வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

சனி, 3 அக்டோபர், 2009

பெண்கள் வேலைக்கு செல்லலாமா..?

பெண்கள் வேலைக்கு செல்லலாமா..? என்ற கேள்விக்கு "இதுதான' இஸ்லாம்" இணையதளத்தில் அளித்த பதிலை இங்கு வெளியிடுகிறோம்.

இந்த நூற்றாண்டு பொருளாதார நூற்றாண்டாகவே கழியும். பொருளாதாரம் பற்றிய சிந்தனை அது பற்றிய பயம் மிகைத்து காணப்படும் காலத்தில் நாம் வாழ்கிறோம். பெண்கள் வீட்டோடு இருந்தால் போதும் என்று கடந்தக் காலத்தில் நினைத்தவர்கள் பேசியவர்கள் எல்லாம் இன்று தனது நிலையை மாற்றிக் கொண்டு குடும்பத்திற்கு உழைக்க எனது இரண்டு கைகள் மட்டும் போதாது குறைந்த பட்சம் மனைவியின் ஒரு கையாவது வேண்டும் என்று 
கேட்கும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது.

உழைப்பதற்கு ஆண்களும் செலவு செய்வதற்கு பெண்களும் என்பது கடந்த காலங்களில், விஞ்ஞான, கல்வி, பொருளாதார வளர்ச்சிப் பெறாத காலகட்டங்களில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். இன்றைய நிலையில் அது சாத்தியமில்லை என்பதை பெண்கள் வேலைக்கு செல்லலாமா..? போன்ற விவாதங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.


வரவு எட்டணா, செலவு பத்தணா போன்ற கிண்டலான குத்தல் மொழிகள் ஒருகாலத்தில் வரவுக்கு மீறிய ஆடம்பர வாழ்க்கையை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று அதே வார்த்தை யதார்த்தத்தைச் சொல்கிறது.
என்னதான் பட்ஜட் போட்டு குடும்பத்தை நகர்த்த வேண்டும் என்று நினைத்தாலும் 'துண்டு' விழும் நிலை தவிர்க்க முடியாமலே போய்விடுகிறது. (நாம் இந்தியர்கள்!)
இந்நிலையில் கணவன் மட்டுமே உழைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் அந்த சுமையை எல்லா ஆண்களாலும் சுமக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே.. எனவே பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மனைவிகள் (தாங்களாக விரும்பி) உழைக்க முன் வந்தால் அதைத் தடுக்கும் உரிமையை இஸ்லாம் யாருக்கும் வழங்கவில்லை.


மனைவியை இறைவன் விளைநிலத்திற்கு ஒப்பாக்கியுள்ளான். (பார்க்க அல் குர்ஆன் 2:222) விளை நிலம் என்பதே ஒரு பொருளாதார குறியீடாகும். 'உங்கள் விளை நிலம்' என்று கணவர்களை நோக்கி சொல்லப்பட்டுள்ளதால் மனைவிகள் முறையான வழியில் உழைக்க விரும்பினால் கணவர்கள் அனுமதிக்கலாம் என்பதை விளங்கலாம்.


பெண்கள் உழைக்க - வேலை செய்யத் தடையில்லை என்றாலும் வேலை, அது செய்யப்படும் இடம் இவற்றைப் பொருத்து இஸ்லாம் சில விதிகளை முன்வைக்கிறது.


எந்த ஆணுடனும் தனித்திருந்து வேலை செய்யக் கூடாது. உதாரணமாக 'செகரட்டரி' போன்ற பணிகள். இது போன்ற வேலைகள் அந்நிய ஆணுடன் (இது முதலாளியாகவோ அல்லது மேனேஜராகவோ அல்லது உயர் அதிகாரிகளாகவோ இருக்கலாம்) தனித்திருக்கும் பொழுதுகளை உருவாக்கி கொடுக்கும். ஆண் என்றைக்கும் ஆணாகத்தான் இருப்பான். சில்மிஷ பேச்சுகள், ஏடாகூடமான பார்வைகள் என்பதிலிருந்து எந்த ஆண்களையும் விதிவிலக்காக காட்ட முடியாது. பார்வை - பேச்சு என்று துவங்கி பெண்மையை கறைப்படுத்தும் சந்தர்பத்தை அவசியம் உருவாக்கி விடும். (இது போன்ற வேலைகளுக்கு பெண்களை நாடும் எவரும் தங்கள் மனைவிகளையோ தங்கள் சகோதரிகளையோ தேர்ந்தெடுப்பதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்)


ஆணுடன் தனிமையில் இருக்கும் சூழ்நிலையை உருவாக்கும் எந்த வேலையையும் (அது என்னதான் பொருளாதாரத்தை கொட்டிக் கொடுக்கக் கூடிய வேலையாக இருந்தாலும் சரி) அந்த வேலையை எந்த பெண்ணும் ஒப்புக் கொள்ளவேக் கூடாது. இதை இஸ்லாம் இப்படி எச்சரிக்கிறது:


"அந்நிய ஆணும் - பெண்ணும் தனித்திருக்கும் போது (அவ்விருவருக்கும் பொது எதிரியான) ஷைத்தான் மூன்றாவதாக இருக்கிறான் என்பது நபிமொழி. (திர்மிதி)


ஆணுடன் தனிமையில் இருப்பதை தவிர்த்து பொதுவான வேலைகளை பெண்கள் தேர்ந்தெடுக்கலாம். மருத்துவப் பணி, ஆசிரியைப் பணி, ஓவியப்பணி, விவசாயம், தையற்கலை, விமானப் பணிப்பெண்கள், விற்பனையாளர்கள் போன்ற வேலைகளில் தங்களுக்குத் தகுதியானவற்றை பெண்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பொதுவான எந்த வேலையைத் தேர்ந்தெடுத்தாலும் அந்த வேலையில் பிற ஆண்களை சந்திக்கும் சூழ்நிலை இருந்தால் தாங்கள் அணியும் உடைகளில் பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சேலையும் அது சார்ந்தவையும் கவர்ச்சிகரமான உடை என்பதால் அவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும். சுடிதார் - கமீஸ் போன்ற உடலை முழுவதும் மறைக்கும் உடையணிந்து தலைமுந்தானையுடன் வேலை செய்யலாம். சேலை உடுத்த வேண்டி வந்தால் மேலதிகமாக புர்கா அவசியமாகி விடும்.


பெண்கள் வெளியில் சென்று பொருளாதாரத்தைத் திரட்டுவதை இஸ்லாம் அவர்கள் மீது கடமையாக்கவில்லை. இதற்கு காரணம் 'பெண் அதற்கு தகுதியானவளல்ல என்று இஸ்லாம் நினைப்பதாக சிலர் விளங்கிக் கொண்டு இஸ்லாத்தின் பெண்ணுரிமையை விமர்சிகக்கத் துவங்கி விடுகிறார்கள்.' இது மனித இயல்பை உணராத அவசரக்காரர்களின் முடிவாகும்.


பெண் இயல்பிலேயே குடும்பப் பணிகளை செய்ய வேண்டிய பொறுப்பைப் பெற்றுள்ளாள். பலர் பணியாற்றும் ஒரு ஆபிஸுக்கு நிகரானப் பணிகள் ஒவ்வொரு நாளும் குடும்பத்தில் நடக்கின்றன. இதில் பெரும் பங்காற்றுவது அந்த குடும்பப் பெண்கள் தான். காலையில் எழுந்து அடுப்பங்கரையில் துவங்கும் வேலை கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து இரவு பத்து மணிவரை நீடிக்கின்றன. குழந்தைகள் சிறப்பாக உருவாகும் இடம் இதுதான். சுகாதாரமான உணவு, தூய்மையான உடை என்று ஆரோக்யமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைவது குடும்பம் தான். இவற்றை செய்து முடிக்க தகுதியுள்ளவர்கள் குடும்பப் பெண்கள் தான். இதற்காக அவர்கள் தினமும் ஒதுக்க வேண்டிய நேரம் அதிகமானதாகும். இத்துனைப் பொறுப்புணர்வுகளும் தட்டிக் கழிக்க முடியாத பணிகளும் நிறைந்த பெண்களை வேலைக்கு அனுப்புவதென்பது அவர்கள் தலையில் கூடுதல் சுமையை ஏற்றி வைக்கும் முயற்சியாகும்.


