வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

தலாக்! தலாக்! தலாக்!

திருமணம் என்பது சமுதாயக் கட்டுக்கோப்பின் ஆணிவேர்" என்றான் மேலை நாட்டு அறிஞன் ஒருவன்.


அந்தக் கட்டுக்கோப்பு சிதைந்து வருவது குறித்து நாம் கவலைப் படுகிறோம். சிதைந்து வரும் கட்டுக் கோப்பு மேலும் சிதையாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்தித்து உரிய மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

அண்மைக் காலமாக அதிகரித்து வரும் மணவிலக்குகள், பிரிந்து சென்ற முன்னாள் தம்பதியர் உள்பட யாருக்குமே மகிழ்ச்சியைத் தந்திருக்காது.

"அல்லாஹ் அனுமதித்தவற்றில் அவனிடம் மிகவும் வெறுப்புக்குரியது தலாக்கை விட வேறு எதுவும் இல்லை" என்ற கருத்துடைய நபிமொழியை நாம் அறிந்திருப்போம்.

20,25 ஆண்டுகளுக்கு முன்னர் தலாக் என்ற சொல்லே அருவருப்பான சொல்லாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக்காலமாக "10 கேஸ் பெண்டிங்ல இருக்கு" என்று நாம் கேள்விப்படும் அளவு தலாக் அதிகரித்துள்ளது.

இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன? இதனைக் களைய என்ன செய்ய வேண்டும்? சற்றே அலசுவோம் வாருங்கள்.

பெண்ணுக்கு வீடு கொடுத்தல்



நமது அன்பிற்குரிய மனைவியை, நமது ஈரக்குலைகளைப் பெற்றெடுத்துத் தந்தவளை நமக்கு ஏற்படும் பயங்கர வெறுப்பின் காரணமாக தலாக் சொன்னால், அந்த வெறுப்பான சூழ்நிலையிலும் அவள் இத்தா இருக்கும் காலம் வரை அவளுக்கு இருப்பிடத்தை ஏற்பாடு செய்ய வேண்டியது

நம் மீது கடமை என அல்லாஹ் கூறியிருக்க, நாமோ அன்பாக, பாசமாக இருக்கும் போதும் அவளுடைய வீட்டில்.... இல்லையில்லை அவளுடைய தகப்பனின் (இதுவும் தவறோ?) வீட்டில் ஒண்டிக் கொண்டுள்ளோம்.(இது பற்றி நீண்ட கட்டுரை எழுத வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக நினைத்துக் கொண்டே உள்ளேன். நேரம்தான் கிடைக்கவில்லை. இன்ஷா அல்லாஹ் இதுபற்றி பின்னர்.)

பெண் தன்னுடைய தாய் வீ்ட்டில் அல்லது தகப்பன் தந்த வீட்டில் அல்லது சகோதரன் தந்த வீட்டில் இருப்பது, அவளுக்குப் பொருளாதார ரீதியிலான பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருகிறது. இது நல்லதுதானே என்று எண்ணலாம்.

ஆனால் இதன் தொடர்ச்சியாய் நடைபெறும் நிகழ்வுகள் தலாக்கிற்கு வழி வகுக்கின்றன. மாமியார் தரும் ஆலோசனைகளை மருமகள் ஏற்றுக் கொள்ளத் தயாரானாலும் அவளது உடன் பிறந்தோர் அல்லது அவளது பெற்றோர் உசுப்பேற்றி விடுதல் நாம் அறிந்த ஒன்றே. இது பகையாய் மாறி இறுதியில் தலாக்கில் சென்று முடிகிறது.

பெண்ணுக்கு வீடு கொடுத்தல் என்ற வழக்கத்தால் மாமியார் - மருமகள், கணவன் - மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படுவது தாமதித்து அது தலாக் ஏற்பட வழி வகுக்கிறது என்பது ஒரு புறம். மற்றொரு புறம் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நாளுக்குள் மாமனார் அல்லது மைத்துனர் வீடு கட்டித் தரவில்லை போன்ற காரணங்களாலும் தலாக் நடைபெறுகிறது.

திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் இணையம்

இன்றைய சமுதாயத்தின், குறிப்பாக இளைய சமுதாயத்தின் எண்ணச் சுழற்சியால் அவர்களது எதிர்பார்ப்புகள் மாறி வருகின்றன. திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் இன்றைய மக்களின் வாழ்க்கை முறையைப் பாதிக்கும் முக்கியக் கூறுகளாக உள்ளன. அவற்றில் காட்டப்படும் நமது கலாச்சாரத்திற்கு ஒவ்வாத வேற்று கலாச்சாரக் காட்சிகளை தொடர்ந்து பார்ப்பதன் மூலம், அக்காட்சிகளுக்குப் பழகத் தொடங்கி, இறுதியில் அக்காட்சிகள் தன்னுடைய வாழ்வில் நடைபெறவில்லையே என்று எண்ணத் தொடங்குகின்றனர்.

திரைப்படங்களில் அழகுமிக்க நங்கையாகக் காண்பிக்கப்படும் நடிகைகளை ஆதர்ச நாயகிகளாக எண்ணிக் கொள்கின்றனர். இயற்கைக்கு மாற்றமாய் திரைப்படங்களில் காண்பிக்கப்படும் காதல் காட்சிகளை உண்மை என நம்பி, தம்முடைய வாழ்க்கையில் அத்தகைய அனுபவங்கள் கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றம் ஏற்படத் தொடங்குகிறது. மனதில் ஏற்பட்ட இந்த ஏமாற்றத்தின் விளைவாய் சின்னஞ்சிறு ஊடல்கள் கூட பெரிதாக உருவெடுத்து தலாக்கிற்கு வழி வகுக்கிறது.

