உம்ராச் செய்யும் முறை
உம்ராச் செய்யும் முறை
உம்ரா செய்வதற்கு முன் குளித்து நறுமணம் பூசிக்கொண்டு இஹ்ராம் உடையை அணிந்த பின் “லப்பைக்க உம்ரத்தன்” என்று உரிய எல்லையிலிருந்து (மீக்காத்திலிருந்து) நிய்யத்து வைத்துக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட வேண்டும். (இலங்கை, இந்தியாவிலிருந்து வருபவர்களின் எல்லை யலம்லம்) இஹ்ராம் அணியும் எல்லைக்குள் வசிப்பவர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து நிய்யத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இஹ்ராம் உடை என்பது ஆண்களுக்கு இரண்டு தைக்கப்படாத துணிகளை அணிவதாகும். ஒரு துணியை உடுத்துக்கொள்வது, மற்ற துணியால் தன் மேனியை போர்த்திக் கொள்வது. பெண்களுக்கு தனி இஹ்ராம் உடை கிடையாது. அவர்கள் தங்களுடைய அங்கங்கள் மறையும் அளவுக்கு இஸ்லாம் அனுமதித்த எந்த ஆடையையும் அணிந்து கொள்ளலாம். மக்கா செல்லும் வரை தல்பியா சொல்லிக் கொண்டு செல்வது சுன்னத்தாகும்.
لَبَّيْكَ أَللَّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّبيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكُ، لاَشَرِيْكَ لَكَ.
லைப்பைக், அல்லாஹும்ம லைப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க், லாஷரீக்க லக்.ஹரத்திற்குள் நுழைவதற்கு முன் தல்பியாவை நிறுத்திக் கொண்டு வலது காலை முன் வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.
بِسْمِ اللهِ وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى رَسُوْلِ اللهِ أَللَّهُمَّ إفْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ.
பிஸ்மில்லாஹ், வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ், அல்லாஹும்மஃப்தஹ்லி அப்வாப ரஹ்மத்திக.ஹரத்திற்குள் நுழைந்ததும் முதலில் தவாபை ஆரம்பிக்க வேண்டும். தவாப் என்பது கஃபத்துல்லாவை ஏழு முறை பரிபூரணமாகச் சுற்றி வருவதற்கு சொல்லப்படும். தவாபுக்கு ஒளு அவசியமாகும். தவாபை ஆரம்பிப்பதற்கு முன் ஆண்கள் தங்களின் வலது தோள் புஜத்தை திறந்துவிட வேண்டும். அதாவது மேனியை போர்த்தியிருக்கும் துணியின் நடுப்பகுதியை வலது கக்கத்தின் கீழ் வைத்துக் கொண்டு அத்துணியின் இரு ஓரங்களையும் இடது தோள் மீது போட வேண்டும். அதன் பின் உம்ராவிற்குரிய தவாபை நிறைவேற்றுகின்றேன் என்ற எண்ணத்தோடு “ஹஜருல் அஸ்வத்” கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலையிலிருந்து உம்ராவின் தவாபை ஆரம்பிக்க வேண்டும். தவாபை ஆரம்பிக்கும் போது நான்கு முறைகளில் ஒன்றைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.
1- முடியுமாக இருந்தால் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது.
2- அதற்கு முடியாவிட்டால் கையினால் ஹஜருல் அஸ்வத் கல்லை தொட்டு கையை முத்தமிடுவது.
3- அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லை, தடிபோன்றதால் தொட்டு அதை முத்தமிடுவது.
4- அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக நின்று தன் வலது கையை அதன்பக்கம் உயர்த்திக்காட்டி “அல்லாஹுஅக்பர்” என்று சொல்வது. (இப்போது கையை முத்தமிடக்கூடாது).
இந்நான்கில் முடியுமான ஒன்றைச் செய்துவிட்டு தவாபை ஆரம்பிக்க வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டுமென்பதற்காக மற்றவர்களை இடித்துக் கொண்டு செல்வதை ஹாஜிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது சுன்னத்தாகும். மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பது ஹராமாகும். ஹராத்தைச் செய்து சுன்னத்தை நிறைவேற்ற வேண்டுமா? குறிப்பாக பெண்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கஃபத்துல்லாவோடு சேர்ந்து ஓர் அரைவட்டம் இருக்கின்றது, அதையும் சேர்த்து தவாப் செய்ய வேண்டும், காரணம் அதுவும் கஃபத்துல்லாவின் எல்லைதான். ருக்னுல் யமானியை, (ஹஜருல் அஸ்வத் கல் மூலைக்கு முன்னுள்ள மூலையை) தொட வாய்ப்புக் கிடைத்தால் தொட்டுக்கொள்ள வேண்டும். அதை முத்தமிடுவதோ அல்லது தொட்டு கையை முத்தமிடுவதோ அல்லது தொட வாய்ப்புக் கிடைக்காத நேரத்தில் அதன் பக்கம் கையை உயர்த்திக் காட்டி அல்லாஹுஅக்பர் என்று கூறுவதோ கூடாது. முந்திய மூன்று சுற்றுக்களிலும் “ரம்ல்” செய்வது சுன்னத்தாகும். “ரம்ல்” என்பது கால் எட்டுக்களை கிட்ட வைத்து வேகமாக நடப்பதற்குச் சொல்லப்படும். மற்ற நான்கு சுற்றுக்களையம் சாதாரணமான நடையில் நடப்பது. “ரம்ல்” செய்வது ஆண்களுக்கு மாத்திரம்தான் சுன்னத்தாகும். பெண்களுக்கல்ல.
ஒவ்வொரு சுற்றுக்களுக்கும் மத்தியில் குறிப்பிட்ட துஆக்கள் எதுவும் இல்லை, விரும்பிய துஆக்களைக் கேட்கலாம். தஸ்பீஹ், திக்ர் செய்தல், குர்ஆன் ஓதுதல் போன்றவைகளை, செய்து கொள்ளலாம். ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வத் கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலை வரையுள்ள இடத்தில்
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَاحَسَنَةًوَفِي اْلآخِرَةِ حَسَنَةً وَقِنَاعَذَابَ النَّارِ
“ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்”என்ற துஆவை ஓதுவது சுன்னத்தாகும். ஒவ்வொரு சுற்றை ஆரம்பிக்கும் போதும் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக வரும்போது தக்பீர் (அல்லாஹுஅக்பர் என்று) கூறுவது சுன்னத்தாகும். தவாப் செய்து முடிந்ததும் திறந்த வலது தோள்புஜத்தை மூடிக்கொள்ள வேண்டும். பின்பு மகாமுல் இப்ராஹிமுக்குப் பின் சென்று தவாபுடைய சுன்னத் இரு ரக்அத்துகளை தொழ வேண்டும். முந்திய ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் காஃபிரூனும் (குல்யாஅய்யுஹல் காஃபிரூன்) இரண்டாவது ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் இக்லாஸையும் (குல்ஹுவல்லாஹுஅஹது) ஓதுவது சுன்னத்தாகும். முகாமுல் இபுறாஹிமுக்குப்பின் இட நெருக்கடியாக இருந்தால் கிடைக்கும் இடத்தில் தொழுதுகொள்ளலாம்.
ஸஃயி
ஸஃயி என்பது ஸஃபா மர்வா மலைகளுக்கு மத்தியில் ஏழு சுற்றுக்கள் சுற்றுவதாகும். தவாப் முடிந்த பின் ஸஃயி செய்வதற்காக ஸஃபா மலைக்குச் செல்லவேண்டும். ஸஃபா மலையடிவாரத்தை அடைந்ததும்
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ
என்னும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிவிட்டு அல்லாஹ் எதைக்கொண்டு ஆரம்பித்தானோ அதைக் கொண்டு நாமும் ஆரம்பிப்போம் என்று சொல்லி ஸஃபா மலை மீது கஃபத்துல்லாவை பார்க்கும் அளவுக்கு ஏறி கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி பெருமைப்படுத்தி அவனைப்புகழ்ந்துلاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٍ، لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ اْلأَحْزَابَ وَحْدَهُ
லாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹ், லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர். லாஇலாஹா இல்லல்லாஹுவஹ்தஹ், அன்ஜஸ வஃதஹ், வநஸர அப்தஹ், வஹஸமல் அஹ்சாப வஹ்தஹ்.என்னும் திக்ருகளை ஓதி இடையே துஆக்களும் செய்தார்கள். இப்படி மூன்று தடவைகள் செய்தார்கள். (அபூதாவூத், நஸாயி, இப்னுமாஜா, தாரமி, தப்ரானி)
இந்த திக்ருகளை நாமும் ஓதி இவைகளுக்கு இடையே நமக்காக துஆக்கள் செய்வதும் சுன்னத்தாகும். இன்று சிலர் தொழுகைக்குத் தக்பீர் கூறுவது போல் இரு கைகளையும் கஃபத்துல்லாவின் பக்கம் உயர்த்திக் காட்டிவிட்டுச் செல்கின்றார்கள். இது சுன்னத்தான முறையல்ல. துஆவுக்கு மாத்திரமே கையை உயர்த்த வேண்டும். பின்பு ஸஃபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை முன்னோக்கிச் செல்ல வேண்டும், முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரைக்கும் சிறிது வேகமாக ஓட வேண்டும். அதன்பிறகு சாதாரணமாக நடக்க வேண்டும். இப்படி வேகமாக ஓடுவது ஆண்களுக்கு மட்டும்தான் பெண்களுக்கல்ல. மர்வா மலையை அடைந்ததும் அதன்மீது ஏறி கிப்லாவை முன்னோக்கி ஸஃபா மலையில் செய்தது போன்றே செய்வது சுன்னத்தாகும். இத்தோடு ஒரு சுற்று முடிவுறுகின்றது. பின்பு மர்வாவிலிருந்து ஸஃபா வரைக்கும் செல்வது, இங்கும் இரு பச்சை விளக்குகளுக்கு மத்தியில் சற்று வேகமாக ஓடுவது சுன்னத்தாகும். ஸஃபா மலையை அடைந்தால் இரண்டாவது சுற்று முடிவுறுகிறது. இப்படி ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும், மர்வாவில்தான் கடைசிச் சுற்று முடிவுறும். ஒவ்வொரு சுற்றுக்கும் இடையில் தனிப்பட்ட பிரார்த்தனைகள் இல்லை.
விரும்பிய பிரார்த்தனைகள், திக்ருகள், குர்ஆன் போன்றவைகளை ஓதலாம். இப்படிப்பட்ட சிறப்பான இடங்களில் மனமுருக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தியுங்கள். தவாப் மற்றும் ஸஃயியை கீழ் தளத்தில் செய்ய முடியாவிட்டால் (கூட்டமாக இருந்தால்) மேல்மாடியில் செய்து கொள்ளலாம்.
ஸஃயின் ஏழு சுற்றுக்களும் முடிவடைந்தபின் ஆண்கள் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும், இதுவே சிறந்த முறையாகும். மொட்டை அடிக்காதவர்கள் முடியை குறைத்துக் கொள்ள வேண்டும். முடியை குறைத்துக் கொள்வதென்பது இரண்டு அல்லது மூன்று இடங்களில் சில முடிகளை மட்டுமே கத்தரிப்பது என்பதல்ல, மாறாக தலையில் உள்ள எல்லா முடிகளும் கொஞ்ச அளவுக்காவது கத்தரிக்கப்பட வேண்டும், இதுவே நபிவழியாகும். பெண்கள் தங்களின் தலைமுடியின் நுனியில் விரல் நுனியளவுக்கு வெட்டிக் கொள்ள வேண்டும், இதுவே அவர்களுக்கு சுன்னத்தான முறையாகும், இத்துடன் உம்ராவின் செயல்கள் பரிபூரணமடைந்துவிட்டன. அல்லாஹ் நமது உம்ராவையும் மற்ற அமல்களையும் ஏற்றுக் கொள்வானாக.
குறிப்பு:- தவாஃபிலும் ஸஃயிலும் ஏழு சுற்றுக்களையும் ஒரே நேரத்தில் சுற்ற முடியாதவர்கள் இடையில் களைப்பாறிவிட்டு பின்பு மீதமுள்ள சுற்றுக்களைத் தொடருவதில் தவறில்லை.
நன்றி-இஸ்லாம் கல்வி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக