ராஜகிரி :பாவத்தை போக்குமா பராஅத் இரவு?
ராஜகிரி :பாவத்தை போக்குமா பராஅத் இரவு?
நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.
இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)
மற்றொரு ஹதீஸில் வருகிறது
நபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) நூல் : புகாரி (7280)
அன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்” பராஅத் இரவு” என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி (ஸல்) செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா? அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா? அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா? நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்,
மேலும் ”பராஅத் இரவு” என்பதற்கு அரபியில் ”லைலத்துல் பராஅத்” என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும்.
மேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் ” பராஅத் நோன்பு” என்று வைக்கிறீர்களே இதையாவது நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்று உங்களால், காட்ட முடியுமா? நிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்தி ருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தா பீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்
وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல்: இஆனா பாகம் : 2 பக்கம் : 273)
மத்ஹபைப் பின்பற்றுபவர்கள், மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறார்கள்.
ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)
ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப், இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )
فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)
(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத்ஹýல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )
وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)
பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)
அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோ அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது, பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
குர்ஆனிலும், ஹதீஸிலும் ஏன் இவர்கள் பின்பற்றும் மத்ஹபுகளிலிருந்தும் பராஅத் இரவு மார்க்கத்தில் நுழைவிக்கப்பட்ட புதிதான காரியம் என்று சொன்ன பிறகும் சிலர் விடாப்படியாக விதண்டாவாதம் செய்து கொண்டு தங்களுடைய கருத்தை நியாயம் கற்பிக்கும் வண்ணம் செயல்படுவது மார்க்கத்தில் கண்டிக்கத்தக்கது
இவர்கள் எடுத்துக்காட்டிய ஹதீஸ்களின் ? நிலையென்ன என்பதை பார்ப்போம்.
முதலாவது செய்தி:
ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து என்னிடம் தெரிவித்தார்கள். இந்த ஷஃபான் மாதத்தின் 15 வது இரவாகும். கல்ப் கோத்திரத்தாரின் ஆடுகளின் உரோமங்கள் அளவிற்கு நரகத்திலிருந்து விடுதலை செய்கிறான்.
இந்த ஹதீஸ் பைஹகியின் ஷ‚ஃபுல் ஈமான் பாகம் 3 பக்கம் 383 ல் இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸை பதிவு செய்த இமாம் அவர்கள் இந்த ஹதீஸின் அடிக்குறிப்பில் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று தெரிவிக்கிறார்கள்.
இரண்டாவது செய்தி:
ஷஃபான் மாதத்தின் 15 நாளின் இறைவன் அடியார்களின் பக்கம் நெருங்கி வருகிறான். இணைவைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன் ஆகிய இருவர்களைத்தவிர மற்ற எல்லேரையும் மன்னிக்கிறான்.
இந்த ஹதீஸை இப்னு மாஜா போன்ற நூற்களில் இடம் பெற்றுள்ளது. என்றாலும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரிலும் மூன்று விதமான குறைகள் இருக்கிறது.
ஒன்று இப்னு லஹீஆ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் மூளை குழம்பியவர். இவர் மூளை குழம்பிய நிûயில் அறிவிக்கப்படும் செய்திகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
இரண்டாவது வலீத் பின் முஸ் ம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் மோசமாக தத்லீஸ் (அதாவது தனக்கு முன்னால் உள்ள பலவீனமான அறிவிப்பாளரை விட்டு அறிவித்தல்) செய்பவர்.
மூன்றாவது இப்னு அஸ்ரப் என்பவர் அபூ மூஸா அவர்களை சந்திக்க வில்லை என்பதாக இமாம் ஹாபிழ் முன்திரி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மூன்றாவது செய்தி:
ஷஃபான் மாதம் 15 வது இரவில் இறைவன் நெருங்கி வருகிறான். இருவரைத்தவிர அனைவான் பாவத்தையும் மன்னிக்கிறான். பகமை பாராட்டுபவன். கொலை செய்தவன் இவ்விருவரயும் இறைவன் மன்னிப்பதில்லை.
நூல்: அஹ்மத் (6353)
இந்த செய்தி அஹ்மதில் இடம் பெற்றுள்ளது. எனினும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இப்னு லஹீஆ என்பவரும் ஹயய் இப்னு அப்தில்லாஹ் என்பவரும் இடம் பெற்றுள்ளனர். இரண்டு நபர்களும் ஹதீஸ் துறை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர்கள். எனவே இதுவும் பனகீணமான ஹதீஸாகும்.
