ராஜகிரி ஈதுல் அழ்ஹா புகட்டும் படிப்பினைகள்
ராஜகிரி : எமது இணையத்தள வாசகர்களுக்கு ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்கள்
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹுத் தஆலாவின் திரு நாமத்தால்,
ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் அவர்களின் அடிச் சுவட்டைப் பின்பற்றி வாழும் நல்லடியார்கள் மீதும் உண்டாவதாக!
எமது இணையத்தள வாசகர்களுக்கு தியாகத்திருநாளாம் ஈதுல் அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
ஹஜ்ஜுப் பெருநாள் பல தியாகங்களுடன் தொடர்புபட்ட ஒரு திருநாளாகும். ஹஜ் வணக்கம் தியாகத்தையும் அர்ப்பணங்களையும் வேண்டி நிற்கும் ஒரு வணக்கமாகும். அந்த வணக்கத்தின் நிறைவாகவே இந்த பெருநாள் கொண்டாடப்படுகின்றது. மேலும், உழுஹிய்யா எனும் தியாகமும் இந்தப் பெருநாளின் போது செய்யப்படுகின்றது.
இதனால்தான் இந்தப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் என்றும் ஈதுல் அழ்ஹா என்றும் இரு பெயர்களிலும் வழங்கப்படுகின்றது. அனைத்துக்கும் மேலாக நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தியாகங்களை நினைவுகூரும் ஒரு நன்நாளாகவும் இது விளங்குகின்றது. இதனாலேயே இப்பெருநாள் தியாகத்திருநாள் என்று வர்ணிக்கப்படுகின்றது.
முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாட்கள் உண்டு. இரண்டுமே இரு பெரும் வணக்கங்களைத் தொடர்ந்து கொண்டாடப்படுவது இஸ்லாமிய பெருநாட்களின் தனிப்பெரும் சிறப்பம்சமாகும். ஈதுல் பித்ர் நோபைத் தொடர்ந்தும் ஈதுல் அழ்ஹா ஹஜ் வணக்கத்தைத் தொடர்ந்தும் கொண்டாடப்படுகின்றன.
பெருநாள் என்பது சமூகத்தில் உள்ள எல்லோருக்கும் சந்தோஷமான நாளாக அமைதல் வேண்டும். அப்போதே அது பெருநாளாக அமையும். வசதி உள்ளவர்களைப் போலவே வசதி அற்றவர்களும் பெருநாளின் போது உண்டு குடித்து அக மகிழ வேண்டும்.
இந்நிலை உத்தரவாதப்படுத்தவே இஸ்லாம் ஈதுல் பித்ரின் போது ஸகாதுல் பித்ரையும் ஈதுல் அழ்ஹாவின் போது உழ்ஹிய்யாவையும் விதியாக்கியுள்ளது.
பெருநாள் என்பது கட்டுப்பாடுகளிலிருந்து விடுபடும் நாளல்ல, அல்லாஹ்வுடனான உறவை அறுத்துக் கொள்ளும் நாளுமல்ல, தக்பீர் எமது பெருநாள் தினத்தின் பெரு முழக்கமாகும், அந்நாளில் எழுப்பும் கோஷம்,
அதுவே முஸ்லிம்களின் பெருநாளின் அடையாளம், சிறப்பம்சம், தக்பீரை முழங்கிய நிலையில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் நாளாக பெருநாள் தினம் அமைய முடியாது, ஒரு முஸ்லிம் தனது வாழ்நாள் முழுவதும் தக்பீரை முழங்கிக் கொண்டே இருப்பவர். தக்பீர்தான் முஸ்லிம்களின் கொள்கைப் பிரகடணமாகும்.
ஐவேளைத் தொழுகையின் ஆரம்பம் அல்லாஹு அக்பர்,
அதானின் ஆரம்பம் அல்லாஹு அக்பர்,
அதானின் முடிவும் அல்லாஹு அக்பர்,
இகாமத்தின் ஆரம்பமும் அல்லாஹு அக்பர்,
அதன் முடிவும் அல்லாஹு அக்பர்,
அறுத்தலின் போது சொல்வதும் அல்லாஹு அக்பர்,
போராட்டங்களின் போது முழங்குவதும் அல்லாஹு அக்பர்,
இவ்வுலகில் எவரும் பெரியவரல்ல, எதுவும் பெரியதல்ல, அல்லாஹ்வே பெரியவன் என்ற தௌஹீதின் உண்மையை உரக்கச் சொல்லும் கோஷமே அல்லாஹு அக்பர். இந்தத் தக்பீரே பெருநாள் தினத்தில் அதிகம் முழங்கப்படுகின்றது.
எனவே, ஈதுல் அழ்ஹாவைக் கொண்டாடும் நாம் அதன் பின்புலத்தை சரியாகப் புரிந்து அதனை அர்த்தத்தோடு கொண்டாட வேண்டும். இந்நந்நாளிலே இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் நன்மைக்காகவும் நலனுக்காகவும் தியாகத்துடனும் அர்ப்பணசிந்தையுடனும் உழைக்க உறுதி பூண வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக