வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

திங்கள், 8 பிப்ரவரி, 2010

ராஜகிரி : வலுவான எலும்புகள்; வலியில்லா வாழ்க்கை

ராஜகிரி : வலுவான எலும்புகள்; வலியில்லா வாழ்க்கை


நம்மில் பலர் காலையில் எழுந்திருக்கையிலேயே அதிகமான இடுப்புவலி, முதுகுவலியுடன் எழுகிறோம். அதற்கு என்ன காரணம்? வயதானவர்கள் பலருக்கு, மிக இலேசாக அடிபட்டாலே எலும்பு முறிவு ஏற்படுகிறது. உடம்பிலேயே மிக வலுவானது என்று கருதப்படும் இந்த எலும்புகள், பட்பட் என்று ரொட்டித்துண்டு போல் உடைவது ஏன்?அது மட்டுமல்ல. இன்று பல சிறு குழந்தைகளுக்குக் கூட கை கால்கள் வளைதல், எளிதில் எலும்பு முறிதல் ஆகியவை ஏற்படுகின்றன என்பதைப் பல செய்தித்தாள்களில் படிக்க நேரிடுகிறது.
ஒரு கட்டிடம் கட்ட அடிப்படையாகத் தூண்களை எழுப்புவது போல், இறைவன் நமது உடலுக்கு வலுவும் வடிவமைப்பும் தர 'எலும்புக்கூட்டைப்' படைத்துள்ளான். இளம் பருவத்தில் நாம் வளர வளர, நாம் நமது முழு உயரத்தை அடையும்வரை எலும்புகளும் வளர்கின்றன, அடர்த்தியாகி வலுவடைகின்றன. அதன் பிறகும் நமது எலும்புத்திசுக்கள் தொடர்ந்து உடைந்து புத்தாக்கமடைந்துகொண்டே இருக்கின்றன.


ஆண்கள் தமது 40 வயதிற்குப் பின்பும், பெண்கள் 30 வயதிற்குப் பின்பும் தமது எலும்புகளின் வலுவை மெள்ள மெள்ள இழக்கத் தொடங்குகின்றனர். ஏனெனில், இந்த வயதிற்குப் பிறகு எலும்புத்திசுக்கள் அழியும் வேகத்திற்கு இணையான வேகத்தில் புத்தாக்கம் நடைபெறுவதில்லை. எனவே வயது அதிகமாக அதிகமாக, எலும்புகளின் அடர்த்தி குறைந்துகொண்டே வருகின்றது.
அதிலும், குறிப்பாக 50 வயதைத் தாண்டியவர்களை ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய் தாக்குவது அதிகரித்து வருகிறது. ஆண்களின் உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டிரின் மற்றும் பெண்களின் உடலில் சுரக்கும் ஆஸ்டிரோஜென் ஆகியவை, நமது உணவில் இருந்து கால்சியத்தைப் பிரித்தெடுத்து உடலுக்கு வழங்கும் பணியில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால், நமது ஐம்பதுகளில் நமது உடலில் அந்தச் சுரப்பிகளின் செயல்பாடு மந்தமடைந்து விடுவதால், உணவில் இருந்து கால்சியத்தை கிரகிக்கும் நமது உடலின் ஆற்றலும் குறைந்து விடுகிறது. அதிலும் குறிப்பாக 'சினைப்பை நீக்கம்' செய்யப்பட்ட பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கான வாய்ப்பும் பலமடங்கு அதிகமாகும்.
இதைத் தவிர்ப்பது எப்படி? நமது எலும்புகளைக்காப்பாற்றி வலுவுடன் வைத்துக்கொள்ள என்ன வழி?
உங்களது வாழ்க்கை முறையில் நீங்கள் மேற்கொள்ளும் சிற்சில மாற்றங்களே உங்களுக்கு இந்த நோய் வராமல் தடுக்க அல்லது தள்ளிப்போட உதவக்கூடியது. நீங்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பவரா? காலை மற்றும் மாலை சூரிய ஒளியில் சற்று காலார நடந்து விட்டு வாருங்கள். எலும்புகளுக்கு, உழைப்பு அதிகரிக்க அதிகரிக்க வலுவும் அதிகரிக்குமாம். எனவே 'உடற்பயிற்சி' மற்றும் 'நடைப்பயிற்சி' மிகவும் இன்றியமையாதது.
சூரிய வெளிச்சத்தில் இருந்து கிடைக்கும் விட்டமின் 'டி' யானது, எலும்புகள் வளரவும், வலுவடையவும் மிகவும் முக்கியம். ஆனால் கடும் வெயிலைத் தவிர்க்கவும். அதாவது பகல் பதினொன்று மணி முதல் மூன்று மணி வரையான நேரம் உகந்ததல்ல.
சாப்பாட்டில் கால்சியம் அதிகமுள்ள உணவுவகைகளைச் சேர்த்துக்கொள்ளவும். பால் பொருட்கள், சோயாபீன்ஸ், கடுகு விதை, கொட்டைகள் (பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் முதலியவை) முதலியவற்றில் அதிக அளவு கால்சியம் உள்ளது. ஐம்பது வயதுக்குக்குக் குறைவானவர்களுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லிகிராமும், அதற்குமேல் வயதுள்ளவர்களுக்கு 1200 முதல் 1500 மில்லிகிராமும் கால்சியம் தேவைப்படுகிறது. எனவே உங்கள் உணவில் தேவையான அளவு கால்சியம் இல்லாவிடில், கால்சியம் மாத்திரைகளை உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்வது நன்மை தரும்.
கோகோகோலா முதலிய காற்றேற்றம் செய்யப்பட்ட பானங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். 'நீரே அறிவாளிகளின் பானம்' என்கிறது ஒரு ஆங்கிலப் பழமொழி. நீரையே எப்பொழுதும் அருந்த வேண்டும். மது வகைகளைத் தவிர்ப்பது நல்லது. காபி மற்றும் தேநீர் ஒரு நாளைக்கு இரண்டு குவளைகளுக்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். புகைபிடிப்பது எலும்புத்தேய்மானத்தைத் துரிதப்படுத்துகிறது. எனவே வலுவான உடல் வேண்டுமானால், புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டியது அவசியம்.
விட்டமின் பி12, எலும்பு முறிவைத் தவிர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. பால், முட்டை, பாலாடைக்கட்டி, சிலவகை மீன் மற்றும் மாமிச வகைகளில் அதிக அளவு பி12 விட்டமின் காணப்படுகிறது. நீங்கள் சுத்த சைவமாக இருப்பின் உங்களுக்கு உணவின் மூலம் கால்சியம் மற்றும் விட்டமின் ப்12 கிடைப்பது கொஞ்சம் குறைவுதான். எனவே தக்க மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு இதற்கான மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
நீங்கள் முப்பது வயதிற்கு மேற்பட்டவராக இருப்பின் ஒரு முறையாவது எலும்பு அடர்த்திக்கான பரிசோதனை மேற்கொள்ளுவது நல்லது. ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் வருடாவருடம் இச்சோதனையையைச் செய்துகொள்ளுவது அவசியம். அதிலும், எலும்புத்தேய்மானம் இருப்பது சோதனைகளில் உறுதி செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் ஆறுமாதத்திற்கொரு முறை இப்பரிசோதனையைச் செய்தல் வேண்டும்.
வருமுன் காப்போம்: கூடியவரையில், கீழே விழுந்து அடிபட்டுக்கொள்ளாமல் இருப்பது முக்கியம். குறிப்பாக வயதானவர்கள் இருக்கும் வீடுகளில், தரையில் பொருட்கள், அதிலும் வழுக்கக்கூடிய பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இன்று பல வீடுகளிலும் மிக வழவழப்பான தரைகள் இருக்கின்றன. இவற்றில் தண்ணீர் சிந்தியிருந்தால், வழுக்கிவிழும் அபாயம் பல மடங்கு அதிகரித்துவிடுகிறது. இத்தகைய வீடுகளில் தரை விரிப்புகைளைப் பயன்படுத்தலாம். அவ்வளவு வசதி இல்லாவிடில், கூடியவரை தரையைச் சுத்தமாகவும், ஈரமின்றியும் வைத்துக்கொண்டாலே போதுமானது. படிகளில் தேவையான வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுவதும், குளியலறைகளில் வழுக்காத தரை (Anti-skid tiles) இருக்குமாறு அமைப்பதும் விபத்துகளைக்கட்டுப்படுத்தும்.
வலிமையான எலும்புகளே வலியற்ற வாழ்வுக்கு ஆதாரம். வருமுன் காத்தால், வலியின்றி வாழலாம்

0 கருத்துகள்:

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online