ஆபிஸில் அல்லது மற்ற வேலைகளை செய்யும் எந்த ஆணும் குடும்பத்திற்கென்று எந்த வேலையும் செய்வதில்லை. (சிலர் விதிவிலக்காக இருக்கலாம்) வேலை முடித்து வீடு திரும்பும் ஆணுக்கு அவன் எதிர்பார்ப்பவை (உடனடியாக சிலருக்கு டீ தேவைப்படும், சிலர் உடனடியாக சாப்பிடும் எண்ணத்தில் வருவார்கள், சிலர் வெண்ணீரில் குளிக்க வேண்டும் என்று வருவார்கள்.இப்படி பல அவசரங்களில் வீடு நுழையும் ஆண்களே அதிகம்) கிடைக்கவில்லை என்றால் எரிச்சலடையக் கூடிய, கோபப்படக் கூடிய மனநிலையைப் பெறுவார்கள். அதே நேரம் வெளியில் வேலை செய்து விட்டு வீடு திரும்பும் பெண்களின் நிலை என்ன? அவர்களால் யார் மீதும் கோபப்பட முடியாது. அவசர, அவசரமாக குடும்ப வேலையில் இறங்க வேண்டும்.


ஆணோடு ஒப்பிடும் போது பெண் உடல் ரீதியாக பலவீனமானவள். குடும்பத்தை பராமரிக்கும் அளவிற்கே உடல் பலத்தையும் மனநிலையையும் பெற்றிருக்கும் பெண்களை "வேலைக்குப் போ"  என்று வற்புறுத்துவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும். இத்தகைய நிலைக்கு தள்ளப்படும் பெண்கள் வெகு விரைவில் மன அழுத்தத்தையும் உடல் பலவீனத்தையும் பெற்று விடுகிறார்கள்.


மட்டுமின்றி இதையும் கடந்து வக்கிரபுத்தியுள்ள ஆண்களால் அவர்கள் அவதிப்படுவதாகும். பாலியல் பார்வை - பேச்சு - சீண்டல் என்று மன நோயாளிகளிடம் அவர்கள் தினம் தினம் படும் அவஸ்த்தைகள் சொல்லி மாளாது. இத்துனையும் சகித்துக் கொண்டே அவள் வருமானத்தை பெறமுடியும். அதுவும் ஆண் பெறும் வருமானத்தை விட வெகு குறைவாக.


பெண்களில் உடல் மற்றும் மனநிலை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் 'அவர்களால் சுயமாக எந்த வருமானத்தையும் ஈட்டவே முடியாதா..? என்ற கேள்வி இங்கு பிறக்கின்றது.
நிச்சயமாக ஈட்ட முடியும்.


பிறரிடம் சம்பளத்திற்கு வேலை செய்வதை விட தாமே சுய தொழில் தொடங்குவதுதான் பெண்களைப் பொருத்தவரை சரியாகும்.


வீடுகளில் துவங்கப்படும் சிறு தொழில்கள், பெண்களாக ஒன்று கூடி செய்யக் கூடிய பல்வேறு தொழில்கள் என்று சுய தொழில்களில் பெண்கள் ஆர்வம் காட்டும் போது பல சிக்கல்களை அவர்களால் தவிர்த்து விட முடியும். சுய தொழிலால் முன்னுக்கு வந்த, வந்துக் கொண்டிருக்கின்ற சாதனைப் பெண்கள் தமிழக்கத்தில் மட்டும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு அதே வழியில் பெண்கள் சம்பாதிக்க முயலலாம்.


சம்பாதிப்பதற்காக எந்த வழியை ஒரு முஸ்லிம் பெண் தேர்ந்தெடுத்தாலும் அது அவளது குடும்ப பொறுப்பை தட்டிக் கழிப்பதாக மட்டும் அமைந்து விடக் கூடாது. குழந்தையை சீரிய முறையில் உருவாக்க வேண்டிய பொறுப்பிலிருந்து விடுபட எந்த முஸ்லிம் பெண்ணுக்கும் அனுமதியில்லை என்பதை மட்டும் எந்த ஆணும் மறந்து விடக் கூடாது.

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

0 கருத்துகள்:

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online