வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

புதன், 28 அக்டோபர், 2009

ஆரோக்கியத்துடன் ஹஜ் செய்வோம் !

உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள்.


   பல்வேறு தயாரிப்புகள் – பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

  எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

  ஆனால் –

  மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற் கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர்.

  அது – உடல்நலம்!

  ஹஜ்ஜின் போது ஹாஜிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகும் ஒரு விஷயம் ‘உடல்நலம்’ குறித்ததாகும்.

  ஏனெனில் –



  ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களில் 60 விழுக்காட்டிற்கும் மேற் பட்டவர்கள் 60 வயதிற்கு மேலுள்ள முதியவர்கள்தாம். பொதுவாகவே வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் பல்வேறு விதமான நோய்கள் ‘ஹஜ்’ செய்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

  இதனைத் தவிர்த்து ‘ஆரோக்கியமான ஹஜ்’ ஜினை மேற்கொள்ள இதோ சில முக்கியமான வழிகாட்டுதல்கள்.

1.ஹஜ் பயணத்திற்கு முன் நடைப்பயிற்சி அவசியம்! 

  எப்போது ஹஜ்ஜிற்காக ‘விண்ணப்பிக்கிறார்களோ’ அந்நாள் முதல் ஹாஜிகள் செய்ய வேண்டிய முதன்மையான பணி என்னவெனில் – நடைப்பயிற்சிதான்.

  நாள்தோறும் குறைந்தது 5 முதல் 7 கி.மீ வரை நடப்பது சாலச் சிறந்தது. அதுவும் குறைந்தது மூன்று
மாதங்களுக்கு முன்பே இப் பயிற்சியைத் தொடங்க வேண்டும். ஏனெனில், ஹஜ்ஜின் போது அதிகம் நடக்க வேண்டும். மினாவில் ஷைத்தான் மீது கல்லெறியக் கூடாரத்தி லிருந்து வெகுதூரம் நடக்க வேண்டி வரும். அதே போல் அரஃபா முதல் முஸ்தலிஃபா வரை ஹாஜிகள் நடக்கும் சூழ்நிலை ஏற்படும். (இதன் தொலைவு 8 கி.மீ) எல்லாவற்றிற்கும் மேலாக ஹரம் ஷரீஃபில் அன்றாட தவாஃப் செய்ய எண்ணும் ஹாஜிகளுக்கு நடைப்பயிற்சி மிக மிக முக்கியம். கூட்ட மிகுதியான நாட்களில் ஒரு தவாஃப் முடிய நடக்கும் தூரம் பல கி.மீ வரை நீளும்.

  ஆனால் –

  ஒவ்வோர் ஆண்டும் ஹாஜிகள் மிகவும் கஷ்டப்படுவது ‘நடக்கும்’ விஷயத்தில்தான்! காரணம், முதுமையான வயதில் ஹஜ்ஜை மேற் கொள்வது. அதிக வசதி வாய்ப்பு உள்ள முஸ்லிம்கள் நடப்பதே இல்லை என்றே கூறலாம். எனவே நடைப்பயிற்சி மிக மிக முக்கியம்.

2.ஹாஜிகளே! உங்களுடைய கால்களை பத்திரமாய் பார்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் ஹஜ்ஜின் போது கால்களுக்குத்தான் அதிக வேலை இருக்கும். எனவே காலில் எந்தவிதமான காயமோ புண்ணோ ஏற்படாமல் கவனித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக புதிதாக செருப்பு வாங்கி அணியாதீர்கள். இப்போது நீங்கள் பயன்படுத்தும் சாதாரணமாக காலணிகளில் இரண்டு ஜோடியினை நீங்கள் ஹஜ்ஜின் போது பயன் படுத்துங்கள். புதுச் செருப்புகள் ஏற்படுத்தும் பாதிப்புகளால் நீங்கள் நடப்பதில் சிக்கல் ஏற்படும்.

3.ஹாஜிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான இன்னோரு உண்மை, மக்கா மாநகரம் கடல் மட்டத்திலிருந்து பல மீட்டர் உயரத்திலிருக்கும் ஒரு பகுதி ஆகும். எனவே அங்கு காற்ற ழுத்தம் (ஆக்சிஜன்) குறைவாகும். எனவே நீண்ட தொலைவு நடப்பது என்பது நம்மூரில் நடப்பது போன்று எளிதன்று! ஹஜ்ஜில் ‘மெதுவாக’ நடக்க வேண்டும். வேகமாக நடப்பதால் மூச்சுப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

4.பல ஹஜ் குழுக்கள் மக்காவை ஹஜ்ஜிற்குப் பல நாட்களுக்கு முன்பே சென்றடைந்து விடுகின்றன. ஆர்வ மிகுதியால் ஹாஜிகள் தினமும் அதிகமதிகம் தவாஃப் செய்கின்றனர். உம்ராவும் செய்கின்றனர். தவாஃப் செய்வது முக்கியமானதுதான்! எனினும் ஹஜ்ஜுக்குரிய முக்கியமான ஐந்து நாட்களில் (துல்ஹஜ் 8 முதல் 13 வரை) செய்யப்பட வேண்டிய கிரியைகளுக்கு உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். ஆனால் ஹாஜிகள் பலர் இந்நாட்களில் சோர்வு அடைந்து விடுகின்றனர். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

5.ஆண்களைப் பொறுத்தவரை ‘இஹ்ராம்’ உடையில் நடப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே உள்ளாடை எதுவும் அணியாமல் வேட்டி மட்டுமே அணிந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது
உதவியாக இருக்கும்.

6.பெண்களில் சிலர் மாதவிடாயைத் தாமதப்படுத்துவதற்காக சில ஹார் மோன் மருந்துகளை ஒரு மாதகாலம் சாப்பிடுகின்றனர். இது தவிர்க்கப் பட வேண்டும். அதிகபட்சம் 5 நாட்கள் இம்மாத்திரைகளைப் பயன் படுத்தலாம். அதுவும் பெண் மருத்துவரின் ஆலோசனையின்படி தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் தவிர இம்மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடு.

              நோயாளிகளும் ஹஜ்ஜும்

  ஹாஜிகள் பலர் உயர் ரத்த அழுத்தம் (BP) நீரழிவு முதலான நோயுள் ளவர்கள். இவர்கள் தங்களுடைய மருந்துகளை முறையாக உட்கொள் வதோடு மட்டுமன்றி உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்பவர்களுக்கு உணவைத் தாங்களே தயாரிப் பதால் உப்பு, சர்க்கரை, விஷயத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் தனியார் குழுக்களில் சர்க்கரை நோயாளிகளுக்குத் தேவையான உணவைத் தயாரிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இன்று பல தனியார் குழுக்கள் ‘சிறப்பு உணவினை’ இது போன்ற நோயாளி களுக்குத் தயாரிக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான செய்தி. ஆனால் ஹாஜிகள் உணவு விஷயத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

  சிறுநீர் தொந்தரவுள்ளவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். ஹரமில் கழிப்பறைக்குச் சென்று வரவேண்டுமெனில் அது மிகச் சிரம மானதாகும். எனவே ஒவ்வொரு தொழுகைக்கு முன்னும் அவர்கள் தங்களுடைய அறைகளிலே சிறிநீர் கழித்து ஒளு செய்து விட்டு பள்ளிக்கு வருவது சிறந்ததாகும்.

  முக்கியமான ஒரு நோய் என்னவெனில் ‘சளி தொந்தரவு’ சுமார் 35 லட்சம் மக்கள் சந்திக்கும் ஒரு இடத்தில் ‘சளி தொந்தரவு; ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். ஹஜ் காலங்களில் (குறிப்பாக ஹஜ்ஜிற்குப் பிந்தைய காலங்களில்) பள்ளிவாயில்களில் இருமல் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். இதனை Community acquired Pneumonia என்று அழைப்பார்கள். அதாவது ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் நுரையீரல் சளி நோய். இதற்கு மருந்துகள் பல இருப்பினும் மிகச் சிறந்த மருந்து ‘முன்னெச்சரிக்கை’ (Prevention) தான். முகத்தில் ‘முகமூடி’ அணிந்து கொள்வது இந்நோய் வராமல் பாதுகாக்கும். குறிப்பாக ஏ.சி. அறைகளிலும், ஏ.சி. பள்ளிவாயில்களிலும் இது மிக மிக வேகமாகப் பரவும். எனவே ஹாஜிகளில் எவருக்கேனும் இருமல், சளி இருந்தால் உடனடியாக மருந்து சாப்பிடுவது மட்டுமன்றி அவர்கள் தங்கியுள்ள அறைகளில் ஏ.சி.யை அணைத்து விட்டு ஜன்னல்களைத் திறந்து வைப்பது அவசியம்.

  பல்வேறு விதமான நுரையீரல் சளி நோய்கள் இன்று உலகெங்கும் பரவி வருகின்றன. பறவைக் காய்ச்சல் (Avian Flu) பன்றிக் காய்ச்சல் (Swine Flu) போன்ற வைரஸ் நோய்களால் ஹாஜிகள் யாரும் பயப்பட வேண்டாம். முகமூடி அணியுங்கள். அல்லாஹ் போதுமானவன்.

7.இறுதியாக…

  இந்தியாவிலிருந்து வரும் ஹாஜிகளுக்காக (அரசு மூலமும், தனியார் குழுக்கள் மூலமும்) மருத்துவக் குழு (Indian Medical Mission) மக்காவிலும், மதீனாவிலும் செயல்படும். நீங்கள் தங்கியுள்ள பகுதிகளில் மருத்துவ மையமும், மருத்துவமனையும் அமைந்திருக்கும்.

  இந்திய மருத்துவர்களால் நடத்தப்படுவதால் மொழிப் பிரச்சினையும் இல்லை. எனவே கவலைப்படாமல் இம்மையங்களை அணுகுங்கள்! தனியார் குழுக்களில் பல மருத்துவர்களை அழைத்து வருவதால் பிரச்சினை இல்லை. இதைத் தவிர சவூதி அரசினால் நடத்தப்படும் மருத்துவமனைகளும் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைகளை அளிக் கின்றன. எனவே ஹாஜிகள் கவலைப்படத் தேவையில்லை.

  ஆக, ஹஜ்ஜிற்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களே! உங்களுடைய ஹஜ் ஆரோக்கியமாக அமைய வேண்டுமெனில் நீங்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். உங்கள் பயணத்தில் நீங்கள் சில முக்கிய மருந்துகளை எடுத்துச் செல்லுங்கள்.


1.வலி நிவாரணக் களிம்புகள் (Ointment)
2.முகமூடிகள் (Face Mask)
3.சாதாரண காய்ச்சலுக்குண்டான மாத்திரைகள்

4.நீங்கள் ரத்த அழுத்தம் அல்லது நீரழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவரானால் அவற்றுக்குரிய மருந்துகளை உங்கள் பயண காலத்திற்குக் கணக்கிட்டு மொத்தமாக வாங்கி எடுத்துச் செல்லுங்கள்.

5.இருமல் சளிக்கான மருந்துகளை (Syrup) பிளாஸ்டிக் குப்பிகளில் எடுத்துச் செல்லுங்கள்.

6.தூக்க மாத்திரைகளும், வலி நிவாரணத்திற்குப் பயன்படுத்தும் சில மாத்திரைகளும் சவூதி அரசில் தடை செய்யப்பட்டவையாகும். என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  கொஞ்சம் பஞ்சினை (Cotton) மருந்துடன் வைத்துக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் காதுகளை அடைத்துக் கொள்ள உதவும்.

  நோயுள்ளவர்கள் தங்களுடைய மருத்துவச் சீட்டினை ( Medical      Records ) அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.

  ஜம் ஜம் தண்ணீரை அதிகம் பருகுங்கள். அது நோய் தீர்க்கும் அரு மருந்தாகும்.

  எனவே ஹாஜிகளே! உங்கள் ஹஜ்ஜை ஆரோக்கியமாக நிறைவேற்றுங்கள். சுறுசுறுப்பாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுங்கள்! உங்களுடைய ஹஜ்ஜை ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக இறைவன் ஆக்கியருள் புரிவானாக!

  Dr. ஜெ. முகைதீன் அப்துல் காதர் MBBS, MS

      ( சென்ற ஆண்டு இந்திய மருத்துவக் குழுவில்
          ஹஜ் பயணம் மேற்கொண்ட மருத்துவர் )

                தொடர்புக்கு : mohideenkadhar@gmail.com

நன்றி : சமரசம் 

0 கருத்துகள்:

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online