தொலைத் தொடர்பு

20, 25 ஆண்டுகளுக்கு முன்னரெல்லாம் வெளிநாடு என்றில்லாமல் சென்னையில் இருப்பவர்கள் கூட தங்கள் குடும்பத்தாருடன், மனைவியுடன் கடிதங்கள் மூலமே தொடர்பு கொள்வர். கோபமோ, மகிழ்ச்சியோ.... அதனை வெளிப்படுத்துவது நம்முடைய கடிதங்கள்தான். மனைவிக்கு / நண்பனுக்கு / பெற்றோருக்கு கடிதம் எழுதுவதற்காகவே வேலைக்கு விடுப்பு எடுத்தவர்கள் பற்றியும் நகைச்சுவையாக நான் கேள்விப்பட்டதுண்டு.

உலகமயமாக்கலின் பக்க விளைவுகள்  ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் இரண்டு மொபைல் போன்கள் என்ற நிலை. (எனக்குத் தெரிந்து ஒரு நபரைத் தவிர) கடிதம் எழுதுவது முழுமையாக மறைந்துவிட்டது. மகிழ்ச்சியோ... கோபமோ... உடனே எண்களைச் சுழற்றி, மனைவியைப் பாராட்டி அல்லது திட்டிவிட்டால்தான் நம் மனம் ஆறுதல் அடைகிறது. இது மணமுறிவை ஏற்படுத்தும் கருவியாக இன்று மாறியுள்ளது வேதனைப்பட வேண்டிய ஒன்று.

கடிதம் எழுதுபவர்கள் இரண்டு பத்தி எழுதிவிட்டு மூன்றாவது பத்தியை எழுதும் முன் இதற்கு முன் என்ன எழுதியிருக்கிறோம் என்று மீண்டும் வாசித்துவிட்டு மூன்றாவது பத்தியை எழுதுவார்கள். எழுதியவற்றை அடித்துவிட்டு, புதிததாக எழுதி.... பின்னர் அதனையும் திருத்தி ஒருவாறாக போஸ்ட் செய்யலாம் என்று நினைக்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை அல்லது அதற்கும் மேல் வாசித்துவிட்டு அனுப்புவார்கள். சிலபோது கோபம் தணிந்திருக்கும். எனவே, எழுதிய கடிதத்தைக் கிழித்துவிட்டு, புதிதாக எழுதி அனுப்புவார்கள்.

ஆனால் இன்றோ நிலைமை அவ்வாறில்லை. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்றொரு பழமொழி நாம் அறிந்திருப்போம். அப்படி நம் புத்தி மட்டாக இருக்கும் நிலையில் தொலைபேசி மூலம் பேசி, எதிர் முனையில் உள்ள மனைவியின் புத்தியையும் மட்டுப்படுத்தி, இறுதியில் தலாக் வரை சென்றுவிடுகிறது.

என்னதான் தீர்வு?

1. பெண்ணுக்கு வீடு கொடுத்தல் என்ற இறைக்கட்டளைக்கு மாற்றமான வழக்கத்தை மாற்ற முயல வேண்டும்.

2. திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் காண்பவை நிஜம் அல்ல என்று நம் இளைஞர்களுக்கு உணர்த்த வேண்டும். அவ்வாறு உணரும் வயது அவர்களுக்கு வரும் வரை தொலைக்காட்சி மற்றும் இணையத் தொடர்பை அவர்கள் கையாள அனுமதிக்கக் கூடாது.


3. கோபமான நேரங்களில் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.



இதனைவிட மிக முக்கியமான ஒன்று உள்ளது. கவுன்சிலிங்!

ஆம். புதிததாகத் திருமணம் ஆன தம்பதிகளுக்கு ஆலோசனைகளைச் சொல்வது. திருமணமான புதிதில் ஏற்படும் பிணக்குகள், இல்லறத்தில் ஏற்படும் தொய்வுகள் போன்றவை குறித்து வயதானவர்கள் இளைஞர்களுக்குச் சொல்லித் தர வேண்டும். "இப்படி பலருக்கும் ஏற்படுவதுண்டு. உனக்கும் ஏற்படக் கூடும்" என்று அவனை மனதளவில் தயார்படுத்திவிட்டால், பின்னர் தொய்வுகள், பிணக்குகள் அவர்களை ஒன்றும் செய்துவிடாது.

இத்தகைய கவுன்சிலிங் அண்மைக்காலமாக நடைபெறுவதாக எனக்குத் தெரியவில்லை. நடைபெறவில்லை எனில், இதற்கான கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும். சிறு கூட்டமாகவோ அல்லது தனித்தனியாகவோ. மஹல்லா சங்கங்களின் சார்பிலும் இத்தகைய கவுன்சிலிங்குகள் நடத்தப்படலாம்.

ஆண்களைப் போன்றே, பெண்களுக்கும் இத்தகைய கவுன்சிலிங்குகள் நடத்தப்பட வேண்டும்.

சகோதரர்கள் தங்கள் கருத்துகளை அறியத் தாருங்கள். ஊரில் இருக்கும் பெரியவர்கள்  இதற்காக முயல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

ஆக்கம்:அபூசுஹைமா-குவைத்

0 கருத்துகள்:

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online