வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

ரமளான் எதிர்பார்க்கும் இலட்சியம்

ஹதீஸ் தெளிவுரை: எம். ஏ. ஹபீழ் ஸலபி, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை 'யார் பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ-ஹுரைரா (ரலி), ஆதார நூல்: புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூ-தாவூத்). அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனுக்காக நாம் நோன்பு நோற்கின்றோம். நோன்பை நோற்பதன் மூலம் நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டுமோ, அவை ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா என்பதை நாம் சுயபரிசோதனை செய்யக் கடமைப் பட்டுள்ளோம். அல்லாஹ் எவைகளைச் செய்யச் சொன்னானோ, அவற்றை முழு மனதுடன் செய்வது போலவே, எவைகளைத் தவிர்க்கச் சொன்னானோ அவற்றையும் கண்டிப்பாகத் தவிர்ந்து நடக்க வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கும்போது அதற்கான நற்கூலிகள் வழங்கப்படும். எவைகளை அல்லாஹ் தேவையில்லை என்ற தடுத்தானோ, அவை மீறப்படும்போது தண்டனையைத் தயார் படுத்துகின்றான். ஒவ்வொரு நிமிடமும் நான் ஒரு அடிமை என்ற நன்றி உணர்வோடு நாம் வாழ வேண்டும். குறிப்பாக ரமழான் மாதத்தில் மிகுந்த பக்குவத்துடன் அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். தீமைகளை விட்டும் தூரமாகி, பரிசுத்தமான வாழ்வின் பக்கம் மீள வேண்டும். இதையே அல்லாஹ் எதிர்பார்க்கிறான். எந்த இலட்சியத்தை அடைவதற்காக நோன்பு நம்மீது கடமையாக்கப்பட்டதோ, இந்த உன்னத இலட்சியத்தை மறந்து விடுகிறோம். எல்லோரும் நோன்பு நோற்கிறார்கள் என்பதற்காக நாமும் நோன்பு நோற்று, பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் எத்தகைய நன்மையும் கிட்டுவதில்லை. எனவே, நோன்பாளிகள் எவற்றைத் தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டுமோ, அவற்றைத் தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நோன்பு நோற்பதினூடாக மனிதனிடம் என்ன எதிர்பார்க்கப்படுகின்றது என்பதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் மேலே சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. ஒரு முஃமின் தனது வாழ்வின் ஒவ்வொரு கனப் பொழுதிலும் அல்லாஹ்வை அஞ்சி வாழ்வதோடு, தீமைகளை விட்டும் ஒதுங்கி இருக்க வேண்டும். பொய், புரட்டு, பித்தலாட்டம், தவறான நடவடிக்கைகள் போற்றவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். அதே போல் நோன்பு காலங்களில் கண்டிப்பாக தீய நடவடிக்கைளிலிருந்து மிகத் தூரமாகி இருக்க வேண்டும் என்பதையே மேற்குறிப்பிட்ட நபிமொழி நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. நபி(ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு நாம் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால் ரமழான் நம்மில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நோன்பைப் பாழ் படுத்தும் நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் சர்வ சாதாரணமாக ஈடுபட்டுக் கொண்டே தாங்கள் நோன்பாளிகள் என்கின்றனர். அதனால்தான், பல ரமழான் மாதங்கள் நம்மைக் கடந்து சென்றாலும் நம்மில் எத்தகைய மாற்றமும் நிகழவில்லை. எப்போது அல்லாஹ் அருளிய வேதம் அல்-குர்ஆனும், அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறியும் புறக்கணிக்கப்படுகின்றதோ, அப்போது நாம் பெறும் பேறுகள் வெறும் பூஜ்ஜியமாகவே இருக்கும். எனவே நபி(ஸல்) அவர்களிள் எச்சரிக்கைக்கு நாம் முக்கியத்துவம் அளித்து நம்முடைய நல் அமல்களை நாம் பாழ்விடுத்தி விடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இறையச்சமில்லாத எந்த ஒரு வணக்கத்தையும் அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான். சிறிய அளவே அமல் செய்தாலும், செய்த அந்த அமல் இறையச்சத்துடன் அமைந்து விடுமானால் இறைவன் பூரண திருப்தி அடைவான் இறை திருப்தியை மட்டும் நாடி மட்டும் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வணக்க வழிபாட்டை, அற்பமான தீய நடிவடிக்கைகளால் வீணாக்கி விடக்கூடாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்மறை குர்ஆனிலே கூறுகிறான்:'ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்' (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகரா - 183 வது வசனம்). இவ்வசனத்தின் மூலம் நோன்பு எதற்காக என்பதை வல்ல அல்லாஹ் தெளிவாகக் சுட்டிக் காட்டுகிறான். எனவே நோன்பு நோற்பதால் சிறந்த இறையச்சம் ஏற்பட வேண்டும். நோன்பு நோற்றிருக்கும் வேளையில் நமது வீட்டிலிருக்கும் உணவை இறையச்சத்தின் காரணமாக உண்ணாமல் தவிர்த்து விடுகிறோம். நாம் தனியே இருக்கும் போது யாரும் பார்ப்பதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் தனியே இருக்கும் வேளையில் யாரும் பார்க்கமாட்டார்கள் என்றாலும், எல்லாம் வல்ல அல்லாஹ் ஒவ்வொரு கனமும் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிற நம்பிக்கை நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விட்ட காரணத்தால் நாம் நோன்புடைய வேளைகளில் சாப்பிடுவதில்லை. இதேபோல் ரமழான் அல்லாத காலங்களிலும் வல்ல அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்று உறுதியாக நம்ப வேண்டும். ரமழானில் விலக்கப்பட்ட காரியங்களைச் செய்ய முயலும்போது, இறைவனுக்குப் பயந்து அனுமதிக்கப்பட்ட காரியங்களைச் செய்வதையே நாம் தவிர்ந்து கொண்டதை சிந்திக்க வேண்டும். நம்மிடம் ஹலாலான உணவு இருந்தும், நோன்புடைய காலங்களில் நாம் உண்ணுவதில்லை. கட்டிய மனைவி இருந்தும் நோன்புடைய பகல் வேளைகளில் மனைவியைத் தீண்டுவதில்லை. இந்த ஆன்மீகப் பயிற்சிதான் நோன்பு கடமையாக்கப் பட்டதற்கான காரணம். இந்த ஆன்மீகப் பயிற்சியைப் பற்றிதான் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள். 'பசித்திருப்பதல்ல நோன்பின் நோக்கம்' என்பதை ஆழமாக விளக்குவதோடு, நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி எத்தகைய மாற்றங்களை நம்மிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளார்கள். -: பொய் பேசாமை பொய் பேசுவது பெரும்பாவங்களில் ஒன்றாகும் என்று அருள்மறை குர்ஆன் கூறுகிறது. 'ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்; ''என் இறைவன் அல்லாஹ்வே தான்!'' என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.'' (அத்தியாயம் 40 ஸூரத்துல் முஃமின் - 28வது வசனம்) '..(நபியே!) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ்; இத்தகைய அநியாயக்காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.' (அத்தியாயம் 6 ஸூரத்துல் அன்-ஆம் 144வது வசனத்தின் கடைசிப் பகுதி என அருள்மறை குர்ஆன் கூற, புனிதமிக்க ரமழானில்தான் பொய்களை அதிகமாகப் பேசுகின்றனர். மார்க்கம் என்ற பெயரால் புனைந்துரைத்து, சிறப்புக்கள் என சில 'அமல்'களையும் அதற்கான கூலிகளையும் அள்ளி வீசுகின்றனர். இறை இல்லங்களில் அல்லாஹ்வின் வேதமும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் தூய்மையானப் போதனைகளும் பேசப்படுவதற்குப் பதிலாக போலிகளை உலவ விடுகின்றனர் நம்மில் பலர். இவர்கள் நபி(ஸல்) அவர்களின் போதனைகளையும், எச்சரிக்கைகளையும் கவனத்தில் கொள்வதில்லை 'உண்மையைக் கடைப்பிடியுங்கள். உண்மை நன்மையின் பக்கம் வழிகாட்டும். ஒரு மனிதன் உண்மையே பேசி, அதிலேயே தொடர்ந்து இருப்பானாயின் அல்லாஹ்விடத்தில் அவன் உண்மையாளன் எனப் பதியப்படுகின்றான். பொய்யைப் பயந்து கொள்ளுங்கள். ஏனெனில், பொய் தீமையின் பக்கம் வழிகாட்டுகிறது. ஒரு மனிதன் பொய்யுரைத்து அதில் மூழ்கியிருப்பானாயின் அல்லாஹ்விடத்தில் பொய்யன் எனப் பதியப்படுகின்றான்' என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி), ஆதார நூல்: புகாரி, முஸ்லிம் பொய் பேசுகிறவன் அல்லாஹ்விடத்தில் பொய்யன் எனப் பதியப்பெறுவதுடன், அவன் செல்லுமிடம் நரகமாகவும் இருக்கும். இன்று நம்மவர்கள் மத்தியில் பொய் பேசுவது மலிந்துள்ளது. எவ்வளவோ பேர் மார்க்கத்தின் பெயரால்; எத்தனையோ பொய் சொல்கிறார்கள். நம்மில் அதிகமானவர்களிடம் பொய் சொல்வது ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணம் உள்ளது. அதனால்தான் சர்வ சாதாரணமாக, சளைக்காமல் பொய் சொல்லும் கலையில் ஆற்றல் பெற்றுத் திகழ்கின்றார்கள். பொய் சொல்வதைப் பெரிய திறமையாகவும் கருதுகின்றார்கள். பொய் சொல்லாமல் இந்தக் காலத்தில் எப்படி வாழமுடியும் என்று முஸ்லிம்களே கேள்வி கேட்கும் நிலை! பொய் சொன்னால் மறுமையில் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமும் முஸ்லிம்களிடம் எடுபட்டுப் போய்விட்டது 'எவனிடம் நான்கு விடயங்கள் இருக்கின்றனவோ, அவன் நயவஞ்சகனாவான். நான்கில் ஒன்றிருந்தாலும் நயவஞ்சகத்தின் ஒரு பகுதி உள்ளவனாவான். அதைவிடும் வரை நயவஞ்சகனாவான் .1. பேசினால் பொய்யுரைப்பான் 2. வாக்களித்தால் மாறு செய்வான் 3. வழக்காடினால் அநீதியிழைப்பான் 4. உடன்படிக்கைச் செய்தால் அதை மீறுவான். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.) இன்று எமது வியாபாரம், கொடுக்கல், வாங்கல், குடும்ப விவகாரம், அண்டை அயலவர்கள் தொடர்பு என்று எல்லா அம்சங்களிலும் முஸ்லிம்களிடம் பொய் மிகைத்து நிற்கிறது. எனவே இந்த நோன்பின் மூலம் பயிற்சி பெற்று, பொய் சொல்வதிலிருந்து எம்மைத் தடுத்துக் கொள்ளவில்லையானால் நாம் நோன்பு நோற்கவில்லை. வெறும் பட்டினிதான் கிடந்துள்ளோம் என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக ரமழான் காலங்களில் மார்க்கம் அதன் சிறப்பு என்ற பெயரால் பொய் போசுவது கண்டிப்பாக நிறுத்தப்படவேண்டும். தமக்குத் தோன்றியதையெல்லாம் மார்க்கம் என்று பேசும் மடமை நிலை மாற வேண்டும். 'கேள்விப்பட்டதையெல்லாம் ஒருவன் பேசுவது அவன் பொய்யன் என்பதற்குப் போதிய ஆதாரமாகும்' (முஸ்லிம்). மார்க்கம் என்ற பெயரில் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்படுவதும், தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலமாக மக்களுக்கு ஒலி-ஒளி பரப்பப்படுவதும் சிலருக்கு ஆதாரமாகிகிட்டது. மூன்று நாள், பத்து நாள், நாற்பது நாள் என்று ஊரை விட்டு அடுத்த ஊருக்குச் சென்று வந்தவர்களெல்லாம் தமது வாயில் வந்ததெல்லாம் மார்க்கம் என்று பேசி தூய்மையான இஸ்லாத்தை மலினப் படுத்துகிறார்கள். எங்கோ கேட்டதெல்லாம் மார்க்கம் என்று ஒரு சாரார் பேசும்போது மற்றொரு சாரார் பக்தி சிரத்தையோடு கேட்கின்றனர். இது ரமழான் காலங்களில் அதிகரித்து வருகிறது. நபி(ஸல்) அவர்களின் மீது இட்டுக் கட்டுவதும், பொய் கூறுவதும் தனது இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்வதற்குரிய கொடிய குற்றமாகும். மக்களின் பாமரத் தன்மையைப் பயன்படுத்தி இவ்வாறு நடந்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு இறை இல்ல நிர்வாகங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 'மாபெரும் சதியாதெனில், மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும்' (அஹ்மத்) எனவே நாவை அடக்குவது அவசியம். நாவினால் ஏற்படும் பெரிய தீமை பொய்யாகும். ஆகவே பொய்யுரைக்காது நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பொய், வாழ்க்கையின் எந்தத் துறையிலும் நுழைந்துவிடாதவாறு இஸ்லாம் மிகக் கவனமாக வழி நடத்துகிறது. பொய், பொய்சாட்சி, பொய் சத்தியம், பொய் வாதம், மார்க்கத்தின் பெயரால் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுதல் போன்ற தீய கொடூரங்களை, துரோகங்களைத் தவிர்ப்பதற்காக நோன்பு என்கிற ஆன்மீக பயிற்சிக் கூடத்தை இஸ்லாம் ஒருமாத காலம் ஏற்பாடு செய்து தந்துள்ளது. அடியான் பட்டினி கிடப்பதால் எஜமானனுக்கு எந்தவித நன்மையும் ஏற்பட்டு விடுவதில்லை. கடமையான நோன்பினை ஒரு மாத காலம் இறை நம்பிக்கையாளர்களிடம் நோற்கச் செய்துவிட்டு, அவர்கள் பொய் சொல்லாமல், பொய்யான, தீமையான நடவடிக்கைளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என அல்லாஹ் எதிர்பார்க்கிறான். இந்தப் பண்புகளை தன் அடியார்களிடமிருந்து வெளிப்படுத்தவே நோன்பைக் கடமையாக்கியுள்ளான். ரமழானுக்குப் பின்னரும் இந்த நல்ல பண்புகள் தொடருமானால், இறை நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் சகோதரத்துவ இணக்கம், நம்பிக்கை, நல்லுறவு நிலவும். 'எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசிக்கிறாரோ அவர் நல்லதைப் பேசட்டும், அல்லது மௌனமாக இருக்கட்டும்' (புகாரி, முஸ்லிம்).

0 கருத்துகள்:

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online