நான்காவது செய்தி:
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ஒரு நாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் படுக்கையில் காணவில்லை. அவர்களைத்தேடி வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் பகீஃ அடக்கஸ்தலத்தில் இருந்தார்கள். என்னைக் கண்டவுடன் சொன்னார்கள். ஆயிஷாவே அல்லாஹ்வும் அவனது தூதரும் உனக்கு துரோகம் இழைத்து விடுவார்கள் என்று பயப்படுகிறாயா? அதற்கு நான் அவ்வாறில்லை நீங்கள் மனைவியரிடத்தில் ஒருவரிடத்தில் வந்திருப்பீர்கள் என்று என்னினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக இறைவன் ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் இரவில் இறங்கிவருகிறான். மேலும் கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளின் என்னிக்கையை விட அதிகமானவர்களின் பாவங்களை மன்னித்துவிடுகிறான்.
நூற்கள் : அஹ்மத் திர்மிதி இப்னுமாஜா
இந்த செய்தியும் மேலே குறிப்பிட்ட நூற்களில் உள்ளது. இந்த செய்தியின் முடிவில் திர்மிதி (ரஹ்) அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பாருங்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் மூலமாக வரக்கூடிய இந்த செய்தியை ஹஜ்ஜாஜ் பின் என்பவரிடமிருந்தான் அறிகிறோம். இமாம் புகாரி அவர்கள் இந்த செய்தியை பலவீனமானதாக கருதினார்கள். இன்னும் யஹ்யா பின் கஸீர் என்பவர் உர்வாமிருந்து எதை கேட்க வில்லை. ஹஜ்ஜாஜ் என்பவர் யஹ்யா பின் அபீகஸீர் என்பவரிடம் எதையும் கேட்கவில்லை.
இந்த செய்தி பலவீனமானது என்று இதை படிக்கக்கூடிய எவரும் விளங்கி கொள்வார். ஆனால் அல்லாஹ் இவர்களின் இதயத்திலும் பார்வையுலும் திரையை அமைத்துவிட்டான்.
ஐந்தாவது செய்தி:
ஷஃபான் மாதம் 15 வது நாள் வந்து விட்டால் அன்றைய இரவு தினத்தில் நின்று வணங்குங்கள் அன்றைய பகலில் நோன்பு வையுங்கள். ஏனெனில் அவ்விரவில் இறைவன் கூறுகிறான். என்னிடம் பாவமன்னிப்பு தேடுபவர் உண்டா? நான் அவர்களை மன்னித்து விடுகிறேன். என்னிடம் ரிஜ்க் தேடுபவர் உண்டா? நான் அவர்களுக்கு ரிஜ்க் தருகிறேன். என்னிடம் கேட்போர் உண்டா? நான் அவர்களுக்கு வழங்குகிறேன். இவ்வாறு சுப்ஹ் நேரம் வரும் பலவற்றை சொல் கேட்டு கொண்டே இருப்பான்.
நூல்: இப்னு மாஜா.
இந்த செய்தி இப்னு மாஜாவில் இருப்பது உண்மைதான். என்றாலும் இந்த செய்தியும் பலவீனமானது.
இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா என்பவர் இடம் பெருகிறார். இவரை அறிஞர்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். அடுத்து இப்ராஹீம் பின் முஹம்மத் என்பவர் இடம் பெருகிறார். இவர் யாரென்று அறியப்படாதவர் என்ற காரணத்தினால் இந்த செய்தியை நாம் ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.
ஆறாவது செய்தி:
உங்களில் மரணித்தவர்களுக்கு யாஸீன் ஓதுங்கள்.
நூற்கள் அஹ்மத் அபூதாவுத் இப்னுமாஜா.
இந்த செய்தி மேற்கண்ட நூற்களில் இடம் பெற்றிருப்பது உண்மைதான். என்றாலும் இந்த செய்தியிலும் அபீ உஸ்மான் என்பவரும் அவருடைய தந்தையும் யாரென்று அறியப்படாதவர்கள். எனவே இந்த செய்தியையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் இந்த செய்திகளை நாம் பலவீனமானவைகளாக கருதவில்லை. மத்ஹபு அறிஞர்களும், ஹதீஸ் துறை அறிஞர்களும் பலவீனமானதாக கருதியிருக்கிறார்கள். அதை நாம் மேலே குறிப்பிட்டுயிருக்கிறோம்.
நன்றி : கடையநல்லூர் அக்ஸா.காம்
http://kadayanalluraqsha.com/?p=275
மேலே உள்ள செய்தியில் பிறரை விமர்சிக்ககூடாது என்பதற்காக (மட்டும்) சில வார்த்தைகள், வரிகள் நீக்கப்பட்டுள்ளது, சில வரிகள் விளக்கங்களுக்காக (மட்டும்) சேர்க்கப்பட்டுள்ளது. ஹதீஸ் மட்டும் ஆதாரங்கள் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை.
ஹாஜா மைதீன் (இப்னு அஷ்ரஃப்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக