வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

திங்கள், 9 நவம்பர், 2009

ஹஜ் செய்யும் முறைகள் -1

ஹஜ் செய்யும் முறைகள்



ஹஜ்ஜின் வகைகள் மூன்று

1. ஹஜ்ஜுத்தமத்துஃ
2. ஹஜ்ஜுல் கிரான்
3. ஹஜ்ஜுல் இஃப்ராத்


ஹஜ்ஜுத் தமத்துஃ :-

ஹஜ்ஜுடைய மாதத்தில் (ஷவ்வால், துல்கஃதா, துலஹஜ்) ஹஜ்ஜுக்கான உம்ராவைச் செய்து அதே வருடத்தில் ஹஜ்ஜையும் செய்வதற்குச் சொல்லப்படும். ஹஜ்ஜுக்குச் செல்லும்போது குர்பானி கொடுக்கும் பிராணியை, தன்னுடன் கூட்டிக் கொண்டு செல்லாதவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். 

ஹஜ்ஜுத்தமத்துஃ செய்பவர் உம்ராவை முடித்துவிட்டால் ஹஜ்ஜுக்காக நிய்யத் வைக்கும் வரை, இஹ்ராமினால் ஹராமாக்கப்பட்டிருந்த அனைத்தும் ஹலாலாகிவிடும், துல்ஹஜ் 8-ஆம் நாள் காலையில் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்துக் கொண்டு இஹ்ராமை அணிந்து மினாவிற்குச் செல்ல வேண்டும்.

ஹஜ்ஜுல் கிரான் :-

ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து ஒரே நிய்யத்து வைப்பது. யார் தன்னுடன் குர்பானிக்குரிய பிராணியை, கொண்டு செல்கின்றார்களோ அவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். இந்த முறையில்தான் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுசெய்தார்கள்.

ஹஜ்ஜுல் இஃப்ராத் :-

இம்முறையில் குர்பானி கடமையில்லை. ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜுக்கு மட்டும் நிய்யத்து வைப்பதாகும்.




கிரான் மற்றும் இஃப்ராத் முறைகளில் ஹஜ் செய்பவர்கள் மக்கா வந்ததும் தவாப் செய்ய வேண்டும். இதற்கு தவாபுல் குதூம் என்று சொல்லப்படும். தவாபுல் குதூமுக்குப் பின் ஸஃயி செய்பவர்கள் 10-ஆம் நாள் தவாபுல் இஃபாலாவுக்குப் பின் ஸஃயி செய்யத்தேவையில்லை. இப்போது ஸஃயி செய்யாதவர்கள் தவாபுல் இஃபாலாவுக்குப்பின் ஸஃயி செய்தே ஆகவேண்டும்.

துல்ஹஜ் பிறை 8-ஆம் நாள்

மேலே கூறப்பட்ட மூன்று முறைகளில் ஹஜ் செய்பவர்களும் துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் மினாவிற்குச் செல்ல வேண்டும். மினாவில் லுஹர், அஸர், மஃரிப், இஷா, ஸுப்ஹுத் தொழுகைகளை உரிய நேரத்தில் தொழ வேண்டும். நான்கு ரக்அத்துத் தொழுகைகளை இரண்டாக சுருக்கித் தொழவேண்டும். இப்படித்தான் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதார்கள்.

துல்ஹஜ் பிறை 9-ஆம் நாள்

துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் சூரியன் உதித்தபின் அரஃபா செல்ல வேண்டும். அரஃபா சென்றதும் அரஃபா எல்லையை உறுதிப் படுத்தியபின் மஃரிப் தொழுகையின் நேரம் வரும் வரை அங்கேயே தங்கி இருப்பது அவசியமாகும். 

லுஹருடைய நேரம் வந்ததும் பாங்கும், இகாமத்தும் கூறி லுஹரை இரண்டு ரக்அத்தாக சுருக்கித் தொழ வேண்டும். லுஹர் தொழுகை முடிந்ததும் இகாமத் கூறி அஸர் தொழுகையையும் இரண்டு ரக்அத்தாக சுருக்கி லுஹருடன் முற்படுத்தித் தொழ வேண்டும். முன் பின் சுன்னத்துக்கள் இல்லை. தொழுகை முடிந்ததும் ஓர் இடத்தில் அமர்ந்து வணக்கத்தில் ஈடுபடவேண்டும். 

அரஃபாவுடைய தினம் மிக, சிறப்பான தினமாகும். ஹஜ் என்றால் அரஃபாவில் தங்குவதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹாஜிகளின் இத்தியாகத்தைப் பார்த்து மலக்குகளிடம் அல்லாஹ் பெருமைப்படும் நாளாகும். 

ஆகவே, அங்குமிங்கும் அலைந்து திரியாமல் உருக்கமான முறையில் உங்களின் ஈருலக வெற்றிக்காகவும், உலக முஸ்லிம்களுக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அந்நாளில் செய்யும் வணக்கங்களில் மிக மேலானது துஆச் செய்வதாகும்.

நபி (ஸல்) வஸல்லம் அவர்கள் (தொழுகையை முடித்து விட்டு,) அரஃபா மலையடிவாரத்தில் நின்றவர்களாக, கிப்லாவை முன்னோக்கி சூரியன் மறையும் வரை துஆச்செய்தார்கள். (முஸ்லிம்)

அந்நாளில் செய்யும் திக்ருகளில் மிகச் சிறந்தது பின்வரும் திக்ராகும். நானும் எனக்கு முன்வந்த நபிமார்களும் கூறியவையில் மிகச் சிறந்தது

لااِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءِ قَدِيْرٍ .

லாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹ், லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர். என நபி (ஸல்) வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அரஃபாவுடைய எல்லைக்குள் எங்கும் தங்கிஇருக்கலாம். ஜபலுர் ரஹ்மாவிற்க்குப் போய் அங்கிருந்து பிரார்த்தனை செய்யவேண்டும் என்று நினைத்து, பல சிரமங்களுக்கு மத்தியில் அங்கு சென்று அன்றைய நாளையே வீணாக்கிவிடாமல் கிடைத்த இடத்தில் அமர்ந்து, ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் முடியுமான அமல்களைச் செய்யுங்கள். நபி (ஸல்) அவர்கள் ஜபலுர்ரஹ்மா மலைமீது ஏறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “நான் 

இந்த இடத்தில்தான் தங்கினேன், அரஃபாவின் எல்லைக்குள் எங்கும் தங்கலாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், அஹ்மத்)

நபி (ஸல்) அவர்களே அரஃபாவின் எல்லைக்குள் எங்கு தங்கினாலும் ஒரே நன்மைதான் என்று சொல்லியிருக்கும் போது எதற்காக ஜபலுர்ரஹ்மாவிற்குச் செல்ல வேண்டும்? ஹாஜிகள் இதை கவனத்தில் கொள்வது அவசியம்.

குறிப்பு : யார் அரஃபா எல்லைக்கு வெளியில் தங்கி இருக்கின்றாரோ அவருடைய ஹஜ்ஜு ஏற்கப்படாது, இன்னும் அரஃபா தினத்தன்று ஹாஜிகள் நோன்பு நோற்கக்கூடாது.

முஸ்தலிஃபாவில் இரவில் தங்குவது

ஒன்பதாம் நாளின் சூரியன் மறைந்ததும் தல்பியா கூறியவர்களாக அமைதியான முறையில் முஸ்தலிஃபா செல்ல வேண்டும். முஸ்தலிஃபா சென்றதும் ஓர் பாங்கு இரண்டு இகாமத்தில் மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து இஷாவை இரண்டு ரகஅத்தாக சுருக்கித் தொழ வேண்டும். முன் பின் சுன்னத்துக்கள் இல்லை. சுப்ஹுவரை அங்கு தங்குவது அவசியமாகும். முஸ்தலிஃபாவிற்குள் எங்கும் தங்கலாம்.

நான் இங்குதான் தங்கினேன், முஸ்தலிஃபாவிற்குள் எங்கும் தங்கலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

நோயாளிகள், பெண்கள் நடு இரவுக்குப்பின் அவர்கள் விரும்பினால் மினா செல்லலாம். நபி (ஸல்) அவர்கள் இதை அனுமதித்துள்ளார்கள்.

சுபஹுடைய நேரம் வந்ததும் சுபஹுத் தொழுகையை தொழுதுவிட்டு சூரியனின் மஞ்சள் நிறம் வரும் வரை அல்லாஹ்வை, போற்றிப்புகழ்ந்து அவனைப் பெருமைப்படுத்தக்கூடிய திக்ருகளைக் கூறுவதும்; கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வதும் சுன்னத்தாகும்.

நபி (ஸல்) அவர்கள் மஸ்அருல் ஹராம் என்னும் மலைமீது ஏறி கிப்லாவை முன்னோக்கி நின்று சூரியனின் மஞ்சள் நிறம் வரும் வரை நின்ற நிலையில் பிரார்த்தனை செய்தார்கள்.(அபூதாவூத்)

இன்னும் ஓர் அறிவிப்பில்:-

அல்லாஹ்வைப் போற்றிப்புகழ்ந்து அல்லாஹுவைப் பெருமைப்படுத்தி, ஒருமைப்படுத்தும் திக்ருகளை ஓதினார்கள்.

தொடரும்

நன்றி-இஸ்லாம் கல்வி


0 கருத்துகள்:

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online