வட்டியில்லாக் கடன்,ஜக்காத் வசூல்,ஃபித்ரா வசூல்,சமூக நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

திங்கள், 9 நவம்பர், 2009

ஹஜ் செய்யும் முறைகள்-2

துல் ஹஜ் பிறை 10-ஆம் நாள்


சூரியன் உதயமாகுவதற்கு முன் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு தல்பியா கூறியவர்களாக மினா வர வேண்டும். 10-ஆம் நாள் மினாவில் செய்யும் நான்கு அமல்கள்.


1- ஜம்ரத்துல் அகபாவிற்கு மாத்திரம் ஏழு கற்களை வீசுவது.
2- குர்பானி கொடுப்பது.
3- முடி எடுப்பது.
4- தவாபுல் இஃபாலா செய்வது.



சொல்லப்பட்ட வரிசைப்பிரகாரம் செய்வதே சுன்னத்தாகும். ஒன்றைவிட மற்றொன்றை முற்படுத்தியோ பிற்படுத்தியோ செய்தாலும் தவறில்லை. பத்தாம் நாள் நபி (ஸல்) அவர்களிடம் பல ஸஹாபாக்கள் வந்து ஒன்றை முற்படுத்தி செய்துவிட்டேன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்கும் போதெல்லாம் பரவாயில்லை என்றே நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.





கல் எறிவது


பத்தாம் நாள் எறியும் கற்களை காலை சூரிய உதயத்திலிருந்து ளுஹர் நேரத்துக்குள் எறிய வேண்டும். இந்த நேரத்திற்குள் எறிய முடியாதவர்கள் இதற்குப் பின்னும் எறியலாம்.
பத்தாம் நாள் ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! மாலையான பின்புதான் நான் கல் எறிந்தேன் என்றார், பரவாயில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) எறியும் கல்லின் அளவு சுண்டுவிரலால் வீசும் கல் அளவிற்கு இருக்க வேண்டும். அதை ஒவ்வொரு கற்களாக “அல்லாஹுஅக்பர்” என்று சொல்லிக் கொண்டு எறிய வேண்டும். ஏழு கற்களையும் ஒரே தடவையில் எறியக்கூடாது.


“சுண்டு விரலால் வீசக்கூடிய கற்களைப் போன்று ஏழு கற்களை நபி (ஸல்) அவர்கள் வீசினார்கள். ஒவ்வொரு கற்களை வீசும் போதும் தக்பீர் கூறினார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூதாவூத், பைஹகி)


கல் எறிவதற்கு முடியாத நோயாளி மற்றும் பலவீனர்களின் கல்லை இன்னும் ஒருவர் அவருக்குப் பகரமாக எறியலாம். ஏறியக்கூடியவர் அவ்வருடம் ஹஜ்ஜு செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். அவருடைய கல்லை எறிந்த பின்புதான் மற்றவரின் கல்லை எறிய வேண்டும். தனக்கு கல் எறிய சக்தி இருக்கும் போது பிறரை எறியச் சொல்லக்கூடாது.


குர்பானி கொடுப்பது


தமத்துஃ மற்றும் கிரான் முறைப்பிரகாரம் ஹஜ் செய்பவர்கள் கல் எறிந்ததற்குப் பிறகு குர்பானி கொடுக்க வேண்டும். அதாவது ஒட்டகம், மாடு, ஆடு இவைகளில் ஒன்றை அல்லாஹ்வுக்காக அறுப்பது. ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தை அல்லது ஒரு மாட்டை அறுக்கலாம். ஆடு கொடுப்பதாக இருந்தால் ஒருவருக்கு ஒன்று வீதம் கொடுக்க வேண்டும். இஃப்ராது முறையில் ஹஜ் செய்தவருக்கு குர்பானி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. 


 குர்பானியை மினாவிலும், மக்காவின் எல்லைக்குள் எங்கும் அறுக்கலாம், ஆனால் ஹரம் எல்லைக்கு வெளியில் அறுக்கக்கூடாது. “நான் இந்த இடத்தில்தான் குர்பானி கொடுத்தேன். மினாவில் எங்கும் குர்பானி கொடுக்கலாம். மக்காவின் தெருக்கள் எல்லாம் நடக்கும் பாதையும் குர்பானி கொடுக்கும் இடமுமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத்)


குர்பானி இறைச்சியிலிருந்து அதைக் கொடுத்தவரும் உண்ணலாம்


குர்பானி கொடுக்கும் இறைச்சியிலிருந்து மினாவுடைய மூன்று நாட்களை (பிறை 11,12,13) தவிர (வேறு நாட்களில்) நாங்கள் உண்ணாமலிருந்தோம். நீங்களும் (அந்த இறைச்சியைச்) சாப்பிட்டு, சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அனுமதித்த போது 


நாங்களும் சாப்பிட்டோம், சேமித்தும் வைத்தோம். மதீனாவிற்கும் அவ்விறைச்சியை கொண்டு செல்லும் அளவு எங்களிடம் இருந்தது என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்)
குர்பானி கொடுப்பதற்கு வசதியற்றவர் ஹஜ்ஜுடைய நாட்களில் மூன்று நோன்புகளும், ஊர்; திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும்.



தலை முடி எடுப்பது


குர்பானி கொடுத்த பின் தலை முடியை எடுக்க வேண்டும். (முடி எடுக்கும் முறை முன்னால் சொல்லப்பட்டுவிட்டது) முடியை எடுத்ததும் இஹ்ராமிலிருந்து நீங்கிக் கொள்ளலாம். அதாவது கணவன் மனைவி தொடர்பைத்தவிர இஹ்ராத்தினால் தடுக்கப்பட்டிருந்தவைகள் எல்லாம் ஆகுமாகிவிடும். தவாபுல் இஃபாலாவைச் (ஹஜ்ஜுடைய தவாபை) செய்துவிட்டால் கணவன் மனைவி உறவும் ஆகுமாகிவிடும்.


தவாஃபுல் இஃபாலா


தலை முடி எடுத்த பின் குளித்து மணம்பூசி தனது வழமையான ஆடையை அணிந்து கொண்டு தவாபுல் இஃபாலா செய்வதற்காக மக்கா செல்ல வேண்டும். தமத்துஆன முறையில் ஹஜ் செய்பவர்கள் தவாபுல் இஃபாலாவை முடித்துவிட்டு ஹஜ்ஜுக்கான சஃயும் செய்ய வேண்டும். 


கிரான் மற்றும் இஃப்ராதான முறையில் ஹஜ் செய்பவர்கள் மக்கா வந்தவுடன் செய்த தவாபுல் குதூமுக்குப் பின் சஃயி செய்திருந்தால் இப்போது தவாபுல் இஃபாலா மாத்திரம் செய்தால் போதும், சஃயி செய்யத் தேவையில்லை. தவாபுல் குதூமுக்குப் பின் சஃயி செய்யவில்லையென்றால் இப்போது (தவாபுல் இஃபாலாவுக்குப் பின்) சஃயி செய்தே ஆக வேண்டும். தவாப் மற்றும் சஃயை முடித்ததும் மினா சென்று 11-ஆம் இரவில் மினாவில் தங்குவது அவசியமாகும்.


துல் ஹஜ் பிறை 11-ஆம் நாள்


11-ஆம் நாள் ளுஹருடைய நேரம் வந்ததிலிருந்து சூரியன் மறைவதற்கு முன் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும். முதலில் சிறிய ஜம்ராவிற்கும், இரண்டாவது நடு ஜம்ராவிற்கும், மூன்றாவது பெரிய ஜம்ராவிற்கும் எறிய வேண்டும். 


முதலாவது ஜம்ராவிற்கு கல் எறிந்த பின் வலது பக்கம் சற்று முன்னால்; சென்று கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வது சுன்னத்தாகும். இரண்டாவது ஜம்ராவிற்கு கல் எறிந்த பின் இடது பக்கம் சற்று முன்னால் சென்று கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வது சுன்னத்தாகும். மூன்றாவது ஜம்ராவிற்க்குப்பின் துஆச் செய்வது சுன்னத்தல்ல.


