ராஜகிரி : பொய் பேசாதீர் உண்மை பேசுக!
ராஜகிரி :பொய் பேசாதீர் உண்மை பேசுக!
அப்போது அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119.
பொய்
நாம் ஒரு நாளைக்கு எத்தனையோ தடவை பொய் சொல்கிறோம். அலுவகத்தில், நமது வீட்டில், நமது உறவினர்களிடத்தில், இன்னும் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் எந்த வித கூச்சமோ, அல்லாஹ்வின் பயமோ இன்றி பொய் சொல்கிறோம்.
பொய் சொல்வது பெரிய குற்றமா என்று கூட நாம் நினைக்கிறோம். கைபேசிகள் (மொபைல் போன்) வந்த பிறகு இந்த பொய்யின் அளவு அதிகமாகிவிட்டது.
நான் ட்ராஃப்பிக்கில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு, அப்போது தான் வீட்டிலிருந்தே கிளம்புகிறார்கள். நம்மிடம் ஒருவர் கடன் கேட்கிறார், அல்லது அவர் கொடுத்த கடனை திரும்பி கேட்க கைபேசியில் அழைத்தால், நான் மீட்டிங்கில் இருந்தேன், அலுவகத்தில் வேளை அதிகம், ஆதலால் உங்களிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்: ‘நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி, அதை அவர் உண்மையென்று கருதிக்கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.’
அறிவிப்பாளர் : ஸுஃப்யான் பின் அஸீத் ஹள்ரமீ
(அபூதாவூத்)
ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!’ என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?’ என்று வினவினார்கள்.
அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன்’ என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர்
ஆதாரம்: அபூதாவூத்
சில சந்தர்ப்பங்களில் நம் குழந்தைகளையும் நாம் தான் பொய் சொல்ல பழக்குகிறோம் என்பது மனதிற்க்கு வருத்தத்தை தரக்கூடிய விஷயம். என் நண்பர் ஒருவர் விளையாட்டாக கூறினார். அதாவது அவருடைய தந்தையை பார்க்க தந்தையின் நண்பர் வந்த போது, தான் இல்லை என்று சொல்லுமாறு கூறிவிட்டு கழிவரைக்கு சென்று ஒழிந்து கொண்டிருக்கிறார்.
இதைப் பார்த்து விட்ட நண்பர் அவர் (தந்தையின் நண்பர்) வந்து கேட்ட போது தன்னுடைய தந்தை கழிவரைக்குள் இல்லை என்று சொல்லிவிட்டார். (அதற்க்காக அடி வாங்கியது தனி கதை). இது சிரிப்பதற்க்காக என்னிடம் சொல்லப்பட்டாலும், நான் பலமுறை யோசிப்பது என்னவெனில் குழந்தைகள் தன்னுடைய தாய், மற்றும் தந்தைகளிடத்தில் இருந்து தான் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கின்றனர்(நாம் பேசும் பொய் உட்பட). நாம் சொல்லுகின்ற, செய்கின்ற செயல்களை நம் குழந்தைகள் நன்கு கவனித்து வருகின்றனர்.
உங்கள் பிள்ளைகளை சிறந்த முறையில் நடத்துங்கள். அவர்களது பழக்கவழக்கங்களை செம்மைப்படுத்துங்கள். ஏனெனில் உங்கள் குழந்தைகள் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவர்களாகும். (இப்னு மாஜா)
எந்தவொரு பிள்ளைக்கும் அவரது பெற்றோர் அழகிய நல்லொழுக்கத்தைவிட எதனையும் சிறப்பாக கொடுத்து விட முடியாது. (புகாரி)
சிரிக்க வைக்க பொய்
நம்மில் சிலர் மக்களை சிரிக்க வேண்டும் என்பதற்காக உண்மையுடன் பொய்யை கலக்கின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்குக் கேடும் தோல்வியும் உண்டாகட்டும்! அவனுக்கு அழிவு காத்திருக்கிறது.’
அறிவிப்பாளர் : பஹ்ஸ் பின் ஹகீம்
ஆதாரம்: திர்மிதி
நயவஞ்சகத்தின் அடையாளம் பொய்
நான்கு செயல்கள் இருக்கின்றன. அவை எவனிடம் குடிகொண்டிருக்கின்றனவோ அவன் கலப்பற்ற நயவஞ்சகனேயாவான். அன்றி அவற்றில் ஒரு செயல் எவரிடம் இருக்கிறதோ அவர் அதனைக் கைவிடாதவரை அவரிடம் நயவஞ்சகத்தன்மை குடி கொண்டிருக்கிறது.
அவை: 1) பேசினால் பொய் பேசுவது. 2) அமானிதம் ஒப்படைக்கப்பட்டால் அதனை மோசம் செய்வது. 3) வாக்குறுதி அளித்துவிட்டு அதை மீறுவது. 4) (வாய்ச்) சண்டையிட்டால் ஒருவர் மீது அநியாயமாக பழிசுமத்தி அவதூறு கூறுவதுமாகும்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.''
அறிவிப்பவர்: இப்னு உமர்
ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ
எப்போது பொய் சொல்லலாம்:
'மக்களே! உங்களுக்கு என்ன நேர்ந்தது விட்டது. ஈசல் விளக்கில் மொய்த்து மடிவது போன்று நீங்கள் பொய்மைக்குப் பலியாகி விடுகிறீர்கள். பொய்கள் அனைத்தும் ஆதமுடைய வழித்தோன்றல்கள் மீது ஹராமாகும் மூன்று செயல்களைத் தவிர. அதாவது:
1) கணவன் தம் மனைவியைத் திருப்தியுறச் செய்ய அவளிடம் பொய் கூறுதல்.
2) போரில் ஒருவர் பொய் கூறுதல்.
3) இரு முஸ்லிம்களுக்கிடையில் உள்ள பிணக்கை நீக்கும் பொருட்டு ஒருவர் பொய் கூறுவது ஆகும்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அஸ்மாஃபின்து யஜீது
ஆதாரம்: திர்மிதீ
பொய்யை விடுவதால் ஏற்படும் நன்மைகள்
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: ‘தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கின்றேன்.
வேடிக்கையாக பேசுபவனாயினும் பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கின்றேன். தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்.
அறிவிப்பாளர் : அபூஉமாமா
(அபூதாவூத்)
நாம் அன்றாட வாழ்க்கையில் பொய்யை தவிர்த்து உண்மை பேசி, மேற்கூறிய தண்டனைகளை விட்டும் எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் காப்பாற்றி நம் அனைவரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து, சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக.
அன்புடன்
அபு நிஹான்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக