பின்பு நிறைவேற்றுவது ஸகாத்துல் பித்ராக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, சாதாரண தர்மமாகவே அமைந்து விடும்.

4. அளவு:

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாஉ, பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ, பாலாடைக் கட்டியில் ஒரு ஸாஉ, உலர்ந்த திராட்சையில் ஒரு ஸாஉ என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்' என்று அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

ஒரு ஸாஉ என்பது நான்கு முத்துக்கள் ஆகும், ஒரு முத்து என்பது இரண்டு கைகளை சேர்த்து ஒரு முறை அள்ளப்பட்ட கொள்ளளவாகும். அதாவது ஒரு ஸாஉ என்பதன் தோராயமான அளவு 2.5 கிலோ எடையாகும்.

5. கூட்டாக வசூல் செய்வது:

'ரமளானில் ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் என்னை நியமித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 3275)


நபி (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ என்று நோன்புப் பெருநாள் தர்மத்தை நிர்ணயம் செய்திருந்தார்கள். ஒரு மனிதர் மட்டமான பேரீத்தம் பழங்களைக் கொண்டு வந்தார். அதை நபி (ஸல்) அவர்கள் இந்த பேரீத்தம் பழங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி), நூல்: ஹாக்கிம்)

நோன்புப் பெருநாள் தர்மத்தை கூட்டாக வசூல் செய்து பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது என்பதை இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. 'ரமளானில் ஸகாத்தைப்' என்ற வாசகம் அது நோன்புப் பெருநாள் தர்மம்தான் என்பதைச் சொல்கிறது.

முறையாக வசூல் செய்து வினியோகம் செய்யும் போது நோன்புப் பெருநாள் தர்மம் ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் சென்று குவிந்து விடாமல் தடுக்கப்படுவதோடு, 'பெருநாளின் போது ஏழைகளை கையேந்த வைக்காதீர்கள்' என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு ஏற்ப ஏழைகளை அடையாளம் கண்டு அவர்களிடம் சென்று வினியோகம் செய்ய வேண்டும்.


முடிவுரை:

நோன்புப் பெருநாள் தர்மத்தை வசூல் செய்து வினியோகம் செய்ய ஒரு குழுவினரை நியமிப்பது அவசியம். அந்த கடமையை நிறைவேற்றுபவர்கள் தனியொரு நபருக்கு கொடுப்பதை தவிர்த்து, இப்படிப்பட்ட குழுவினரை அடையாளம் கண்டு செலுத்துவதும் அவசியத்திலும் அவசியம்

0 கருத்துகள்:

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online