துல் ஹஜ் பிறை 12-ஆம் நாள்


12-ஆம் இரவும் மினாவில் தங்குவது அவசியமாகும். 12-ஆம் நாளும் 11-ஆம் நாளைப் போன்றே மூன்று ஜம்ராக்களுக்கும் ளுஹர் தொழுகையின் நேரத்திற்குப் பின் கல் எறிய வேண்டும். 12-ஆம் நாளோடு ஹஜ்ஜுக் கடமையை முடித்துவிட்டுச் செல்ல விரும்புபவர்கள் சூரியன் மறைவதற்கு முன் மினா எல்லையை விட்டும் வெளியாகிவிட வேண்டும்.


 13-ஆம் நாளும் மினாவில் தங்க விரும்புபவர்கள் 13-ஆம் இரவும் மினாவில் தங்கிவிட்டு 13-ஆம் நாள் ளுஹர் நேரத்திற்க்குப் பின் மூன்று ஜம்ராக்களுக்கும் கல் எறிந்துவிட்டு மக்கா செல்ல வேண்டும். 10,11,12,13-ஆம் நாட்களில் மினாவில் ஒவ்வொரு தொழுகையையும் உரிய நேரத்தில் தொழ வேண்டும். நான்கு ரக்அத்துத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துக்களாக, சுருக்கித் தொழ வேண்டும். 


மாதவிடாய் மற்றும் பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்கள் தவாப் மற்றும் தொழுகையைத்தவிர ஹஜ்ஜுடைய மற்ற எல்லா அமல்களையும் செய்யலாம். சுத்தமானதும் விடுபட்ட தவாபை நிறைவேற்ற வேண்டும்.


தவாஃபுல் விதா


ஹஜ் கடமையை முடித்துவிட்டு தன்வீடு செல்ல விரும்புபவர்கள் கடைசியாகச் செய்யும் அமல் தவாபுல் விதாவாகும். தவாபுல் விதா என்பது கஃபத்துல்லாவிலிருந்து விடை பெற்றுச் செல்லும் தவாபாகும். அதுவே ஹஜ் செய்பவரின் கடைசி அமலாகும். 


தவாபுல் இஃபாலாவை முடித்த ஒரு பெண் மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தத்தின் காரணமாக தவாபுல் விதாவைச் செய்ய முடியாவிட்டால் அப்பெண்ணிற்கு மாத்திரம் தவாபுல் விதாவை விடுவதற்கு அனுமதி உண்டு. மற்ற எல்லா ஹாஜிகளும் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். மக்காவிலுள்ள எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசியாக தவாபுல் விதாவைச் செய்ய வேண்டும். 


தவாபுல் விதா முடிந்ததும் பயணத்தைத் தொடங்க வேண்டும். இத்துடன் ஹஜ் கடமை முடிவடைகின்றது. சிலர் தவாபுல் விதாவை செய்து விட்டு கல் எறிகின்றார்கள். 


இது முற்றிலும் தவறாகும். அவர் மீண்டும் தவாபுல் விதா செய்ய வேண்டும். இன்னும் சிலர் தவாபுல் விதாவை முடித்துவிட்டுச் செல்லும் போது கஃபாவை பார்த்துக் கொண்டே பின்னோக்கி வருகின்றார்கள், இதுவும் தவறாகும். அல்லாஹ் நம் அனைவரின் ஹஜ் கடமைகளையும் ஏற்று அன்று பிறந்த பாலகனைப் போன்று தன் தாயகம் திரும்ப நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக!


இஹ்ராம் அணிந்தவர் தவிர்க்க வேண்டியவைகள்


1-உடலிலுள்ள முடியையோ, நகங்களையோ எடுப்பது.
2-உடல், ஆடைகள், உணவு, குடிபானம் ஆகியவைகளில் மணம் பூசுவது.
3-பூமியிலுள்ள உயிர்ப்பிராணிகளைக் கொல்வது அல்லது வேட்டையாடுவது, விரட்டுவது.
4-இஹ்ராமிலும், இஹ்ராமில்லாத நிலையிலும் ஹரமின் எல்லைக்குள் உள்ள மரம் செடிகளை வெட்டுவது.
5-தவறி விடப்பட்ட பொருட்களை எடுப்பது. ஆனால் உரியவர்களிடம் கொடுக்க முடியுமாக இருந்தால் மட்டும் எடுக்கலாம்.
6-இஹ்ராம் அணிந்தவர் திருமணம் செய்யவோ, அல்லது முடித்து கொடுக்கவோ, தனக்கோ அல்லது பிறருக்கோ திருமணம் பேசவோ கூடாது. இன்னும் பெண்ணுடன் உடலுறவு கொள்வது, காம உணர்வோடு கலந்துரையாடுவதும் கூடாது.



ஹஜ்ஜுடைய நேரத்தில் உடலுறவு கொண்டால் அந்த ஹஜ்ஜு சேராது. அதற்கு பரிகாரமாக ஓர் குர்பானி கொடுப்பதுடன் அடுத்த வருடம் மீண்டும் ஹஜ்ஜு செய்ய வேண்டும்.


ஆண்கள் மீது மாத்திரம் விலக்கப்பட்டவைகள்


தலையை, துணி போன்றவைகளால் மறைப்பது, சட்டையையோ அல்லது தையல் போடப்பட்ட எந்தவித உடைகளையோ உடம்பில் எந்த இடத்திலாவது அணிவது.


பெண்கள் மீது மாத்திரம் விலக்கப்பட்டவைகள்
இஹ்ராமுடைய நிலையில் பெண்கள் கையுறை அணிவது, முகத்தை புர்காவால் மூடுவது கூடாது. ஆனால் அன்னிய ஆண்களுக்கு முன் இருக்கும் போது முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.



அர்கானுல் ஹஜ் (ஹஜ்ஜின் கடமைகள்)


இவைகளைச் செய்யாமல் ஹஜ்ஜுநிறைவேறாது.
1-நிய்யத் வைப்பதோடு இஹ்ராம் உடை அணிதல்.
2-அரஃபாவில் தங்குதல்.
3-தவாபுல் இஃபாலா செய்தல்.
4-ஸஃபா மர்வா மலைக்கு மத்தியில் ஹஜ்ஜுடைய ஸஃயி செய்தல்.



ஹஜ்ஜுடைய வாஜிபுகள் (அவசியமானவைகள்)
(1) நபி (ஸல்) அவர்கள் கூறிய எல்லையிலிருந்து இஹ்ராம் அணிதல்.
(2) சூரியன் மறையும் வரை அரஃபாவில் தங்கி இருத்தல்.
(3) 10-ஆம் இரவு முஸ்தலிஃபாவில் தங்குதல்.
(4) 10-ஆம் நாள் காலையில் பெரிய ஜம்ராவிற்கு ஏழு கற்களும், 11, 12-ஆம் நாட்கள் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழேழு கற்கள் வீதம் எறிதல், 13-ஆம் நாள் மினாவில் தங்குபவர்கள் 13-ஆம் நாளும் கல்லெறிய வேண்டும்.
(5) ஆண்கள் முடியை மழிப்பது அல்லது கத்தரிப்பது. பெண்கள் முடியின் நுனியில் விரலின் நுனியளவு கத்தரிப்பது.
(6) 11, 12-ஆம் இரவில் மினாவில் தங்குவது. (13-ஆம் நாள் விரும்பியவர்கள் மினாவில் தங்கலாம். 



இந்த இரவு தங்குவது அவசியமில்லை, ஆனால் சிறந்தது.)


(ஹஜ் செய்யும் போது) கெட்ட செயல்களில் ஈடுபடாமலும், தன் மனைவியோடு இல்லற உறவில் ஈடுபடாமலும் யார் ஹஜ் செய்கின்றாரோ அவர் அன்று பிறந்த பாலகரைப்போன்று (தன் தாயகம்) திரும்பிச் செல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


நன்றி-இஸ்லாம் கல்வி

0 கருத்துகள்:

இராஜகிரி பைத்துல்மால் ©2011 rajaghiribaithulmal.blogspot.com. All Rights Reserved. Hosted by Rajaghiribaithulmal is Designed and Developed by rajaghiri.online