ராஜகிரி :முஹர்ரம் புத்தாண்டு செய்தி-1431 (2009)
ராஜகிரி : முஹர்ரம் புத்தாண்டு பிறந்துள்ளது. ஹிஜ்ரி 1430 கழிந்து 1431 துவங்கயுள்ளது. முஸ்லிம் உம்மத்தின் அவலங்களின் பட்டியல் நீண்டு சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் புத்தாண்டு வருகை தந்துள்ளது.
ஆனால் இவை அனைத்தையும் விட கவலைக்குரிய விடயம் யாதெனில் முஹர்ரம் புதுவருடப் பிறப்பைப் பற்றியோ முஸ்லிம் உம்மத்தின் அவலங்கள் பற்றியோ எத்தகைய பிரக்ஞையுமின்றி எம் சமூகம் இருப்பதுதான்.
இஸ்லாமிய உம்மத்தின் மீது அதன் எதிரிகள் மேற்கொண்ட சிந்தனா ரீதியான கலாசாரப் படையெடுப்பின் விளைவினால்தான் அது (முஸ்லிம் உம்மத்) இத்தகைய உணர்ச்சியற்ற- உயிரோட்டமில்லாத நிலையை அடைந்துள்ளது.
முஹர்ரம் புதுவருடத்தை விட ஜனவரி முதல் திகதியை அலட்டிக்கொள்ளும் அளவுக்கு, உம்மத்தின் அவலங்களைவிட, வீண்கேளிக்கைகள், விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகள் முதலானவை முன்னுரிமைப் பட்டியலில் முக்கியத்துவம் பெறும் அளவுக்கு முஸ்லிம்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கின்றனர்.
முஹர்ரம் எமக்கு ஹிஜ்ரத்தை நினைவுபடுத்துகிறது. நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்வுகள் இடம்பெற்றிருக்க கலீபா உமர் (றழி) அவர்கள் ஹிஜ்ரத் சம்பவத்தை வைத்தே இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்படல் வேண்டும் எனத் தீர்மானித்து, முஹர்ரமை வருடத்தின் முதல் மாதமாக அமைத்தார்கள்.
ஹிஜ்ரத், நபி (ஸல்) அவர்களின் வாழ்விலும், இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலும் ஒரு திருப்புமுனை என்பதை அன்னார் கண்டமையே இதற்குக் காரணம். ஹிஜ்ரத்தின் பின்பே இஸ்லாத்திற்கென்று ஒரு பூமி, நாடு, சமூகம் என்பன தோன்றின.
இஸ்லாம் உலகில் ஒரு சக்தியாக உருவெடுத்தது. நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவப் பணி முழுமை பெற்று வெற்றி பெறுவதற்கு ஹிஜ்ரத் ஒரு பீடிகையாக அமைந்தது.
ஹிஜ்ரத் நிகழ்ச்சி நமக்குப் புகட்டிநிற்கும் பாடங்கள் பல. இஸ்லாத்தை உலகில் ஸ்தாபிப்பதற்கு அல்லாஹ்வின் உதவியுடன் அதனை ஏற்றவர்களின் தியாகம், அர்ப்பணம் அவசியம்.
இவற்றோடு பௌதீக காரணிகளைக் கருத்திற் கொண்டு திட்டமிட்ட அடிப்படையில் கருமமாற்ற வேண்டும். அப்போதுதான் இஸ்லாம் உலகில் வாழும், வலுப்பெறும். ஹிஜ்ரத் சொல்லித் தரும் சில பாடங்கள் இவை.
நபி (ஸல்) அவர்களின் இத்தகைய வழிகாட்டல்களை முஸ்லிம் உம்மத் மறந்ததனாலேயே அது இன்றைய இழி நிலையை அடைந்துள்ளது. எனவே, முஸ்லிம்கள் அவர்களின் இஸ்லாத்தை நோக்கித் திரும்பினால் அன்றி வாழ்வில்லை, மறுமைக்கு முன்னால் இம்மை வாழ்வுகூட வளம்பெறப் போவதில்லை.
கடந்த பல தசாப்தங்களாக முஸ்லிம் உலகம் இஸ்லாம் அல்லாத கொள்கைகளை பரீட்சித்துப் பார்த்து படுதோல்வி கண்டுள்ளது. இந்த கசப்பான அனுபவங்கள் அதற்கு நல்லதொரு பாடமாக அமைதல் வேண்டும். மீண்டும் மிக வேகமாக இஸ்லாத்தை நோக்கி அது மீளுதல் வேண்டும். இதுவே முஸ்லிம் உலகின் நலனில் அக்கறையுள்ளவர்கள் விடுக்கக்கூடிய புத்தாண்டுச் செய்தியாக முடியும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக